இலங்கை

அரசுக்கு சிவப்பு எச்சரிக்கை விட மக்களே அணிதிரளுங்கள்

எதிர்வரும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு வாக்களித்து, அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.

தலவாக்கலையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்தார்.

இங்கு அவர் மேலும் பேசுகையில்,

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர்.

தற்போதைய அராசங்கம் பொய்களைக் கூறியே நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. பொய்களைக் கூறியே ஆட்சியையும் கைப்பற்றியது. பொதுத் தேர்தலிலும் அதனையே செய்தனர். அவர்கள் அன்று வழங்கிய வாக்குறுதிக்கமைய இன்று வரை மக்களுக்கு வளமான நாடோ அழகான நாடோ உருவாகவில்லை. இந்தத் தேர்தலுக்காக புதிய பொய்களை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றனர். மூன்றாவது முறையாகவும் மக்களை ஏமாற்றுவதற்கு முற்படும் இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

இந்த யுகத்தில் ஐக்கிய மக்கள் சக்தியே உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் வெற்ற பெறும் என அரசாங்கத்திடமும் ஜனாதிபதியிடமும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும். நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்.

நாட்டில் சட்டம், ஒழுங்கு அமுலில் இல்லை. பாதாளக்குழுக்கள் சட்டத்தைக் கையிலெடுத்துள்ளன. வீட்டுக்குள்ளும், நடுத்தெருவிலும் கொலைகள் இடம்பெறுகின்றன. நீதிமன்றத்துக்குள்கூட துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் நிலைமைக்காணப்படுகின்றது. காட்டாட்சியே நாட்டில் நிலவுகின்றது – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *