இலங்கை

யாழ். சித்துபாத்தி மயானத்தில் ஏழு மண்டை ஓடுகள், மனித புதைகுழியாக அறிவிக்கும் முயற்சியில் சட்டத்தரணிகள்

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கில், மனித புதைகுழி என சந்தேகிக்கப்படும் இடத்தில் நடந்த அகழ்வில் இதுவரை குறைந்தது ஏழு மனித மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் மே 15ஆம் திகதி அகழ்வுப் பணிகள் ஆரம்பமான, யாழ்ப்பாணம், செம்மணியில் அமைந்துள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில், ஜூன் 2ஆம் திகதி, மண்டை ஓடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அகழ்வினை மேற்பார்வையிடும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் குறிப்பிடுகின்றார்.

“இந்த அகழ்வு பணியின்போது 7 மனித மண்டையோடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் அது முழுமையாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை.”

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்து மயானங்களில் மனித எச்சங்கள் பொதுவாக புதைக்கப்படுவதில்லை என்பதால், பல மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழியை ஒரு வெகுஜன புதைகுழியாக அறிவிக்கக் கோரி சட்டத்தரணிகள் நீதிபதி ஏ. ஆனந்தராஜாவிடம் விண்ணப்பம் தாக்கல் செய்ய உள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிகின்றனர்.

யாழ்ப்பாணம், செம்மணியவில் உள்ள சித்துபாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்குரிய மனித புதைகுழியில், நிலம் அளவீட்டின் பின்னர், மே 15ஆம் தகதி, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜாவின் மேற்பார்வையின் கீழ் அகழ்வுப் பணிகள் முதலில் ஆரம்பிக்கப்பட்டன.

மே 16 அன்று அகழ்வு முடிந்ததும், குழியிலிருந்து பல மனித எலும்புகள் மீட்கப்பட்டன, மேலும் மழைக்காலம் காரணமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வு ஜூன் 2 திங்கள் அன்று மீண்டும் ஆரம்பமானது.

வடக்கில் கண்டுபிடிக்கப்பட்ட நான்காவது மனித புதைகுழியில் அமைந்துள்ள சித்துபாத்தி கல்லறையில், பெப்ரவரி 13, 2025 அன்று, கட்டுமானப் பணிகளின் போது ஒரு மனித எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. எலும்புத் துண்டுகளை பரிசோதிப்பதற்காக யாழ்ப்பாண சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனுடன் வருகைத்தந்த நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, அவை மனித எச்சங்களா என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்க பெப்ரவரி 20 அன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மேலும், மே 15 ஆம் திகதி அகழ்வுப் பணிகளை ஆரம்பிக்க அவர் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைய, மே 15 ஆம் திகதி, அகழ்வுக்கான முதற்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது, புதைகுழிக்குச் சென்ற காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) நிர்வாக பணிப்பாளர் சட்டத்தரணி ஜெனகநாதன் தற்பரன், காணாமல் போனவர்களுக்கும் மனித புதைகுழிக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் அகழ்வுக்கு உதவும் என ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

“பல்வேறு புதைகுழிகளுக்கும் காணாமல் போனவர்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில் நாங்கள் ஏற்கனவே இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம். கொக்குத்தொடுவாய், மன்னார் சதொச மற்றும் மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் உள்ளிட்ட புதைகுழிகளின் அகழ்வு மற்றும் கண்காணிப்பில் நாங்கள் இணைந்து பணியாற்றி வருகிறோம்.”

செம்மணி, சித்துபாத்தி இந்து மயானத்தில் உள்ள சந்தேகத்திற்கிடமான புதைகுழியில் முதல் கட்ட அகழ்வுப் பணிகளுக்கான நிதியை நீதி அமைச்சு ஏற்கனவே விடுவித்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

“இந்த புதைகுழியை அகழ்வு செய்வதற்கான நிதியை நீதி அமைச்சு வழங்குகிறது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) இதற்கான பரிந்துரைகளை வழங்கி வருகிறது. நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் ஒரு பாதீடு தயாரிக்கப்பட்டு நீதி அமைச்சுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதோடு முதல் கட்டத்திற்கான நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.”

வெகுஜன புதைகுழி அகழ்வுப் பணியின் இரண்டாம் கட்டத்தின், இரண்டாவது நாள், ஜூன் 3 ஆம் திகதியான இன்று நடைபெற்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *