முகநூல்

ஆஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் தமிழர்களுக்கு இலாபமா?

ஆஸ்திரேலிய தேர்தலில் தமிழர்கள் மாத்திரமல்ல – பொதுவாகவே குடியேறிகள் – சிறுபான்மை சமூகங்கள் அனைவரும் லேபர் கட்சியின் ஆட்சிதான் ஆதரவானது என்ற நம்பிக்கையோடு வாக்களிப்பது பாரம்பரியமான நடைமுறை. லேபர் அரசு அகதிகளுக்கு ஆதரவானது, குடியேறிகளின் குரலைச் செவிமடுக்கவல்லது போன்ற பல பால பாடங்கள் இதிலடங்கும்.
நடந்து முடிந்த தேர்தலில், லேபரின் இந்தப்பாரம்பரியமான போக்கினையே பாரதூரமான காரணமாக ஆஸ்திரேலியர்களிடம் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் வாக்குக் கேட்டன. அதாவது, “லேபர் கட்சி ஆட்சி செய்த கடந்த மூன்று ஆண்டுகளில், சுமார் 15 லட்சம் புதிய குடியேறிகள் ஆஸ்திரேலியாவுக்குள் நிரந்தர விஸாக்களோடு வந்திருக்கிறார்கள். இவர்களது வாக்குகளின் துணையோடுதான் லேபர் அடுத்த ஆட்சியைக் கைப்பற்றத் திட்டமிட்டுவருகிறது. மாத்திரமல்லாமல், இவர்களது வருகையினால், ஆஸ்திரேலியாவில் வீடுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது, வாடகை எகிறியுள்ளது, புதிய குடியேறிகளுக்கான அரசின் செலவுகளை நாட்டின் வரி செலுத்துபவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டியுள்ளது” – என்று பல குற்றச்சாட்டுக்களை பீற்றர் டட்டன் தலைமையிலான லிபரல் கட்சியினர் பட்டியலிட்டார்கள்.
ஆனால், லேபர் கட்சிக்கு எதிராக குற்றங்களை அடுக்குவதிலேயே காலத்தைக் கரைத்த லிபரல் கட்சியினர், தங்களது ஆட்சித் திட்டங்கள் குறித்து அதிகம் மக்களிடம் பேசவில்லை. பேசிய விடயங்களும் ஆஸ்திரேலியர்களை அதிகம் கவரவில்லை. ஆக, தேர்தல் முடிவுகள் லேபர் பக்கம் சாய்ந்துவிட்டன.
ஆனால், தற்போது லேபருக்குக் கிடைத்துள்ள ஏகோபித்த ஆதரவானது, ஆஸ்திரேலியாவிலுள்ள சிறுபான்மை மக்களைப் பொறுத்தவரை அவர்களது பேரம் பேசும் சக்தியை வலுவிழக்கச் செய்திருக்கிறது என்பதை ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.
இன்றிரவுவரை கிடைக்கப்பெற்றுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, லேபருக்கு 89 ஆசனங்கள். 151 உறுப்பினர்கள்கொண்ட மத்திய மக்களவை தொங்கு நாடாளுமன்றமாக அமையப்போகிறது என்றும் கிறீன் கட்சி மற்றும் சுயாதீன உறுப்பினர்களின் துணையோடுதான் லேபர் கட்சியின் ஆட்சி அமையப்போகிறது என்றும் கூறப்பட்ட ஊகங்கள் அனைத்தும் ஊதித்தள்ளப்பட்டு, யாருடைய தயவுமின்றி அனுரபோல ஆட்சிபீடம் ஏறியிருக்கிறார் அல்பனீஸி.
ஆக, அமையப்போகும் ஆட்சியில் மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் முடிவுகள் அனைத்தும் நல்லதாக அமையும் என்ற நம்பிக்கையோடு கை கட்டி வேடிக்கை பார்க்கவேண்டிய இடத்தில்தான் சிறுபான்மை சமூகங்கள் உள்ளனவே தவிர, யாரையும் அனுசரித்துப்போகவேண்டிய அழுத்தம் லேபருக்குத் தற்போது இல்லை.
தேர்தலில் லிபரல்களின் முகாமை துவம்ஸம் செய்தாகிவிட்டது. முதன்மை வேட்பாளர் உட்பட லிபரலின் கிட்டத்தட்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுதோல்வியடைந்திருக்கிறார்கள். லிபரல் கட்சியினருக்கு அடுத்த தலைவராக யாரை நியமிப்பது, தற்போதைய தோல்வியிலிருந்து கட்சியை எவ்வாறு நிமிர்த்துவது என்பது உட்பட எதற்குமே இதுவரைக்கும் லிபரல்களுக்கு விடை தெரியவில்லை. தற்போதுள்ள நிலையில், அடுத்த தேர்தலிலும் லேபர் கட்சியை சவாலுக்கு உட்படுத்தும்வகையில் லிபரல் எழுந்து நிற்குமா என்று தெரியவில்லை. அவ்வளவுதூரம் படுகுழியில் வீழ்ந்து கிடக்கிறது. இதேநிலைதான், கிறீன் கட்சிக்கும்.
லேபரின் இரண்டாவது ஆட்சிக்காலம், தன்னைத் தேசிய ரீதியில் பலம்வாய்ந்த கட்சியாகத் தக்கவைப்பதில்தான் அதிகம் கவனம் செலுத்தும் என்று நம்பலாம். விரக்தியில் கிடக்கும் வலதுசாரிகளை தனது ஆட்சித்தத்துவத்தினால் மெதுவாகத் தடவி, அவர்களைத் தங்களது வாக்குகளாக மாற்றிக்கொள்வதில் அதிக சிரத்தையெடுப்பார்கள்.
பூர்வீக குடியினரின் பிரதிநிதித்துவத்தை அரசமைப்பில் இணைத்துக்கொள்வதற்காக மேற்கொண்டு தோல்வியடைந்த சர்வஜன வாக்கெடுப்பினை மீண்டும் நடத்தி (Voice 2.0) வெற்றியீட்டுவதற்கு லேபர் தனது காய்களை நகர்த்தும். அது லேபரின் எதிர்காலத்திற்கு அத்தியாவசியமானதும் கூட.
ஆண்டாண்டு காலமாக லேபர் கட்சி பொருளாதார ரீதியில் மொக்குத்தனமாக நாட்டைக் கையாள்வதாகவும் அவர்களது அழுக்கை லிபரல்கள்தான் சுத்தம் செய்து சீர் செய்வதாகவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களிலிருந்து, தன்னை விடுவித்துக்கொள்வதற்கு இந்த ஆட்சிக்காலத்தை முழுமையாக லேபர் பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கலாம். முக்கியமாக, நாட்டின் கடன்கூடிய மாநிலமாகத் தலையிடி கொடுக்கின்ற விக்டோரியாவின் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு முழு முயற்சியையும் எடுப்பார்கள்.
தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற அதேவேளை, வேறு திசைகளிலிருந்து வேட்டியை உருவுகின்ற அறிவிப்புக்கள் மக்களை நோக்கி எந்நேரமும் சீறிக்கொண்டு வரலாம். சத்தம் சந்தடியில்லாமல், லேபர் லிபரலாக மாறிக் கலையாடிவிட்டு மீண்டும் லேபராக மாறும்போது அர்த்தநாரியாக சிரிக்கும் அம்பியாக அல்பனீஸியைக் காணலாம். அவர் நாட்டு மக்களுக்கு எரிச்சலாக மாறுகின்ற அறிகுறி தென்படத்தொடங்கியவுடன் –
தற்போதைய வெளிவிவகார அமைச்சரான பெனி வொங்கினை அடுத்த பிரதமர் வேட்பாளராக கொம்பு சீவித் தயார்படுத்தி தேர்தலில் இறக்குவதற்கு லேபர் கோட்டை முடிவெடுக்கும்.
பெனி வொங்கினை பிரதமர் வேட்பாளராக நிறுத்துவதன் மூலம் பல முகாம்களிலிருக்கும் வாக்குகளையும் லேபர் வாரி அள்ளிக்கொள்ளலாம். ஜூலியா கிலாரட்டுக்குப் பின்னர் ஒரு பெண் பிரதமரைக் காணாத ஆஸ்திரேலியாவுக்கு லேபர் தனது நட்சத்திர வேட்பாளராக பெனி வொங்ஙினை பரிசளிக்கலாம். அவர் ஒரு லெஸ்பியன் உறவில் உள்ளவர். ஆக, அந்த உறவிலுள்ளவருக்கான அதி உச்ச அங்கீகாரத்தை வழங்குவதன்மூலம், லேபர் தன்னை நவ ஆஸ்திரேலியாவின் முற்போக்கு சக்தியாக உறுதிப்படுத்திக்கொள்ளலாம். சீன – மலேசிய பின்னணி கொண்ட பெனி வொங்கிற்கு வழங்கும் அங்கீகாரம் இயல்பாகவே புதிய குடியேறிகளுக்கு லேபர் மீது மீண்டுமொரு போதையைக் கொண்டுவரும்.
தற்போது லேபருக்கு அமைந்துள்ள வெற்றி, அவர்களது அரசியல் வரலாற்றில் கிடைத்தற்கரிய பொற்காலம். இதனை நிரந்தரமாக்குவதற்கும் தங்களை ஆழமாக வேரூன்றுவதற்கும் அவர்கள் அனைத்தையும் செய்வார்கள். டட்டன் மற்றும் லிபரல்களின் தோல்வியிலிருந்து பல பாடங்களைக் கற்றுக்கொள்வார்கள்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *