இலங்கை அரசியல் போக்கில் மாற்றம் சாத்தியமா?; நியூசிலாந்து சிற்சபேசன்

தேசிய மக்கள் சக்தி தேர்தல் வெற்றிகளைக் குவித்தபோது நம்பிக்கைகள் திடீரென வானைப் பிளந்தன. தாயகத்தில் மட்டுமன்றி, புலம்பெயர் தமிழரிடமும் ஒருவித குதூகலம் தலைதூக்கியது.
தேர்தல் வெற்றிகளைத் தொடர்ந்து, ஆரம்பநாட்களிலேயே, எதிர்மறையான சமிக்ஞைகள்
இலைமறைகாயாகத் தெரிந்தன. ஜேவிபியின் செயலாளர் உதிர்த்த “ஞானமொழி” கவனிப்பை ஈர்த்தது. “யானை வரும் பின்னே – மணி ஓசை வரும் முன்னே” என்னும் எண்ணத்தையே அஃது ஏற்படுத்தியது.
பாராளுமன்றத் தேர்தலிலே, தேசிய மக்கள் சக்திக்கு, தமிழ் மக்கள் வெளிப்படுத்திய நல்லெண்ண சமிக்ஞை கடலில் கொட்டிய உப்பாகியது. “நீங்கள் வேற, நாங்கள் வேற” என்பதே தமிழ்மக்களுக்குச் சொல்லப்பட்ட பதிலாகும். வடக்கிலிருந்து தெரிவாகிய அரசதரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் “செல்லாக்காசு” என்பது அம்பலமாகியது. வடக்கிற்கான “மேய்ப்பர்”கூட வெளியேயிருந்து அனுப்பப்பட்டார். அதுவும் ஒரு காபினெட் அமைச்சரின் வேலை யாழ்ப்பாணத்தைப் “பிராக்காட்டுவது” என்னும் அளவுக்குச் சுருக்கப்பட்டது. இவ்வாறான செயற்பாடுகளை, முன்னைய ஆட்சியாளர்களும் செய்தனர். ஆனால், கொள்கை, கோட்பாடு என்றெல்லாம் மேடைக்குமேடை பேசுகின்ற தரப்பின் “விறுத்தம்” இவ்வளவுதான் என்பதே இங்கு கவனிப்பைப் பெறுகின்றது.
அதனை இந்தக்கட்டுரையாளர் தொடர்ச்சியாகப் பதிவுசெய்துள்ளார். முத்தாய்ப்பாக, “மாற்றத்தின் ஆரம்பமாகலாம் என்னும் நப்பாசை பொய்க்கிறதா?” என்னும் கேள்வியை எழுப்பியபோது, “புதிய அரசுக்கு இன்னும் காலம்தேவை” என்னும் தொனியை இராஜதந்திரியொருவர் வெளிப்படுத்தினார்.
ஆனால், நடக்கும் யாவற்றுக்கும் நல்ல சாட்சியாகவே தேசம் இருக்கின்றது.
தற்போது உள்ளுராட்சி சபை தேர்தலை முன்வைத்து, வடக்கு மக்கள் மீது அதீதமான “பச்சத்தை” தேசிய மக்கள் சக்தி வெளிப்படுத்துகின்றது. “வெற்றி நமதே, ஊரும் எமதே” என்னும் கோஷத்துடன் வடக்கில் வட்டமிடுகின்றனர்.
இனவாதம் வேண்டாம் என்னும் வரிகளையே மந்திரம்போல் ஒப்பிக்கின்றனர். நாம் அனைவரும் இலங்கையர் என்று பிரசங்கம் செய்கின்றனர்.
இவ்வாறான இலட்சியப் பேச்சுக்கும், புத்திமதிக்கும் மட்டும் குறைவில்லை.
ஆனால், காணி அபகரிப்பு போன்ற அடிப்படை விடயங்களிலேகூட, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளைக் கண்டுகொள்வதில்லை. வடக்கின் ஒருபகுதியே தையிட்டி என்பதை மட்டும் “வசதியாக” மறந்துவிடுகின்றனர்.
சிங்களப்-பெளத்த பேரினவாதத்தின் அங்கமே தேசிய மக்கள் சக்தி என்பதை, சிந்தனை – சொல் – செயல் என எங்கும் திட்டவட்டமாக வெளிப்படுத்துகின்றனர்.
அதற்கு நல்லூர் கிட்டு பூங்காவில் சனாதிபதியின் உரை நல்லதொரு உதாரணமாகும்.
தையிட்டி காணிப் பிரச்சினையிலிருந்து தமிழ் அரசியல்வாதிகளை விலக்கி வைக்கவேண்டும் என்னும் “புத்திமதி” சொல்லப்பட்டது. சும்மா ஒரு “பாவலா”வுக்கு, சிங்கள அரசியல்வாதிகளையும் சேர்த்துச் சொல்லப்பட்டது.
விகாராதிபதியுடன் பேசியே தையிட்டி பிரச்சினையைத் தீர்க்கவேண்டும் என்பதே சனாதிபதி
சொன்ன “புத்திமதி”யின் சாரமாகும்.
விகாராதிபதியுடன் பங்கேற்புடனேயே, தையிட்டியில், சட்டவிரோத விகாரைக்கான அடிக்கல் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவின் காலத்தில் நாட்டப்பட்டது
விகாராதிபதியுடன் பங்கேற்புடனேயே, நூறடி உயரமான தூபிக்கான அடிக்கல் ஜெனரல் சவீந்திர சில்வாவின் காலத்தில் நாட்டப்பட்டது
விகாராதிபதியுடன் பங்கேற்புடனேயே, மற்றுமொரு கட்டுமானமும் அண்மையிலே பாதுகாப்பு தரப்பினரால் திறந்து வைக்கப்பட்டது
ஆக, விகாராதிபதியின் பங்கேற்புடனேயே, சட்டவிரோத விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறாக, அத்துமீறல்களிலே ஈடுபடுகின்ற விகாரதிபதியுடன் பேசியே பிரச்சனைக்கு தீர்வு காணமுடியும் என்பதைச் சொல்லும்போது பெளத்த-சிங்களப் பேரினவாதத்தின் கோரமுகம் தெரிகின்றது.
சர்ச்சைக்குரிய தையிட்டி காணியினுடைய உரித்து தெளிவானது. அங்கே கட்டடம் அமைத்தலுக்கான எந்தவொரு அனுமதியுமில்லை என்பதுவும் தெளிவானது.
இத்தைகையதொரு சூழ்நிலையில், சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டியதே அரசின் பணியாகும்.
அதுவே தேசபரிபாலனமாகும். மாறாக, குற்றவாளியுடன் பேசித்தீர்வு கண்டுகொள்ளச் சொல்வதை எப்படி எடுத்துக் கொள்வது? அதனைச் சொல்வதற்கு ஒரு அரசு தேவையா?
அண்மையிலே நடைபெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் கூட்டமொன்றில் தையிட்டி விவகாரம் எழுப்பப்பட்டது. அதற்கு, நீதிமன்றத்தை நாடலாமே என தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் “புத்திமதி” சொல்லியிருந்தார்.
மிருசுவிலிலே தனியார்காணி இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டபோது, பெரும்பிராயத்தனத்துடன், நீதிமன்றக்கதவுகள் தட்டப்பட்டன.
அப்போது, “பொது நோக்கத்திற்காக’’ நிலங்களைக் கையகப்படுத்தியதான எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது.
தனியார் காணிகளில், தென்னைந்தோட்டம் அமைப்பதைவிட தேசிய பாதுகாப்பு முக்கியமானது என்னும் ஏளனத்தொனி தூக்கலாகவே வெளிப்பட்டது.
மிருசுவில் காணி அபகரிப்பு நியாயப்படுத்தப்பட்டது. நீதி மறுக்கப்பட்டது.
காரணம்: காணி ஆக்கிரமிப்புக்களிலே அரசினுடைய மறைகரம் உள்ளமையாகும்.
தையிட்டி காணி அபகரிப்புக்கும், கட்டிடவேலைக்கும் இராணுவமே அனுசரணை வழங்கியது. கட்டுமானத்திற்கு பெளத்த சாசன அமைச்சு நிதி வழங்கியது. தொழில்நுட்ப அனுசரணையை மொறட்டுவை பல்கலைக்கழகம் வழங்கியது
அந்தவகையிலே, அரச கட்டமைப்பே குற்றவாளியாகின்றது.![]()
அதனால், சட்டவிரோத செயற்பாடுகளைக் கேள்விக்கு உட்படுத்தக்கூடிய வல்லமையை அரச கட்டமைப்பிடம் எதிர்பார்க்க முடியாது.
கேள்விக்கு உட்படுத்தக்கூடிய களத்தை அரசியல் தலைமையே ஏற்படுத்த வேண்டும்.
அதற்கு தீர்க்கதரிசனமுடைய அரசியல் தலைமை வேண்டும்.
பெளத்த – சிங்கள பேரினவாதக் குட்டையில் ஊறிய சிங்களத் தலைவர்களிடம் அதனை
எதிர்பார்க்க முடியுமா?
சேனநாயக்க முதல் விக்ரமசிங்க வரை, பண்டரநாயக்க முதல் ராஜபக்சா வரையான அரசியல் தலைமையிடமிருந்து அனுரகுமார திசநாயக்க எந்தவகையில் வேறுபடுகின்றார்?
ஆக, இலங்கை அரசியல்போக்கில் மாற்றம் சாத்தியமா? என்னும் கேள்விக்கான பதில் நம்பிக்கைகளை நறுக்குகின்றன.
![]()