கட்டுரைகள்

வெளியிலிருந்து மட்டுமே உதவியை எதிர்பார்க்க முடியுமா?…  நியூசிலாந்து சிற்சபேசன் 

இலங்கைத் தீவிலே தமிழர்களின் அடிப்படை இருப்பு கேள்விக்கு உட்பட ஆரம்பித்து பல தசாப்தங்கள் கடந்துவிட்டன. அரசியல் தீர்வை தேடினார்கள். அறவழியில் முயற்சித்தனர். எதுவுமே கிடைக்கவில்லை. அதுவே இளைஞர்களைத் தூண்டியது. ஆயுதப்போராட்டமாக முகிழ்த்தது. முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் பதினாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், சனக்கூட்டத்திலே தொலைந்த குழந்தை போன்றே தமிழருடைய நிலை காணப்படுகின்றது.

தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுவது அநீதி என்பதுவும், முள்ளிவாய்க்காலில் ஏற்பட்டது மனிதப்பேரவலம் என்பதுவும் மறுக்கமுடியாத யதார்த்தங்களாகும்.

ஆனால், சர்வதேசத்திற்கு இவை புதுமையல்ல. ருவாண்டா, மாயன் பழங்குடி, காஸா, உக்ரேயின் என பேரவலங்கள் தொடர்கின்றன.

நீதி நியாயத்திற்காக மட்டுமே யாரும் குரல்கொடுப்பதில்லை. மாறாக, தம்முடைய சுயநலனை முன்நிறுத்தியே ஒவ்வொரு தேசமும் செயற்படுகின்றன.

உலகமகாயுத்தங்கள் படிப்பினையாகியது. அநீதிகளைத் தடுக்கும் முனைப்பு வலுவடைந்தது. அதனாலேயே, ஐக்கிய நாடுகள் சபை அமைக்கப்பட்டது.

ஆனால், ஐநா சபையின் நோக்கம் யதார்த்தத்தில் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.

நீதி நியாயம் போன்ற விடயங்களிலே ஐக்கிய நாடுகள் சபை காத்திரமாகச் செயற்பட முடிவதில்லை. நிலைபேறான மாற்றத்தை உருவாக்கக்கூடிய வல்லமை கிடைப்பதில்லை.

முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பிலும், மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலும் ஐநாவின் அன்றைய செயலாளர் நாயகம் பாங் கீ-முன் அதீதமான கவனத்தைக் கொண்டிருந்தவர். நீதிநிலைநாட்டப் படவேண்டுமென்பதில் திடசங்கற்பம் பூண்டிருந்தவர். அதனால், சனாதிபதி மகிந்த ராஜபக்சா விசாரணைக் குழுக்களை அமைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனாலும்கூட, விசாரணை முடிவுகளை ராஜபக்சா அரசு ஏற்கவில்லை.

ஆக, “சர்வதேசம்”, “ஐநா”, “மனிதவுரிமைப் பேரவை” போன்றவை அர்த்தமற்ற சொல்லாடல்களேயாகும். அழுகின்ற குழந்தைக்கு “பிராக்கு” காட்டுகின்ற அம்புலியாகும்.

இப்படியானதொரு சூழலிலே தமிழ் மக்கள் என்ன செய்யலாம் என்னும் கேள்வி எழுவது இயல்பானதாகும்.

ஏழு தசாப்தகால அரசியல் தோற்றுவிட்டது. அறவழிப் போராட்டம் தோற்றுவிட்டது. ஆயுதப்போராட்டம் தோற்றுவிட்டது. ஆகையால், “சர்வதேசம்” மட்டுமே உதவமுடியும் என்னும் மனநிலையையே தமிழ் சமூகத்தில் காணமுடிகின்றது.

“தன்கையே தனக்குதவி” என்பதே யதார்த்தமாகும்.

ஒரு சமூகமாகத் திரளுவதே அடிப்படையாகும். அதனூடாக மட்டுமே வலிமையைப் பெறமுடியும்.

வலிமை என்பது பௌதீக வலிமை மட்டுமல்ல. தோளோடுதோள் நிற்கக் கூடிய நேச சக்திகளுடைய அரவணைப்புக்கூட வலிமையாகும்.

தமிழர்களுடன் தோளோடுதோள் நிற்கக்கூடிய நேச சக்தி உண்டா என்பதே மிகப்பெரியமுள்ளிவாய்க்கால் நினைவு நாளில் வரலாற்றில் தடம் பதிக்கும் கனேடிய ஈழத்தமிழரின் ஆரம்பம் - கனடாமிரர் கேள்வியாகும்.

ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்டு எழுந்த தமிழ் சமூகத்தினால், அதற்கு இணையாக நேச சக்திகளை வளர்த்துக்கொள்ள முடியவில்லையோ என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இத்தனை துயரமான வரலாற்றுப் பாதையூடாகக் காலங்கள் கடந்திருந்தாலும், யதார்த்தத்துடன் சமரசம் செய்துகொள்ள தமிழ்ச்சமூகம் திணறுவதையும் காணமுடிகின்றது.

ஆகக்குறைந்தது, புலம்பெயர்தமிழ் சமூகத்தை நேச சக்தியாக வளர்த்துக்கொள்ள முடிந்திருக்கின்றதா என்னும் கேள்விக்கான பதில்கூட நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை.

புலம்பெயர்ந்த முதலாம் தலைமுறையினர் தாயகத்துடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டிருக்கின்றனர். பல்வேறு வகைகளிலே பொருளாதார உதவிகளைச் செய்கின்றனர். அஃது இயல்பாக நடைபெறுகின்றது. காரணம். முதலாம் தலைமுறையினருக்கு பிறந்த மண்ணுடன், கடந்துபோக முடியாத, பிணைப்பு உண்டு. ஆனால், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு அப்படியான பிணைப்பு கிடையாது. அஃது, வளர்த்துக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

அதற்கான முயற்சிகளாவது முன்னெடுக்கப்பட்டிருப்பதாகக் கருதமுடியவில்லை.

ஆகக்குறைந்தது, புலம்பெயர்ந்த தலைமுறையினர் தாயகத்தை உணர்வுபூர்வமாக நேசிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டிருப்பதாகக்கூட கருதமுடியவில்லை.

புலம்பெயர்ந்த தலைமுறை கடுமையாக உழைக்கின்றது. ஒவ்வொரு படியாகவே மேலேறி வருகின்றது.

புலம்பெயர்ந்த தலைமுறையினருடனான உறவை, தாயகம், படிப்படியாகவே வளர்த்துக் கொண்டிருக்கவேண்டும். பறவைகள் ஒரே நாளில் பறந்துவிடுவதில்லை. தொடர் பயிற்சி மூலமாகவே பறக்கப் பழகிக்கொள்கின்றன.

புலம்பெயர்ந்த தலைமுறை பல்வேறு துறைகளிலும் உச்சம் தொடுகின்றது. அதிலே, அரசியலிலே உச்சம் தொடுவோர் வெளியே தெரிகின்றனர். மற்றைய துறைகளிலே உச்சம் தொடுவோர் வெளியே அதிகம் தெரிவதில்லை.

அரசியலிலே உச்சம் தொடுவோர் – வெவ்வேறு நாடுகளிலே உள்ளாட்சி மன்றம், மாகாண சட்டசபை, நாடாளுமன்றம் போன்றவற்றிலே உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படுகின்றனர். அதற்கப்பால், மேயர். அமைச்சர் போன்ற பொறுப்பு வாய்ந்த பதவிநிலைகளைப் பெற்றுக் கொள்கின்றனர்.

இவ்வாறு உச்சம் தொடுவோரை சகதமிழர் எனக் கொண்டாடுவது இயல்பானதாகும்.

ஆனால், இவ்வாறாகத் தலைதூக்குகின்ற “புலம்பெயர்ந்த தலைமுறை” அரசியல்வாதிகள் “ஒன்றுசேர்ந்து“ தாயகத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் “தீர்வு” பெற்றுக்கொடுக்கவேண்டும் என்னும் எதிர்பார்ப்பு கொஞ்சம் “ஓவராகவே” தெரிகின்றது.

“புலம்பெயர்ந்த தலைமுறை” அரசியல்வாதிகள் தாயகத்துடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டிருகின்றனரா என்பது ஒவ்வொருவருமே கேட்டுக் கொள்ளவேண்டிய கேள்வியாகும்.

தம்முடைய தமிழ் வாக்காளர்களைக் கவர்வதற்காக, “முள்ளிவாய்க்கால்”, “தாயகத் தமிழ் மக்களுடைய உரிமை” என்றெல்லாம் “தட்டுத்தடுமாறிப்” பேசிவிடுகின்றனர். தீபமேற்றி அஞ்சலி செலுத்திவிடுகின்றனர்.

இவ்வாறாக தமது “தமிழ் அடையாளத்தைக்” காட்சிப்படுத்தியும் விடுகின்றனர். அதனால்முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தனித்தவிலுக்கு இடமில்லை - குழப்பும் தரப்புகளுக்கு காட்டமான அறிவித்தல் - ஐபிசி தமிழ் “தவறான” நம்பிக்கைகளையும் ஏற்படுத்திவிடுகின்றனர்.

“புலம்பெயர்ந்த தலைமுறை” அரசியல்வாதிகள் என்போர் தம்முடைய கட்சிக்கு கட்டுப்பட்டே செயற்பட முடியும். தம்முடைய தேசத்தின் அரசியல் வரையறைக்குள்ளேயே இயங்கமுடியும். தம்முடைய தேர்தல் தொகுதிகளை கவனித்துக்கொள்வது மட்டுமே அவசியமானதாகும். இல்லாவிடில், அடுத்த தேர்தலில் வெற்றிபெறமுடியாது.

ஆக, இலங்கை தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், வெளியிலிருந்து மட்டுமே உதவியை எதிர்பார்ப்பதென்பது போகாத ஊருக்கு தேடுகின்ற வழியேயாகும்.

Loading

One Comment

  1. உண்மை நிலையை நுணுக்கமாக ஆராய்ந்து கருத்துச் செறிவோடு எழுதியிருக்கிறீர்கள். அருமை!

    புலம்பெயர்த் தமிழர்களின் சிந்தனையும் தமிழ்நிலத் தமிழர்களுடையே எதிர்ப்பார்ப்பும் வெவ்வெறு திசைகளில் பயணிக்கத் தொடங்கிவிட்டன!

    ஆதலால், முதலாவதாக பல்வேறு காரணத்திற்காகப் பிரிந்து கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகள் வேற்றுமைகளைத் தள்ளி வைத்துவிட்டுத் தமிழர் நலனுக்காக ஒருமித்தச் சிந்தனையோடு ஒரு தலைமையை ஏற்று ஒன்றுபடவேண்டும்.

    அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *