முகநூல்
ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே!

“ஆம்பிளை சேர்மாருக்குக் கிட்டப் போகாதே. கொப்பியை மேசையில் வைத்துவிட்டு, உடனே திரும்பி வந்துவிடு!
“இப்படி மகளிடம் சொல்லியிருக்கிறேன்” என்று ஒரு தாய் இன்று காலையில் அக்கறையோடு என்னிடம் கூறினார்.
அவர் பட்டப் படிப்பெல்லாம் படித்தவரல்ல; ஒரு சாதாரண பெண். மனதில் பயம்.
என் போன்றவர்கள் பாடசாலை சென்ற காலத்தில், “பிள்ளைபிடி காரரெல்லாம் திரிகிறாங்களாம்; கவனம்” என்று மட்டும்தான் எச்சரிக்கப்பட்டோம்.
Little Red Riding Hood என்ற பிள்ளைகளுக்கான பிரசித்தி பெற்ற கதை, “தெரியாதவர்களை நம்பாதே” என்ற புத்திமதியுடன் முடிகிறது.
மேலே சொல்லப்பட்ட தாயார், தனியொருவர் அல்லர். இவர் போல், ஆயிரக் கணக்கானோர் உளர்.
காலப்போக்கில் இவர்களின் பயம் தணிந்துவிடுமாயினும், இவர்களை இத்தகைய உளநிலைக்குக் கொண்டுவந்தவை, வாய்மொழி மூலமும், சமூக ஊடகங்கள் மூலமும் அடிபட்ட, உண்மையும், வதந்தியும் கலந்த செய்திகளே.
இவற்றுக்குப் பின்னணியில் உள்ள, ஒரு இளம் மாணவியின் தற்கொலை மிகக் கொடூரமானது. இந்த மரணத்துக்கான சரியான காரணங்களை அல்லது காரணகர்த்தாக்களைக் கண்டறிவதும், ஏற்ற நடவடிக்கை எடுப்பதும் சட்டத்தின் பொறுப்பாக இருக்கும் அதே வேளையில், இதற்கு இறுதிப் பொறுப்புக் கூற வேண்டியவர்கள், அரசாங்கமும் அதிகாரிகளுமே ஆவர்.
——
பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது ஒரு சிறிய விடயமல்ல. அண்மைக் காலங்களில், வளர்ச்சியடைந்த நாடுகளில் இதற்கு அதி தீவிரமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். தனது பிள்ளைகளைப் பாதுகாப்பதற்கு, ஒரு நாடு பணக்கார நாடாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. அக்கறை இருந்தால் போதும்..
ஆட்சியில் இருந்த அரசாங்கங்களின் அக்கறை எங்கே இருந்தது என்பது சொல்லித் தெரியவேண்டிய ஒன்றல்ல. இனத் துவேசத்திலும், சொந்தமாகப் பணம் குவிப்பதிலும் செலுத்திய அக்கறையில் ஒரு கடுகளவாவது, நாட்டின் எதிர்காலமாக இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பின் மீது செலுத்தப்பட்டதா?
1998ம் ஆண்டில் இலங்கையில் National Child Protection Authority என்ற பெயரில் ஒரு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. இந் நிறுவனத்துக்கு, 2023, 2024ம் ஆண்டுகளில் முறையே 872 மற்றும் 901 பாலியல் சம்பந்தமான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முறைப்பாடுகள் செய்ய 1929 என்றொரு தொலைபேசி எண்ணும் உண்டு (இது பற்றி, எந்தப் பெற்றோருக்காவது தெரியுமா?).
முறைப்பாடுகளுக்காகக் காத்திருப்பதோடும், குற்றம் விசாரிப்பதோடும் மட்டும் ஒரு அரசாங்கத்தின் கடமை முடிந்து விடாது. குற்றம் நடக்க முன்பே, அதைத் தடுப்பது, முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பனவே அதி முக்கியம்.
—–
பிள்ளைகளைப் பாதுகாப்பதற்காக ஒஸ்ரேலியா எடுத்துவரும் நடவடிக்கைகளுடன் எனக்கு நேரடி அனுபவம் உண்டு. ஒஸ்ரேலியாவில் ஒரு சமூகப் பாடசாலையின் அதிபராக 31 ஆண்டுகள் கடமையாற்றிய பின்னணியிலிருந்து, ஒஸ்ரேலியா பின்பற்றும் சில விடயங்களை உதாரணமாக மட்டும் இங்கே காட்ட விரும்புகிறேன்.
– ஒவ்வொரு பாடசாலையும் (சிறிதோ, பெரிதோ), பிள்ளைகளின் பாதுகாப்புக்குப் பொறுப்பாக ஒருவரை நியமிக்க வேண்டும்.
– ஒரு முழுமையான கொள்கைத் திட்டம் தயாரித்து, அமுல்படுத்த வேண்டும்.
– ஒவ்வொரு பாடசாலை நிர்வாகமும், தமது பிள்ளைகளுக்கு என்னென்ன ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது என முன்னரே ஊகித்து, அதற்கேற்ற எல்லாப் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் முன்கூட்டியே எடுக்க வேண்டும் (Risk Assessment).
– இந்த நடவடிக்கைகளை ஒவ்வொரு ஆண்டும் மீளாய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
– எல்லா விதமான கொடுமைப்படுத்தலில் (bullying) இருந்தும் பிள்ளைகள் பாதுகாக்கப்பட வேண்டும். (பலர் கூடியுள்ள இடத்தில், ஒரு பிள்ளையை மட்டும் வேண்டுமென்றே சுட்டிக்காட்டி, மனம் பாதிக்கத்தக்க ஒன்றைக் கூறுதல், கொடுமைப்படுத்தல் என்ற குற்றத்தின் கீழ் அடங்கும். Bullying என்பது இலங்கையில் சர்வ சாதாரணம் என்பதையும் அறிவோம். பல சந்தர்ப்பங்களில், புரியாமலே செய்யப்படுவதுமாகும்.)
– ஒரு சிறிய சம்பவம் நடந்தாலும், அது உடனே பதிவு செய்யப்பட வேண்டும்.
– பொருத்தமானவற்றை, அதிகாரிகளுக்கும், காவற் துறைக்கும் அறிவிக்க வேண்டும்.
– பிள்ளைகள் தமது பிரச்சினை எதுவாயினும், அதை இலகுவாகவும், பாதுகாப்பாகவும் முறையிட வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
– ஒவ்வொரு முறையீட்டையும் முக்கியமானதாகக் கருதி, ஏற்ற நடவடிக்கை எடுப்பதோடு, பதிலும் கொடுத்தாக வேண்டும்.
– கெடுதலுக்கு உள்ளாகியிருக்கும் ஒரு பிள்ளையை எப்படி இனம் காண்பது என்பது பற்றிய பயிற்சி எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
– ஒரு பிள்ளை பாடசாலைக்கு வெளியே (வீட்டில் உட்பட) கெடுதலுக்கு உள்ளாகியிருப்பது தெரிந்தால், உடனே ஏற்ற இடத்துக்கு முறைப்பாடு செய்ய வேண்டும்.
இப்படியே வரிசையாகக் கூறிக்கொண்டு போகலாம். எங்கள் பாடசாலையில், ஆசிரியர் பின்பற்ற வேண்டிய இத்தகைய பிள்ளை பாதுகாப்பு விதிமுறைகள் அறுபதுக்கு மேல் உள்ளன. இவற்றை நன்கு விளங்கிக்கொண்டோம் என்றும் ஏற்றுக்கொண்டோம் என்றும், ஒவ்வொரு ஆசிரியரும், நிர்வாக அங்கத்தவரும் ஒவ்வொரு ஆண்டும் கையொப்பமிட வேண்டும்.
இவை எல்லாம் முறையாக நடப்பதற்கு, பயிற்றப்பட்ட, சரியான தலைமையும் அவசியம்.
——-
வளர்ச்சியடைந்த நாடுகளில் இருப்பது போன்ற, பிள்ளைகள் பாதுகாப்புச் செயற் திட்டமொன்று இலங்கைக்கு அவசியமானது. இதற்கு அதிக பணம் தேவையில்லை. ஆட்பலம் தேவையெனில், அது இலங்கையில் போதுமானவரை உண்டு. பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கு நியமனம் கொடுக்க வேண்டுமென்பதற்காக, அவர்களை வேலை இல்லாத அலுவலகங்களில் அமர்த்திக் கதிரைகளுக்குச் சூடேற்றுவதை விட்டுவிட்டு, இப்படியான ஆக்கபூர்வமான திட்டங்களில் பயன்படுத்த முடியும்.
அரசாங்கப் பாடசாலைகளும், தனியார் பாடசாலைகளும் போக, பிள்ளைகளின் பாதுகாப்பு மிக அவசியமாக உறுதி செய்யப்பட வேண்டிய இடம், தனியார் கல்வி நிறுவனங்களாகும் (Tutoring Centers). தனிமனிதர் ‘ஆட்சியின்’ கீழ் இயங்கும் இத்தகைய நிறுவனங்களுக்கு, கண்டிப்பான அரச மேற்பார்வையும், விதிமுறைகளும் அவசியம்.
![]()