முச்சந்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் டிரம்ப் எதிர்ப்பலை!… டிரம்புக்கு பதிலடி கொடுத்த கனடா!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

உலகளாவிய ரீதியில் டொனால்ட் டிரம்ப் அரசின் வர்த்தக வரிச் சுமைகளால் பாதிப்புக்குள்ளான நாடுகளில் தற்போது தேர்தல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கனடாவில் நடந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் அடாவடித்தனத்துக்கு எதிரான பலத்த அடியாக கணிப்பிடப்படுகிறது.

இவ்வாரம் அவுஸ்திரேலியாவில் மே 3 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தேர்தலை அறிவித்த பின்னர் கடந்த ஐந்து வாரங்களாக தீவிர பிரசாரம் நடைபெற்று வருகிறது.

இந்த இரு நாட்டு தேர்தல்களில் ஆளும் கட்சிகளுக்கான ஆதரவே அதிகரித்து வந்துள்ளது. நடந்து முடிந்த கனடாத் தேர்தலும், நடக்கப் போகும் அவுஸ்திரேலிய தேர்தலும் டிரம்ப் அரசின் வரிச்சுமை காரணமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் எதிர்ப்புக் குரலாகவே கருத இடமுண்டு.

ஆஸியில் ஆளும் கட்சி ஆதரவு :

2022ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி (Labour Party) அவுஸ்திரேலியாவில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. தற்போதைய நிலவரப்படி அந்தக் கட்சியின் செல்வாக்கு சிலகாலம் சரிந்திருந்தாலும், மீண்டும் முன்னிலையில் உள்ளது.
கோவிட் தொற்றுக் காலத்தின் பின்னர் அவுஸ்திரேலியாவில் வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள், அதிக பணவீக்கம் மற்றும் அதிக வட்டி விகிதங்கள் மற்றும் வீட்டுவசதி மற்றும் வாடகை போன்ற காரணங்களில் மக்கள் விரக்தியடைந்துள்ள சூழலில் இந்த பொதுத் தேர்தல் நடைபெறுகிறது.

இரண்டாவது தடவையாக மூன்று ஆண்டு பதவிக் காலத்தை எதிர்பார்க்கும் அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் (Anthony Albanese) தொழிலாளர் கட்சி, தற்போது பிரதிநிதிகள் சபையில் உள்ள 151 இடங்களில் 77 இடங்களைக் கொண்டுள்ளது.

அதேவேளை பெரும்பான்மையான வாக்காளர்கள் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் மீது சந்தேகம் கொண்டிருப்பதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.

எதிர்கட்சி செல்வாக்கு வீழ்ச்சி:

எதிர்கட்சியான லிபரல் கட்சியின் (Liberal Party) தலைவர் பீட்டர் டட்டனின் சில திட்டங்கள், அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் இடம்பெற்றிருக்கும் எலான் மாஸ்க்கின் அரசாங்க திறன் துறையின் செயல்பாடுகளோடு ஒத்துப் போவது போன்று இருப்பதாக மக்களிடையே எதிர்ப்பு கிளம்பியது. இதனால் இத் தேர்தலில் அவருக்கான ஆதரவு குறைந்துள்ளது என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அதாவது, அரசு ஊழியர்கள் முழு நேர வேலைக்கு அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும். பொதுத்துறை ஊழியர்கள் 10 ஆயிரம் பேர் வேலையிழக்கும் திட்டம் ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால், அதனை டட்டன் கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

கடந்த ஜனவரியில் டட்டனின் லிபரல் கட்சி கூட்டணி ஆறு வீதம் முன்னிலையில் இருந்தது. தற்போது ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரதமரின் ஆளும் கட்சி ஒன்பது வீதம் அதிகரித்து கருத்துக்கணிப்பில் முன்னிலை பெற்றுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் அவுஸ்திரேலிய தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும் தொழிட்கட்சிக்கே சாதகமாக அமையும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆயினும் இத்தேர்தலில் எதிர்க்கட்சியும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் இறுதிக்கட்ட நாட்களில் பெரும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் டிரம்ப் அரசின் அடாவடித்தனமான வர்த்தக வரிச் சுமைகளை எதிர்த்து போராட எதிர்க்கட்சிகள் முன்வர வேண்டுமெனவும் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

மார்க் கார்னி ஆவேசம்:

கனடா தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு பிரதமர் மார்க் கார்னி, கனடா மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அமெரிக்காவையும் கடுமையாக சாடியுள்ளார். கனடாவை சொந்தமாக்கும் நோக்கத்துடன் நம்மை உடைக்க டிரம்ப் முயற்சிக்கிறார். அது ஒருபோதும் நடக்காது என்று காரசாரமாக பேசியுள்ளார்.

கனடா நாடாளுமன்ற தேர்தல் நடந்து உடனடியாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. பிரதமருக்கான போட்டியில் லிப்ரல் கட்சியைச் சேர்ந்த மார்க் கார்னி, கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பியர் பொய்லிவ்ரே ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால் துவக்கம் முதலே மார்க் கார்னி கட்சி முன்னிலை வகித்தது.

கனடாவில் ஆட்சியைப் பிடிக்க மொத்தமுள்ள 343 இடங்களில் 172 இடங்களைப் பெற வேண்டும். ஆனால் ஆளும் லிபரல் கட்சி 169 இடங்களில் முன்னணியில் இருக்கும் நிலையில், கன்சர்வேடிவ் கட்சியினர் 144 இடங்களில் வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

கடும் போட்டிக்கு இடையே, தோல்வியை கன்சர்வேட்டிவ் கட்சி ஒப்புக்கொண்டுள்ளது. இதன்படி கனடா பிரதமராக மார்க் கார்னி மீண்டும் பதவியேற்பது உறுதியாகியுள்ளது. கனடா பிரதமர் தனது வெற்றியை அடுத்து நிகழ்த்திய உரையில், கனடாவிற்கு சவாலான நாட்கள் காத்திருப்பதாக கூறினார்.

நாம் சில தியாகங்களை செய்ய வேண்டியிருக்கும். அதேவேளையில், நமது தொழிலாளர்கள் மற்றும் வணிகங்களை ஆதரிப்பதன் மூலம் இந்த தியாகங்களை நம் பகிர்ந்து கொள்வோம். அமெரிக்கா செய்த துரோகத்தின் பாடங்களை ஒருபோதும் கனடா மறக்க கூடாது. இந்த வர்த்தக போரில் நாம் வெற்றி பெறுவோம் என்றும் தெரிவித்தார்.

ஈழத் தமிழர் வெற்றி:

இத் தேர்தலில் ஈழத் தமிழர்கள் ஹரி ஆனந்தசங்கரி, யுவனிதா நாதன்
வெற்றி பெற்றுள்ளனர். அதேபோல், சென்னையை பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தலில் 6 தமிழர்கள் போட்டியிட்ட நிலையில், 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தற்போது வெற்றி பெற்றுள்ள அனிதா ஆனந்த் கனடாவின் ஒக்வில் கிழக்கு தொகுதியிலும், கேரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரவ்ப் பார்க் தொகுதியிலும், பிக்கெர்லின் புருக்லிவ் தொகுதியில் யுவனிதா ஆகியோர் போட்டியிட்டு வென்றுள்ளனர்.

அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று லிபரல் கட்சி ஆட்சி அமைய உள்ள நிலையில், அனிதா ஆனந்த், ஹரி ஆனந்தசங்கரி ஆகியோருக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்பிற்கு எதிராக உலகம் :

இதே வேளை டிரம்பிற்கு எதிராக உலகமெங்கும் பல்வேறு காலகட்டங்களில் பல நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. வாசிங்டனில் அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளில் இருந்து அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளிலும் அவருக்கு எதிராக பல்வேறு கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

டிரம்ப் அரசு புலம் பெயர்ந்தோரை கையாள மிகப்பெரிய நாடு கடத்தல் திட்டத்தை தொடங்கியது. இது அமெரிக்காவில் மட்டுமன்றி, உலகின் பல்வேறு நாடுகளிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பலை:

டிரம்பின் நிலைப்பாட்டை எதிர்த்து ஐரோப்பிய நாடுகளிலும் மக்கள் பதாகைகளுடன் பேரணி நடத்தினர். டிரம்பின் குடியேற்ற கொள்கைகளை எதிர்த்து பாரிசில் பதாகைகளுடன் பேரணி நடத்தினர்.

அத்துடன் பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறும் உத்தரவில் டிரம்ப் கையெழுத்திட்டதற்கு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடியேற்று வாசிகள், பிறப்புரிமை, குடியுரிமை போன்றவற்றின் டிரம்பின் கொள்கைகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மெக்சிகோவில் டொனால்ட் டிரம்பின் குடியேற்று நடவடிக்கைக்கு எதிராக எல்லை வெளியில் பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் போது மெக்சிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடா என்று மாற்றியதற்கு அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

Loading

One Comment

  1. டிரம்ப் எபஆபடி ஒரு வல்லரசு நாட்டுக்குத் தலைவராக வந்தார் என்பது விளங்கவில்லை.காலத்துக்குக் காலம் சிஈல கோமாளிகளும நாட்டின் தலைவராகிவிடுவதற்கு மன்னர் காலத்திலிருந்து இன்றுவரை அத்தகு வரலாறும் உண்டு.

    கனடா நாட்டு மக்களை மட்டுமல்ல உலக நாடுகளே இவரை ஏளனமாக பார்தஇதது எதை வைத்து என்றால் கனடா நாட்டை அமெரிக்காவின் மாநிலமாக்கப் போகிறேன் என்று சொன்ன போது.கனடா நாட்டு மக்கள் மட்டுமல்ல தனிமனித சுதந்திரத்தை,நாடுகளின் இறைமையை,ஜனநாயக விழுமியங்களை பேணிப் பாதுகாக்கும் தலைவர்கள் அனைவருமே கொதிப்படைந்திருந்தார்கள்.சூ

    உண்மைய சொல்கிறேன் நான் இந்தச் செய்தியை அறிந்ததும் என்ன திமிர் இவருக்கு,மனநோயாளியாகிவிட்டாரோ என்று யோசித்தன்.

    வரியை ஒருபுறம் விட்:டாலும்.இதுதான் மோசமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button