இலங்கை

பொலிஸார் முறைப்பாட்டை ஏற்க மறுத்த கடற்படை தாக்குதலின் காணொளி வெளியானது

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கை ஆக்கிரமித்துள்ள கடற்படையினரால் சித்திரவதைக்கு உள்ளானதாக செய்யப்பட்ட முறைப்பாட்டை ஏற்க மறுத்ததாக இலங்கை பொலிஸார் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

“பின்னர் 100 மீற்றருக்கு அப்பால் உள்ள காட்டுக்குள் அவர்களது உழவு இயந்திரத்தில் ஏற்றிச் சென்று கொலை செய்ய முயற்சித்தனர். பின்னர் பெரிய கல் ஒன்றை தூக்கி என்னுடைய பிட்ட பகுதியில் போட்டனர்.” என சிவில் உடையில் இருந்த கடற்படை உறுப்பினர்கள் தம்மை மிலேச்சத்தனமாக தாக்கியதாக, கிளிநொச்சி, சுண்டிக்குளம், கல்லாறு மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின் தெரிவிக்கின்றார்.

தாம் மே 23 மற்றும் 24ஆம் திகதிகளில் இருமுறை முறைப்பாடு செய்ய தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு சென்ற போதிலும், உயர் அதிகாரி இல்லை எனக் கூறி, அங்கிருந்த அதிகாரிகள் தம்முடைய முறைப்பாட்டை ஏற்கவில்லையென மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகத்தில் மே 26 செய்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

அங்கிருந்த மற்றொரு மீனவர் கடற்படையினர் அன்டன் ரொபினைத் தாக்கும் காணொளியை தனது கைத்தொலைபேசியில் பதிவு செய்துள்ளார்.

அந்த காணொளியில், சிங்களத்தில், “ஏய், துப்பாக்கியைச் எடு, நிறுத்து, நிறுத்து” என கத்துவதைக் கேட்கலாம்.

இந்த சூழ்நிலையில், மீனவத் தலைவர், தன்னை சித்திரவதை செய்தவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மே 20 அன்று, கிளிநொச்சி, சுண்டிக்குளம் கடற்கரையில், சக மீனவர்கள் கடற்படையினரால் தாக்கப்படுவதாக கிடைத்த தகவலை விசாரிக்கச் சென்றபோது, தம்மீது சிவில் உடையில் இருந்த கடற்படை உறுப்பினர் விதத்தை கல்லாறு மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின் இலங்கை மனித உரிகைள் ஆணைக்குழுவில் நேற்று முன்தினம் (மே 26) செய்த முறைப்பாட்டில் விபரித்துள்ளார்.

“இதுத் தொடர்பில் கடற்படை சிப்பாய் ஒருவரிடம் கதைத்துக்கொண்டிருந்தபோது பின்னால் இருந்து ஒரு தாக்கினார். அதனை தொலைபேசியில் பதிவு செய்ய முற்பட்டபோது அதனை தள்ளி விழுத்திவிட்டனர். எனது தலையை மண்ணுக்குள் புதைத்து, துப்பாக்கியால் இடுப்பு பகுதியில் தாக்கினர். முள்ளந்தண்டு பகுதியிலும் அடித்து, சித்திரவதைக்கு உட்படுத்தினர். சப்பாத்து காலில் மிதித்து கழுத்தை நெறித்தனர். அந்த இடத்தில் நின்ற 10 பேரும் தாக்கினர்.”

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் அளித்த முறைப்பாட்டில், அன்டன் ரொபின், அங்கு இருந்த சுமார் பத்து பேர் தன்னைத் தாக்கி, பின்னர் காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று கொலை செய்ய முயன்றதாகக் கூறியுள்ளார்.

மே 20 ஆம் திகதி இரவு 10 மணியளவில் தர்மபுரம் பொலிஸ் அதிகாரிகளால் அவர் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக, கல்லாறு மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அளித்த முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

“அங்கிருந்த என்னை கூட்டிச்சென்ற பொலிஸார் அங்கு வாக்குமூலம் எதுவும் பெறாது கைவிரல் அடையாளம் மற்றும் கையொப்பத்தையும் பெற்றனர். பின்னர் 1 மணியளவில் என்னை வீடு செல்ல அனுமதித்தனர்.”

தாக்குதல் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அன்றைய தினமே தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிக்சைக்காக சென்ற தம்மை வைத்தியசாலை நிர்வாகம் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும், மே 22ஆம் திகதி தான் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியதாகவும் கல்லாறு மீனவர் சங்கத் தலைவர் அன்டன் ரொபின் மேலும் குறிப்பிடுகின்றார்.

Video Player

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *