மகுடம் மைக்கல் கோாலினின் – ஆண்கள் உலகம் சிறுகதை…. சோலையூர் குருபரன்

பழைய மொந்தையில் மாற்றுச் சிந்தனை , மறுவாசிப்பு.
‘பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவில’ என்பதற்கிணங்க அரைத்த மாவையே அரைக்காமல் “சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது…..’ எனப் பாரதி உரைப்பது பொல் மறுவாசிப்புடன் மாற்றுச் சிந்தனையாக பொருள் பொதிந்த வகையில் நவீன புனைகதை இலக்கியத்தில் மறுபிரவேசம் செய்திருப்பது சாலப் பொருத்தமானதாகும். கடந்த இரு தசாப்தங்களிலும் விரல்விட்டு எண்ணக்கூடிய வகையிலான புனைகதைகளே தமிழில் தோற்றம் பெற்றிருக்கின்றன.
பலர் மாக்சிசம், பின் நவினத்தவம் என்ற வித்துவச் செருக்கில் இன்றைய காலத்திருப்புக்கு உகப்பில்லாத வகையில் விளங்காத நடையில் எதையெதையொ எழுதிக் குவிக்கின்றனர். நாம் பயன்படுத்தும் மொழிநடை வித்துவச் செருக்கின்றிப் பாமரரும் விளங்கக்கூடிய வகையில் அமைந்திருத்தல் வேண்டும். இன்று பல நூல்கள் வாசிப்புக்கு உட்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். வாசிப்புப் பழக்கம் குறைந்து கொண்டு பொவதற்கான காரணங்களை அடுக்கிக் கொண்டு பொனால் இத்தகைய காரணமும் ஒன்றாக அமைவது புலப்படும்.
ஒரு சிறுகதையில் ஒருமைப்பாடு, கட்டுக் கோப்பு, பாத்திர வார்ப்பு, சிறுகதையின் நோக்கம், கதையின் ஆரம்பம், கதையின் ஓட்டம், முடிவு ஆகியன பொருத்தமுற அமைந்திருத்தல் வேண்டும். இவையே சிறுகதையின் முக்கிய அம்சங்களாகும். அத்தோடு சிறுகதையின் உருவம், உத்தி, உள்ளடக்கம், நடை ஆகியனவும் சிறப்புற அமைந்திருத்தல் வேண்டும். இவ்வாறு ஒழுங்கமைந்த சிறுகதைகளே சிறந்த படைப்பாக இருக்க முடியும்.
அந்த வகையில் சிறுகதை மஞ்சரியின் (2024) 50 வது சிறப்பிதழில் 29 வது சிறுகதையாக மகுடம் ஆசிரியர் மைக்கல் கோலினின் ‘ஆண்கள் உலகம்’ கதையும் வெளிவந்திருந்தது. இக்கதை பழம்பெரும் இலக்கியக் கதைகளின் புதிய சிந்தனையின் மறு வாசிப்பாக வெளிவந்திருந்தது. உண்மையில் இது ஒரு மாற்றுச் சிந்தனை என்றே கூறலாம். ஆக்க இலக்கியத் துறையில் மகுடம் ஆசிரியருக்கிருந்த அனுபவம், ஆற்றல், முதிர்ச்சி, பரந்த சிந்தனை ஆகியவற்றை வெளிப்படுத்துவதாக இக்கதை அமைகின்றது.
இராமாயணம், மகாபாரதம் ஆகியன தமிழ்நாட்டில் இடம்பெற்ற தமிழ்க்கதை என்பது பெரும்பாலானேருக்குத் தெரியாது. செவிவழியாகக் காலம் காலமாகத் தமிழ்நாட்டில் பேசப்பட்டு வந்த பகதைகளே இவைகள். இக்கதைகளை கி.மு ஆம் நூற்றாண்டின் பின்னர் இருந்து பௌத்த, ஆரிய, பிராமணிய, திராவிட மேலாதிக்கவாதிக்கவாதிகள் தமதாக்கிக் கொண்டனர். இவர்கள் எவருமே பெண்களை முதன்மைப்படுத்தாதவர்கள்.
பண்டைய தமிழரின் தமிழரின் நாகரிகங்கள் நிலவிய குமரிக் கண்டம், சிந்துவெளி, கங்கைக்கரை, கீழடி நாகரிகங்களிலும் அதற்குப் பின்னரான சங்க காலத்திலும் அறியப்பட்ட சான்றுகள், ஆதாரங்கள், இலக்கியங்களிலும் பெண் முன்னுரிமைப்படுத்தப் பட்டிருக்கின்றாள். அங்கு பெரும்பாலும் இயற்கையும், பெண் தெய்வங்களுமே போற்றப்பட்டிருக்கின்றன. சாதி வேறுபாடு, பெண் அடிமைத்தனம் என்பன காணப்பட்டமைக்கான எந்தச் சான்றுகளும் கிடைக்கப்பெறவில்லை. பிற்பட்ட காலத்துக்குரியனவான சங்க இலக்கியத்திலும் தவிர்க்கப்பட்டே இருக்கின்றன. அவ்வாறே பூர்வ இதிகாச புராணங்களிலும் இருந்திருக்க வேண்டும்.
ஈரானிலும் ஸ்ரெப்ஸ் புல்வெளிகளில் இருந்தும், பின்னர் ஐரோப்பாவில் இருந்து கைபர் கணவாய் ஊடாக இந்தியாவுக்குள் பிரவேசித்த ஆரியர்கள் தமிழ்நாட்டில் பேணப்பட்டு வந்த தமிழர் நாகரிகத்தை அழித்துச் சிதைத்ததோடு, தமிழ் தெய்வங்களையும் பாரம்பரிய தமிழ் இலக்கியங்களையும் தமதாக்கிக் கொண்டனர். ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழையும்போது வழிபாட்டு முறைகளையோ, இலக்கியங்களையோ, தொழினுட்ப முறைகளையோ கொண்டுவரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆரியத்துக்கும் சமஸ்கிருதத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அதனை மூலமொழி என நிறுவியதோடு தமிழ் மொழியில் இலக்கியங்கள் எதுவும் தோன்றாது தடுத்தும் வந்தனர். அதனால் தமிழனுக்கு என்றொரு தனியான வரலாறு இன்றுவரை எழுதப்படவில்லை. ஆரிய, பிராமண திராவிடச் செல்வாக்கு அதனை இன்றுவரை தடுத்துக் கொண்டே வருகின்றன. கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வடநாட்டை ஆட்சி செய்த கார்வேலரைக் கொண்டு அதிகும்பா கல்வெட்டில் ஆரிய, பிராமணர்கள் ஆதி மொழியான தமிழைத் திட்டமிட்டுத் திராவிட மொழிக் குடுபத்தில் ஒரு மொழியாகத் தமிழை இணைத்துக் கொண்டனர். இது அவர்கள் சமஸ்கிருதத்துக்கு முதன்மை இடம் கொடுக்க எடுத்த முயற்சியாக்க கொள்ளப்பட்டது.
தமிழில் செவிவழியாகப் பேசப்பட்டு வந்த இராமாயணம் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டில் புத்தரின் ஆலோசனைக்கு இணங்க ஹெல மொழியில் முதன்முதல் எழுதப்பட்டது. இவ்விராமாயணம் பெண் சமத்துவமின்மைக்கு முன்னுரிமை அளித்திருந்தது. புத்தர் பெண் துறவறத்தை அங்கீகரிக்கவில்லை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோகச் சக்கரவர்தியின் ஆட்சிக் காலத்தில் பெண் துறவறத்தை அங்கீகரித்துத் தனது தங்கை சங்கமித்தையைத் துறவறம் பூணச் செய்கின்றார். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வான்மீகி இராமாயணத்தில் பெண்ணுக்கு ஓரளவு சமத்துவம் கொடுக்கப்படுகிறது.

புத்தர் காலத்தில் ஆரம்பித்த பெண் அடக்குமுறை தமிழ் நாட்டில் சங்கமருவிய காலத்தில் உச்சம்பெற்று நாயக்கர் காலத்தில் விஸ்வரூபம் பெற்றது. கி.மு. மூன்றாம நூற்றாண்டில் இருந்து செவி வழியாகப் பேணப்பட்டு வந்த புராண, இதிகாசங்கன் யாவும் வடமொழியில் தமக்குச் சார்பாக ஆரிய பிராமணர்களால் எழுதப்பட்டன. அன்றிலிருந்து ஆரியர்கள் பூர்வீகமாக ஈரான், ஸ்ரெப்ஸ் புல்வெளிகளில் பின்பற்றிவந்த பெண் அடிமைத்தனம், சாதி, சமய, குலம், கோத்திர முறைகளும் செல்வாக்குப் பெறலாயின. தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் களப்பிலர் ஆட்சிக் காலத்தில் இருந்து முக்கியத்துவம் பெற ஆரம்பித்தன. இக்காலத்தில் திருவள்ளுவரும், இளங்கோவடிகளும் திருக்குறள், சிலப்பதிகாரம் ஆகியவற்றின் ஊடாக பெண் விடுதலை பற்றிப் பேசினர்.
பெண் அடக்குமுறை, சமத்துவமின்மை தமிழ் சமூகத்தில் ஆரம்ப காலத்தில் இல்லாத ஒன்றினை ஆரிய, பிராமணர்கள் திட்டமிட்டுத் இலக்கியங்களில் புகுத்தியமையினால் புராண, இதிகாசங்களிலும் அதற்குப் பின் தோன்றிய தமிழ் இலக்கியங்களிலும் பெண் அடக்குமுறை பின்பற்றப்பட்டன.
மைக்கல் கோலின் ஆண்கள் உலகம் என்ற சிறுகதையின் ஊடாக இராமாயணத்திலும் ஆசியஜோதியிலும் பேசப்பட்டிருக்கும் பெண் சமத்துவமின்மையினைப் புதிய கோணத்தில், புதிய பார்வையில், மறு வாசிப்புக்கு உட்படுத்தி சீதை, சூர்ப்பனகை, அகலிகை, யசோதரா என்ற பாத்திரங்களின் ஊடாக மிக ஆணித்தரமாகக் கதையைச் சித்திரித்திருக்கின்றார். அக்கதை மாந்தர்களின் ஊடாக ஆண்வர்கத்தினரால் தமக்கு இழைக்கப்பட்ட அனியாயங்கள், அடக்கு முறைகள், தமது பக்க நியாயங்கள் என்பவற்றைக் கச்சிதமாக வெளிப்படுத்தி வாசகரிடத்தில் ஒரு நெருடலையும் மனப்பதிவினையும் ஏற்படுத்தி இருக்கின்றார்.
ஓர் எழுத்தாளன் தமது உள்ளக் கிடக்கையை, மனவோட்டத்தை ஒழிவு மறைவின்றி அறிந்த கதைகளில் நடமாடிய கதை மாந்தர்களுக்கூடாக சிலேடையாகவும், நேர்மையாகவும் புதிய கண்ணோட்டத்தில் வெளிப்படுத்தும் போது அவரின் படைப்புக்கள் பிரபல்யம் பெறுகின்றன. அந்த வகையில் மைக்கல் கோலின் ஒரு மாற்றுச் சிந்தனையாளராக இனங்காணப்படுகின்றார்.
கதையில் கையாளப்பட்டிருக்கின்ற உத்தி, களவர்ணனை, பாத்திர அறிமுக வர்ணனை, பாத்திர உரையாடல்கள் என்பன நீண்டு போகாமல் அவற்றில் கவனமெடுத்துக் காத்திரமான படைப்பொன்றை எமக்குத் தந்திருக்கின்றார். இது அவரின் நீண்டகால ஆக்க இலக்கியப் பரீச்சயத்தால் வந்த வெளிப்பாடு என்றே கூறலாம்.
சீதை, சூர்ப்பனகை, அகலிகை, புத்தரின் மனைவி யசோதரா ஆகிய நால்வரும் ஆண் வர்க்கத்தால் பாதிக்கப்பட்டு ஒற்றையடிக் காட்டுப் பாதையில் விரக்தியின் விளிம்பில் இணைகின்றனர். அவ்வேளையில் சீதா கோபமடைந்து, நிலத்தைக் காலால் உதைத்துப் பிளந்து “அம்மா இந்த பூமி ஆண்களின் பூமி. இங்கு வாழ எமக்கு விருப்பமில்லை. என்னையும் எனது தோழிகளையும் நீயே அழைத்துக் கொள். நாம் உம்முடனேயே வருகிறோம்”
“வேண்டாம் சீதா. உங்கள் பயணம் இன்னும் முடியவில்லை. உங்களுக்குப் பின்னே நூறு, ஆயிரம் கோடியாகப் பெண்கள் வருவார்கள். உங்கள் பயணம் தொடரட்டும். எப்போது நிங்கள் திரும்பி நடக்கத் தொடங்குகிறீர்களோ அப்போது உலகம் பெண்கள் உலகமாக மாறும். அதுவும் விரைவில் நடக்கும்” எனப் பூமித்தாய் கூறுவது போலான நிதர்சன உண்மையை இராமாயணக் கதாபாத்திரங்கள் ஊடாக இன்னும் பயணம் முடியவில்லை என்பதைத் தெளிவுபடக் கூறுவது வரவேற்கத் தக்கது.
‘அந்த ஒற்றையடிப் பாதையின் நடுவே இப்போது நான்கு பெண்களின் பயணம் தொடர்ந்தது” எனக் கதையை நிறைவு செய்கின்றார். உண்மையில் இது ஓரு மறு வாசிப்பு என்றே கூறலாம். நல்லதொரு சிறுகதையை வாசித்து நுகர்ந்த திருப்தியோடு கதை ஆசிரியருக்குப் பாராட்டுக்களைச் சமர்பணமாக்குகிறேன்.
![]()