முச்சந்தி

சஜித் தரப்பும் புறக்கணிப்பு; ரணிலின் முயற்சி தோல்வியடைகிறது!

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெறாத உள்ளூராட்சி மன்றங்களின் ஆட்சியை தக்க வைப்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல சுற்றுப் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்றுள்ள போதும் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை.

கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் கடந்த வியாழக்கிழமை மாலை இரண்டாவது சுற்று அரசியல் கலந்துரையாடல்கள் நடைபெற்ற போதும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னர் சந்தித்த பல கட்சிகள் பல இதில் பங்குபற்றவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். எனினும் முந்தைய கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி, சர்வஜன பலய மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன போன்ற முக்கிய கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் எதிர்வரும் நாட்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஒரு தொடர் கலந்துரையாடலை நடத்த கலந்துரையாடலில் பங்குபற்றிய பங்கேற்பாளர்கள் ஒருமித்த கருத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை பெற்றுக்கொள்ளாத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகளின் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்குவது தொடர்பில் இடம்பெறும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்திலுள்ள பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்ற போதும், உள்ளூராட்சி மன்றங்களின் தலைமைப் பதவியை பங்கிடுவதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுன் 2 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஆரம்பமாகவுள்ளமையால் அன்றைய தினம் பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்படாத உள்ளூராட்சி மன்றங்களில் வாக்கெடுப்பு மூலம் தலைமைப் பதவி தீர்மானிக்கப்படவுள்ளமையால் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button