இலங்கை

மேதினக் கூட்டங்கள் காலி முகத்திடலில் பெரும் பலத்தை வெளிப்படுத்திய தேசிய மக்கள் சக்தி

சர்வதேச தொழிலாளர் தினமான நேற்று வியாழக்கிழமை மேதினக் கூட்டத்தில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி தமது மக்கள் பலத்தை வெளிப்படுத்திய அதேவேளை எதிர்க்கட்சிகளும் தமது ஆதரவாளர்களை அணிதிரட்டி பலத்தை வெளிப்படுத்தின.

ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கொழும்பு காலிமுகத்திடலில் கூட்டத்தை நடத்தி தனது பலத்தை வெளிப்படுத்தியதுடன், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலவாக்கலையில் பெருமளவான மக்களுடன் பலத்தை வெளிப்படுத்தியது.

அதேபோன்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் முன்னிலை சோஷலிச கட்சியும் தமது ஆதரவாளர்களுடன் கூட்டங்களைள நடத்தின.

எவ்வாறாயினும் கடந்த வருடங்களை போன்று பிரதான அரசியல் கட்சிகள் பேரணிகளை நடத்தவில்லை.

வழமையாக ஜே.வி.பி பிரமாண்ட பேரணியுடன் மேதினக் கூட்டங்களை நடத்தி வந்த நிலையில், இம்முறை அரசாங்க கட்சியென்ற வகையில் மேதினக் கூட்டத்தை மட்டுமே நடத்தியது. ‘நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் சக்தி’ என்ற தொனிப்பொருளில் பிற்பகல் 3.30 மணயளவில் கொழும்பு காலிமுகத்திடலில் மேதினக் கூட்டத்தை ஆரம்பித்தது.

தேசிய மக்கள் சக்தியின் இந்தக் கூட்டத்தில் நடெங்கிலும் இருந்து பல்லாயிரக் கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்தனர். இதனால் காலிமுகத்திடல் பகுதி மக்களால் நிறைந்திருந்தது. இந்த கூட்டம் ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஜனாதிபதி வருகை தந்ததுடன், அங்கு அவர் உரையாற்றினார்.

இதேவேளை எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ‘கிராமங்களை வெல்லும் போராட்டத்தின் தொழிலாளர் சக்தி’ என்ற தொனிப்பொருளில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேதாச தலைமையில் தலவாக்கலை நகர சபை மைதானத்தில் மேதினக் கூட்டத்தை நடத்தியது. இதில் பழனி திகாம்பரம், வீ.இராதாகிருஷ்னண் உள்ளிட்ட. தமிழ் முற்போக்குக் கூட்டணியினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தில் மலையகத்தில் பல பாகங்களில் இருந்தும் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மேதினக் கூட்டம் ‘ஏமாற்றங்களை பொறுத்தது போதும் இனி எழுவோம்’ என்ற தொனிப்பொருளில் நுகேகொட ஆனந்த சமரகோன் திறந்த வெளியரங்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் நடைபெற்றது. இதில் கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். எனினும் கடந்த காலங்களை போன்று இம்முறை பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டிருக்கவில்லை.

எவ்வாறாயினும் முன்னிலை சோஷலிசக் கட்சி வழமைப் போன்று மேதின பேரணியையும், கூட்டத்தையும் நடத்தியது. ‘ஐஎம்எப் மரண பொறிக்கு இந்திய காலனியாக்கத்திற்கு எதிராக மக்கள் அதிகாரம்’ என்ற தொனிப்பொருளில் கிருலப்பனை அத்துலத் முதலி மைதானத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. இதற்கான பேரணி பிஆர்சி மைதானத்தில் இருந்து நடைபெற்றது. அரசாங்கத்திற்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கும் வகையில் இந்த பேரணி அமைந்திருந்தது.

அத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியின் மேதினக் கூட்டம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அந்தக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட கட்சி முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எவ்வாறாயினும் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பிரதான மேதினக் கூட்டங்களை ஏற்பாடு செய்யவில்லை. ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ளூராட்சித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுடன் கூட்டங்களை நடத்துமாறு தமது கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது. அதேபோன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சில இடங்களில் சிறியளவிலான கூட்டங்களை நடத்தியது.

இதேவேளை இலங்கை வங்கி ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் கொழும்பில் பல இடங்களில் பேரணிகளை நடத்தின.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *