உலகம்

உக்ரேனின் சுமி நகரில் ரஷ்யப் படை தாக்குதல்; 4 பேர் மரணம், 28 பேர் காயம்

ரஷ்யப் படைகள் முன்னேறி வருவதால் உக்ரேனின் சுமி நகரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக உக்ரேன் தெரிவித்து உள்ளது.

சுமி என்பது உக்ரேனின் வடகிழக்கு வட்டாரம். உக்ரேனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வுக்கு வடக்கே அமைந்துள்ளது.

சுமி வட்டாரத்தின் நிர்வாக மையமான சுமி நகரில் ரஷ்யப் படைகள் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் நால்வர் உயிரிழந்ததாகவும் 28 பேர் காயமடைந்ததாகவும் உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் லெஸென்ஸ்கி டெலகிராம் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

தலைநகர் கீவ்வில் ரஷ்யப் படைகளுக்கு எதிராக அண்மைய நாள்களில் உக்ரேனிய துருப்புகள் கடுமையாகச் சண்டையிட்டன.

தொடர்ந்து நடைபெற்ற சண்டையில் ரஷ்யாவின் உத்திபூர்வ வெடிகுண்டு மையத்தையும் கிரிமியன் பாலத்தையும் உக்ரேனியப் படைகள் தாக்கின.

அங்கிருந்து சுமி நகரைக் குறி வைத்து ரஷ்யப் படைகள் நகர்ந்தன.

துருக்கியில் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 2) ரஷ்ய, உக்ரேனிய சமாதானப் பேச்சாளர்கள் ஒன்றுகூடிய நிலையில் அந்தத் தாக்குதல் சம்பவம் அரங்கேறி உள்ளது.

கீவ் நகரின் பெரியதொரு பகுதியை விட்டுக்கொடுத்து ராணுவ பலத்தை உக்ரேன் குறைத்தால் மட்டுமே போரில் இருந்து விலகப் போவதாக ரஷ்யா அந்தப் பேச்சுவார்த்தையின்போது தெரிவித்துவிட்டது.

இதற்கிடையே, அண்மைய நாள்களாக உக்ரேனின் பல்வேறு கிராமங்களைக் கைப்பற்றிய படையினர் ஆண்ட்ரிவ்கா நகரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக ரஷ்ய தற்காப்பு அமைச்சு கடந்த செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) கூறியது.

இந்நிலையில், பால்டிக் கடலில் நேட்டோ படைகள் மேற்கொள்ளும் பயிற்சி ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதற்கான ஆயத்த ஏற்பாடு என்று ரஷ்ய வெளியுறவு துணை அமைச்சர் அலெக்சாண்டர் குருஷ்கோ கூறியதாக டிஏஎஸ்எஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

நேட்டோ படைகள் இம்மாதம் பால்டிக் கடலில் ‘பால்டாப்ஸ்’ என்ற பெயரிலான தங்களது வருடாந்திர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.

அதனைக் குறிப்பிட்டு, “நேட்டோவின் ராணுவ நடவடிக்கையை ரஷ்ய ராணுவத்துடன் மோதுவதற்கான ஆயத்தப் பயிற்சியாக நாங்கள் கருதுகிறோம்,” என்று குருஷ்கோ கூறியதாக அந்தச் செய்தி நிறுவனம்   புதன்கிழமை (ஜூன் 4) தெரிவித்தது.

“ராணுவப் பயிற்சி, அது நடத்தப்படும் முறை, குவிக்கப்பட்டு இருக்கும் படைகள், தங்களுக்குள்ளேயே செய்துகொள்ளும் சண்டைப் பயிற்சி, பயிற்சியின் தரம், பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது ஓர் எதிரிக்கு எதிரான நடவடிக்கைகளே அவை என்று கருதத் தோன்றுகிறது,” என்று அவர் கூறியதாக டிஏஎஸ்எஸ் தெரிவித்து உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button