முச்சந்தி

பாகிஸ்தானுக்குச் செல்லும் நீர் நிறுத்தம்!

பஹல்காம் தாக்குதலின் எதிரொலியாக ஜம்மு – காஷ்மீரில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் மற்றும் சலால் அணைகளில் இருந்து பாகிஸ்தானுக்கு வெளியேறும் நீர் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பிரபல சுற்றுலா தலத்தில் கடந்த 22ஆம் திகதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான The Resistance Front (TRF) நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் மூழும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்திய அரசு, 1960ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இரத்து செய்வதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீரில் ரம்பன் மாவட்டத்தில் செனாப் நதிக்கு குறுக்கேவுள்ள பாக்லிஹார் நீர்மின்சார அணையின் அனைத்து மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகவும், இதனால் செனாப் நதியின் வழித்தடம் நீரின்றி காய்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ரியாசி மாவட்டத்தில் சலால் அணையின் மதகுகளும் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு காஷ்மீரில் ஜீலம் நதிக்கு குறுக்கே உள்ள கிஷன்கங்கா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீரும் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளதுடன் அரசாங்கத்திற்கு தாம் பக்க பலமாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.

இதனிடையே, டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஜமியத்–உலமா–,-ஹிந்த்-ன் தலைவர் அர்ஷத் மதானி, சிந்து நதி நீர் நிறுத்தத்துக்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். ‘யாராவது தண்ணீரை நிறுத்தினால், அதை நிறுத்தட்டும். இந்த ஆறுகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கின்றன, அவற்றின் தண்ணீரை எங்கே கொண்டு செல்வீர்கள்? இது எளிதானது அல்ல.

வெறுப்பின் ஆட்சியாக அல்லாமல், அன்பின் ஆட்சியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம், நான் இந்த நாட்டில் வாழ்கிறேன். ஆனால் இங்கு ஊக்குவிக்கப்படும் விஷயங்கள் நாட்டிற்கு ஏற்றவை அல்ல என்பதை நான் அறிவேன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்துக்கு எதிராக நதிநீரை திருப்பிவிட இந்தியா மேற்கொள்ளும் எந்தவொரு முயற்சியும் போர் நடவடிக்கையாகவே கருதப்படும் என்று பாகிஸ்தான் அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button