கவிதைகள்

அழுகை வாழ்வில் தொடர்கிறதே!… கவிதை…  ஜெயராமசர்மா

பிறக்கும் போதும் அழு கின்றான்
வளரும் போதும் அழு கின்றான்
வாழும் போதும் அழு கின்றான்
வீழும் போதும் அழு கின்றான்

ஆனந்தம் வந்தால் அழு கின்றான்
அவலம் வந்தாலும் அழு கின்றான்
அழுதால் அவலம் போகு மென்று
அழுதே மனிதன் இருக் கின்றான்

சொத்தை எண்ணி அழு கின்றான்
சுகத்தை எண்ணி அழு கின்றான்
மெத்தை வீட்டான் அழு கின்றான்
வீதி கிடப்பான் அழு கின்றான்

வெள்ளம் நிறைந்தால் அழு கின்றான்
வயல்கள் வரண்டால் அழு கின்றான்
விளைச்சல் குறைந்தால் அழு கின்றான்
விவசாயி என்றுமே அழு கின்றான்

இருப்பார் உலகில் அழு கின்றார்
இல்லார் உலகில் அழு கின்றார்
உழைப்பார் யாவரும் அழு கின்றார்
உண்மை அழுதால் உல கழியும்

திருமுறை படித்தால் அழுகை வரும்
திருமண வீட்டிலும் அழுகை வரும்
பிரிந்தவர் சேர்ந்தால் அழுகை வரும்
பிருந்துமே சென்றால் அழுகை வரும்

பட்டம் பெற்றும் பிள்ளை வந்தால்
பெற்றவர் மகிழ்வுடன் அழு திடுவார்
உற்றவர் ஒன்றாய் இணைந்து விட்டால்
உள்ளம் இருந்து அழுகை வரும்

அடியார் ஆண்டவன் கழல் பற்றி
அழுதே அவனிடம் வேண்டி நிற்பார்
அடியார் அழுகை கேட்ட வுடன்
ஆண்டவன் இரங்கி அருள் புரிவான்

ஆனந்த அழுகையும் வாழ்வில் உண்டு
அவல அழுகையும் வாழ்வில் உண்டு
அழுகை மனிதனை விட்டு விடா
அழுகையை மனிதனும் தொடரு கின்றான்

வானம் அழுதால் மழை ஆகும்
பூமி அழுதால் போர் ஆகும்
தானம் அழுதால் தயை தளரும்
தரணியில் அழுகை நீள் கிறதே

 

 

 

 

மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ் மொழிக்கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *