இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் -10 … சங்கர சுப்பிரமணியன்


வராக அவதாரம் ஏன் பெரும்பாலும் வழிபாடுகளில் இடம் பெறவில்லை? அது சாக்கடையிலும் சகதியிலும் புரண்டு திரிவதாலா? மச்ச அவதாரத்திற்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை கொடுக்காவிட்டால் கூட பரவாயில்லை. அதை சட்டியில் போட்டு வறுத்தல்லவா சாப்பிடுகிறார்கள். சிலர் சாப்பிடவில்லை என்பதை மட்டும் கணக்கில் கொள்ளக்கூடாது.
பெரும்பாலான மக்கள் அவதாரமான மீனை சாப்பிடுவதில்லையா என்பதே கேள்வி.
ஏனென்றால் அது தீங்கிழைக்காத உயிரினம். வலைபோட்டு பிடித்து விடலாம். பிடித்தவுடன் இரண்டு தடவை துள்ளும் அப்புறம் மறுபிறவியெடுக்க மடிந்து விடும். ஏனென்றால் மனிதப்பிறவி எடுக்க இன்னும் எத்தனை பிறவியோ?
நாம் சாப்பிடும் ஒவ்வொரு மீனிலும் நம் பெயர் எழுதப் பட்டிருக்குமா? எப்படி நாம் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் நம் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ அப்படித்தான். அப்படியானால் கோதுமை சாப்பிடுபவர்களுக்கும் ஒவ்வொரு கோதுமையிலும் அவர்கள் பெயர் எழுதப் பட்டிருக்குமோ?
அடுத்ததாக பாற்கடலை கடையும்போது மந்திரமலைக்கு முட்டுக்கொடுத்த ஆமையையாவது விட்டு வைத்தோமா? ஆமை இட்லி ரொம்ப சிறந்ததாக கருதப்படுகிறதே. ஆமைக்கறி சாப்பிட்டதையே அரசியலாக்கும் அளவுக்கு ஆமைக்கறி சிறப்பைப் பெற்றுள்ளது.
மேலே உள்ள மூன்று அவதாரங்களை பகவான் எடுத்த அவதாரங்கள் ஆயிற்றே என்று சிறிதும் பயமோ பக்தியோ இன்றி மனிதர்கள் சாப்பிடவே ஆரம்பித்து விட்டார்கள். மனிதர்களை சும்மா குறை சொல்லவும் முடியாது. ஏனென்றால் இதெல்லால் எல்லாம் வல்ல இறைவன் செயல். அவன் செயலைத் தடுக்க அற்ப பிறவிகளான நம்மால் என்ன செய்ய முடியும்.
நான் ஒன்றும் சும்மா இல்லாததை சொல்லவில்லை இருப்பதைத்தான் சொல்கிறேன். வாமன அவதாரமும் திருமாலின் அவதாரமல்லவா? அந்த அவதாரத்தையும் பெரிதாக கும்பிடுவதும் இல்லை. போனால் போகட்டும் கும்பிட வேண்டாம். வாமன ஜெயந்தி என்றாவது கொண்டாடமல்லவா?
அதுவும் நடக்கவில்லை. தலைகீழாக நின்று பார்த்தாலும் மலையாளிகள் ஓணம் என்றே கொண்டாடுகிறார்கள். அவர்கள் மகாபலி சக்கரவர்த்தியை விட்டுக் கொடுக்கவுவில்லை.
தமிழரைப்போல் யார்யாரோ வந்து வரலாற்றை திரித்து எழுத இடம் கொடுக்கவுமில்லை. மேலும் தமிழாண்டு பிறப்பை தையா அல்லது சித்திரையா என்று பட்டிமன்றத் தலைப்பாக்கவுமில்லை.
ஆக மொத்தம் பத்து அவதாரங்களை எடுத்தாலும் பெரும்பாலும் நரசிம்ம அவதாரத்தையும் கிருஷ்ண அவதாரத்தையும் மற்றும் ராம அவதாரத்தையுமே வணங்குகிறார்கள். கல்கி அவதாரத்தை இனிமேல்தான் எடுக்கப்போகிறார். எடுத்த ஒன்பது அவதாரங்களில் பெரும்பான்மையை உறுதிசெய்ய ஐந்து அவதாரங்களைக் கூட நாம் வணங்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிகிறது? கடவுளே ஆனாலும் பெரும்பான்மையை நிலைநாட்டுவது என்பது கடினம்தான் என்பது புரிகிறதல்லவா? அடுத்து திருமால் எடுக்க வேண்டிய அவதாரம் கல்கி அவதாரம் மட்மே. கல்கி அவதாரத்தையும் சேர்த்து வணங்கினால் கூட கணக்கில் நான்கு அவதாரங்கள் மட்டுமே பெரும்பாலானோர் வணங்கக் கூடியதாக இருக்கும்.
கல்கி அவதாரத்தை திருமால் எடுக்கும்போது அட்டூழியங்கள் அதிகரித்து உலகே அழியும் நிலைக்கு வருமாம். அப்போது கொடுமைகளை அழித்து நன்மைகளை நிலைநாட்ட கல்கியாக பகவான் அவதாரம் எடுப்பாராம். எல்லாமே அழிவு நிலைக்கு வந்தபின் இருப்பவர்களை எல்லாம் அழித்து விட்டு யாரைக் காக்கப் போகிறார் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.
எல்லாம் அழிவு நிலைக்கு வந்தபின் அதை அப்படியே விட்டுவிட்டால்கூட அதுவாகவே அழிந்து போகுமே அப்படியிருக்க அழிந்து கொண்டிருப்பதை அழிப்பதில் என்ன நன்மை உண்டாகி விடப்போகிறது. எதுவென்றாலும் அழிவதற்கு முன் சென்று காப்பதுதான் உண்மையில் நன்மை பயக்கும். அழியவிட்டு அழிகின்ற தருவாயில் செல்வது எவ்வளவு தூரம் நன்மை பயக்கும் என்பது கேள்விக் குறியே.
கலியுகம் தோன்றிதும்தான் இந்த மாதிரி சீர்கேடுகள் நடக்குமாம். கலியுகம் என்பது நான்கு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் ஆண்டுகளாம். இது என்ன கணக்கோ? இதை கணித்த கணிதமேதை யாரோ? அதிலும் இப்போதுதான் கூட்டிக் கழித்துப் பார்த்ததில் ஐந்தாயிரம் ஆண்டுகள் முடிந்திருக்கிறதாம். அப்படி என்றால் இன்னும் கலியுகம் முடிய நான்கு லட்சத்து இருபத்து ஏழாயிரம் ஆண்டுகள் உள்ளன.
இன்னும் நூறு ஆண்டுகளில் என்ன ஆகுமோ? இன்னும் ஆயிரம் ஆண்டுகளில் என்னவெல்லாம் ஆகுமோ என்று எவருக்கும் தெரியாது. அதிலும் நாம் உயிரோடிருக்கும் வரை கண்டிப்பாக வரமாட்டார்? எப்படி அவ்வளவு ஆணித்தரமாக சொல்கிறேன் என்கிறீர்களா? கடந்த ஒன்பது அவதாரங்கள் எடுத்தபோதெல்லாம் அப்போது வாழ்ந்தவர்கள் மட்டுமே அந்த அவதாரங்களை பார்த்திருப்பார்கள். அதனால்தான் சொல்கிறேன்.
அப்படி கல்கி அவதாரம் எடுக்கும்போது அவருக்காக பத்து விதமான ஆயுதங்கள் தயாராக இருக்கின்றனவாம். இப்போது அவைகளைப் பார்ப்போமா? பார்கவா அஸ்திரம், வஜ்ராயுதம், நாராயணாஸ்திரம், பிரம்மாஸ்திரம், மூன்று பாணம், பிரம்மசிஸ்தா அஸ்திரம், பிரம்மாண்ட அஸ்திரம், பசுபதா அஸ்திரம், சுதர்சன சக்கரம், மற்றும் திரிசூலம்.
இவ்வளவு அஸ்திரங்களும் கல்கியின் அவதாரத்துக்காக காத்திருக்கின்றன. இந்த அஸ்திரங்கள் யாவும் மிகவும் பலம் வாய்ந்தவை. புராணங்களை நன்கு அறிந்தவர்களுக்கு இந்த ஆயுதங்களின் பலன்கள் நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் பத்தாவது அவதாரத்தை திருமால் எடுக்கும்போது மக்கள் அழிவின் விளிம்பில் இருப்பார்கள்.
இப்படியிருக்க பெரிய படையுடன் மோதுவதுபோல் இந்த பத்து ஆயதங்களும் இவருக்காக காத்திருக்கின்றனவாம். நிலைகுலைந்து அழிந்து கொண்டிருப்பவர்களை அழிப்பது மிகவும் எளிது. செத்த பாம்பை போன்றவர்களை அழிக்க
இவ்வளவு சக்தி வாய்ந்த ஆயுதங்களா? அப்படியே விட்டாலே அழிந்து விடுவார்கள் என்பது வரப்போகும் கல்கி அவதாரத்துக்கு தெரியாதா?
எப்படியோ எப்போ வருவார் என்று தெரியாமலே இன்னும் நான்கு லட்சத்து இருபத்தியேழாயிரம் ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதிலும் அவர் தென் இந்தியாவில் சம்பால என்ற இடத்தில் தான் தோன்றுவாராம். உலகில் மற்ற இடங்களில் அநியாயங்கள் நிகழ்ந்தால் வரமாட்டார் என எண்ணுகிறேன். இலங்கையில் ஒன்றரை லட்சம் பேர் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் முதியோர் என்ற வேறுபாடின்றி கொடூரமாக கொல்லப் பட்டார்கள்.
(தொடரும்…)
![]()