சைக்கிளை விட்டு சங்குடன் சேர ஆர்வம் காட்டும் தமிழரசு; தீவிர பேச்சுக்கள் தொடர்கிறது

உள்ளூராட்சி சபைகளில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து அதிகாரங்களை கைப்பற்றுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கொள்கையளவில் தீர்மானித்துள்ளதாக அறியமுடிகிறது.
எனினும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸுடனான நேரடி கலந்துரையாடல்களின் பின்னர் இறுதித் தீர்மானத்தை எடுப்பதென்றும் தீர்மானித்துள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் வடக்கு கிழக்கு தழுவியரீதியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. இதற்கு அடுத்ததாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி அதிக ஆசனங்களை கைப்பற்றியிருந்தது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் அதற்கடுத்த நிலையில் உள்ளது.
எனினும், யாழ்ப்பாணத்தின் சில உள்ளூராட்சி மன்றங்களில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கணிசமான ஆசனங்களை கைப்பற்றி, பிறிதொரு தரப்பின் ஆதரவுடன் ஆட்சியமைக்கலாமென்ற நிலையில் உள்ளது.
இலங்கை தமிழ் அரசு கட்சி அதிக உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை வகித்தாலும், அதற்கும் ஆட்சியமைக்க பிறிதொரு தரப்பின் ஆதரவு தேவை.
அனேக சபைகளில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட பிற கட்சிகளே தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுத்துள்ளன.
இந்த பின்னணியில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்களாக த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோரை தொடர்பு கொண்டு ஆதரவு கோரியிருந்தார்.
இதேநிலையில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனும், த.சித்தார்த்தன் மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார்.
இந்த சூழலில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் கட்சிகள் இணையவழியில் கலந்துரையாடல் நடத்தினார்கள். இதில், இலங்கை தமிழ் அரசுக் கட்சியுடன் இணைந்து ஆட்சியமைக்க பெரும்பாலானவர்கள் விருப்பம் வெளியிட்டதாக அறிய முடிகிறது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் யாழ்ப்பாணத்தில் சில சபைகளில் ஆதிக்கம் செலுத்தினாலும், யாழ்ப்பாணத்துக்கு வெளியில் உள்ள சபைகளில் அவர்கள் குறிப்பிடத்தக்க ஆசனங்களை பெறவில்லை. அகில இலங்கை தமிழ் காங்கிரஸிடன் கூட்டு வைத்தால் யாழ்ப்பாணத்துக்கு வெளியில் என்ன செய்வதென்ற யதார்த்தத்தின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.
எனினும், சில தினங்களுக்குள் எம்.ஏ.சுமந்திரனும், கஜேந்திரகுமாரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியினருடன் நேரடி பேச்சு நடத்தவுள்ளனர். இதன் பின்னர் இறுதி தீர்மானத்தை பகிரங்கப்படுத்துவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி தீர்மானித்துள்ளது.
![]()