சிக்ஸ் பேக்’ விவகாரம்: சிவக்குமாரின் சர்ச்சைக் கருத்துக்கு விஷால் பதிலடி

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘ரெட்ரோ’. காதல் கலந்த ஆக்ஷன் படமாக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் இடம்பெற்ற இப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சூர்யாவின் தந்தையும், நடிகருமான சிவக்குமார் சிக்ஸ் பேக் குறித்து பேசிய விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த நிகழ்வில் சிவக்குமார் ‘என் பையன் சூர்யாவுக்கு முன்னாடி தமிழ்நாட்டில் சிக்ஸ் பேக் வைத்த நடிகர் யாராவது இருக்காங்களா?’ எனப் பெருமையாகப் பேசினார். இதனால், சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே சிக்ஸ் பேக் தொடர்பான விவாதம் எழுந்தது.
இப் பிரச்சனையில் நடிகர் விஷாலின் ரசிகர்கள், சத்யம் படத்திலேயே விஷால் சிக்ஸ் பேக் வைத்துவிட்டார் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த விஷால் ‘முதல்முறையாக தனுஷ்தான் பொல்லாதவன் படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்தார் எனவும், அதன் பின்னர், சத்யம் மற்றும் மதகஜராஜா திரைப்படங்களுக்காக தான் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டதாகவும், அதனை மக்கள் மறந்து விட்டார்கள் எனவும் தெரிவித்திருந்தார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த பொல்லாதவன் 2007ம் ஆண்டு வெளியானது. சூர்யா நடித்த ‘வாரணம் ஆயிரம்’ 2008 நவம்பரிலும், விஷாலின் சத்யம் 2008 ஓகஸ்டிலும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
![]()