புலம்பெயர்ந்தோர் நாடு திரும்ப தடைகள் இல்லை; பொதுமக்கள் பாதகாப்பு அமைச்சர் தெரிவிப்பு..!

அசாதாரண சூழல்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு எந்தவிதமான தடைகளும் ஏற்படுத்தப்படவில்லை என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜயபால கேசரிக்கு தெரிவித்தார்.
இந்தியாவிலுள்ள அகதி முகாமிலிருந்து கடந்த வியாழக்கிழமை நாடு திரும்பிய 75 வயதான நபரொருவர் பலாலி விமானநிலையத்தில் குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டார்.
அதனைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை (30) அவர் குற்றவியல் விசாரணை திணைக்கள அதிகாரிகளால் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஜுன் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அமைச்சர் ஆனந்த விஜயபாலவைத்தொடர்பு கொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பலாலி விமான நிலையத்தில் குடிவரவு, குடிகல்வு அதிகாரிகளால் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இலங்கையில் இருந்து வெளியேறும்போது முறைப்படியான சட்டங்களை பின்பற்றியிருக்கவில்லை. அதனைக் காரணம் காண்பித்தே அவர் மீண்டும் நாடு திரும்பும்போது கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இதனைத் தவிர அவர் கைது செய்யப்படுவதற்கு வேறு காரணங்கள் எதுவுமில்லை. அந்த வகையில் அவரை விடுவிப்பதற்குரிய வழிகாட்டல்களை குற்றவியல் விசாரணை திணைக்களத்துக்கு வழங்கியுள்ளேன்.
அந்த வகையில், நாட்டில் அசாதாரணச் சூழல் காணப்பட்ட போது அக்காலத்தில் ஏதோவொரு வகையில் வெளியேறியவர்கள் மீண்டும் நாடு திரும்பும்போது நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்காத வகையில் சட்டத்தில் திருத்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது.
அதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. அத்துடன் புலம்பெயர்ந்துள்ளவர்கள், அகதிகளாக வேறு நாடுகளில் தங்கியுள்ளவர்கள் எந்தவிதமான அச்சங்களுமின்றி நாடு திரும்ப முடியும்.
அவர்கள் தங்களது நிலங்களில் வாழுவதற்கான உரித்துக்களைக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களை நாம் ஆட்சியைப் பொறுப்பெடுத்த காலத்திலிருந்து பகிரங்கமாகவே அழைப்பு விடுத்து வருகின்றோம் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மீள நினைவுபடுத்திக்கொள்கின்றேன்.
ஆகவே, குறித்த விடயத்தினைப் பயன்படுத்தி அரசியல் ரீதியாக நன்மைகளை அடைவதற்காக அரசாங்கத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரங்களை ஏற்றுக்கொள்ள முடியாது .- என்றார்.
![]()