கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் -08…. சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

ஒரே ஊரில் ஒரே தெருவில் சடகோபனும் பிறந்தான் சங்கரியும் பிறந்தாள். இருவரும் நன்றாகப் படித்தார்கள். ஒரே கல்லூரியில் படித்தார்கள். கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரையில் காதல் என்ற எந்த வம்பு தும்புகளுக்குள்ளும் மாட்டவில்லை. இருவர் வீட்டினரும் நண்பர்கள். இருவருக்கும் படித்தவுடனேயே நல்லவேலை கிடைத்தது. வெவ்வேறு இடத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் என்றெல்லாம் கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

சிந்தாதிரிப் பேட்டையில் இருக்கும் மாப்பிள்ளைக்கும் சிவகங்கையில் இருக்கும் பெண்ணுக்கும் தரகர் மூலம் வரதட்சணை என்று எதுவும் வாங்காமல் பெண் வீட்டுக்காரர் இருந்து திருமணம் நடந்தது என்ற மாதிரி கேள்விப்பட்டதுண்டா? வந்த மருமகளும் அப்படிப்பட்ட மாமானார் மாமியாரை பெற்ற தாய் தந்தையரைப் போல் பார்த்துக் கொள்கிறாள் என்ற அற்புதங்கள் நடந்ததாக அறிந்திருக்கிறீர்களா?

அப்படியெல்லாம் நடப்பதில்லையே? எங்கோ அத்தி பூத்தாற்போல் அத்திவரதர் தண்ணீருக்குள் மறைவதுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தானே நடக்கிறது. இதையெல்லாம் விடுங்கள் மானிடப் பிறவிகளுக்கு மட்டும்தான் இந்த நிலையென்றால் பாற்கடலில் பள்ளிகொள்ளும் பரம்பொருளும் பனிமலையில் பவணிவரும் பரமசிவனும் அனுபவிக்காத துன்பங்களா?

நமக்கு பிறவி என்றால் கடவுளுக்கும் பிறவிதான். திருமாலும் பத்து பிறவி எடுத்து இருக்கிறார். நமக்கு மட்டும் பிறவி கடவுளுக்கென்று வந்தால் அவதாரமா?
அவர்கள் சொர்க்கத்தில் வாழ்ந்தாலும் இந்த அண்டத்தில்தானே வாழ்கிறார்கள்.
கீழே இருப்பவர்கள் வீட்டுக்கு சொந்தக்காரராகவும் மேலிருப்பவர்கள் குடியிருப்பவர்களாகவும் இருக்கலாம்.

அடிப்படையில் இருவரும் மனிதர்கள்தான். அப்டடியல்ல என்றால் என்ன நீதி இது? என்ன நீதி என்றால் தீமை நடக்கும் போதெல்லாம் கடவுள் வந்து காக்க வருவாராம். இல்லாவிட்டால் அவர்கள் அவதாரம் எடுக்க என்று ஒரு காரணம் இருக்குமாம்.

சான்றாக பாற்கடலை மந்திரமலையை வைத்து கடையும்போது மத்தாக செயல்பட்ட மலை நழுவி கடலுக்குள் போகாமல்தடுக்க திருமால் கூர்ம அவதாரம் எடுத்து மலையை தன் முதுகான ஓட்டில் சுமந்து தடுத்தாராம்.

அதுவே அடிமைத்தளையை அறுத்து விடுதலை பெற அவதாரம் எடுத்தார் மகாத்மா காந்தி என்றால் அது அவதாரம் அல்லவாம் பிறவியாம்.

ஒரு பிறவியில் செய்த நன்மை தீமைகளுக்கு ஏற்ப அடுத்த பிறவி என்கிறார்கள். நாய், நரி, பன்றி, பம்பு பறவை என்று பிறவிகளை மனிதர்கள் எடுக்கிறார்களாம். ஆனால் போனபிறவியில் பன்றியாக இருந்ததும் தெரியாது அடுத்த பிறவியில் பன்றிக்கறியை உண்ணப்போவதும் தெரியாதாம். குழப்பமாக உள்ளதல்லவா?

எனக்கு சில சந்தேகங்கள். எல்லா மதத்தினரும் இறந்தபின் சொர்க்கம் செல்வதாகத்தான் சொல்லி வைக்கப்பட்டுள்ளார்கள். அப்படி நன்மை செய்த எல்லா மதத்தினரும் மேலே செல்லும்போது அந்தந்த மதத்தினருக்கு என்று சொர்க்கத்தில் இடங்களை பிரித்து வைத்திருப்பார்களா? அல்லது ஏற்கனவே சொர்கத்தில் இருக்கும் அந்தந்த மதம் சார்ந்த ஒருவர் வந்து அழைத்துச் செல்வாரா?

போன பிறவிதான் தெரியவில்லை? அடுத்த பிறவியும் தெரியாது. இறந்தபின் என்ன நடக்கும் என்பது கூடத்தெரியாது என்றால் அது மனிதப் பிறவிக்கு கிடைத்த பெரும் தண்டனை அல்லவா? அப்படியிருக்க பல பிறவிகளை எடுத்தபின் உயர்ந்த பிறவியாக மனிதப்பிறவியை எப்படிக் கருதமுடியும்? மற்ற உயிரினங்களாக பிறவி எடுக்கும்போது இதொன்றும் தெரிவதில்லை. ஆதலால் மற்ற பிறவிகளே சிறந்த பிறவி.

மற்ற உயிரினங்கள் பிறக்கின்றன. வாழ்கின்றன. மடிகின்றன. இதல்லவோ பெரும்பேறு. அவைகளுக்கு திரைப்பட இயக்குநர் கூறியது போன்ற தண்டனைகள் தெரியாது. தேவலோக நாட்டிய நங்கைகளைப பற்றியும் தெரியாது. அவர்களது நாட்டியங்களைப் பார்பதற்காக எந்த அவசியமும் இருக்காது. ஏனெனில் அவற்றிற்கு ஒன்றும் தெரியாது.

சொர்க்கம் சென்றபின்னும் மதத்தால் பிரிந்திருக்க வேண்டிய சூழல் இருந்தால் அது என்ன சொர்க்கம். அப்படியெல்லாம் சொர்க்கத்தில் பிரிந்திருக்க வேண்டாம் என்றால் அதை இங்கேயே சொர்க்கம் போல் எல்லோரும் இணைந்திருக்கலாமே?

அடுத்த பிறவியில் அதே இனத்தில் பிறப்போமா அல்லது வேற்று இனத்தில் பிறப்போமா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் மற்ற உயிரினங்களாக பிறந்தால் பரவாயில்லை. அவைகளுக்கு தேசிய இனம் என்று ஒன்று இல்லாததால் பிரச்சினை இல்லை.

மனித இனத்தில் மதம், மொழி மற்றும் இனம் இருப்பதால் நன்மையே செய்திருந்தாலும் அதே இனம், மொழி மற்றும் மதத்தில் பிறக்கும் வாய்ப்பு கிடைக்குமா? கங்காருவாக ஆஸ்திரேலியாவில் பிறந்த கங்காரு ஆஸ்திரேலியாவிலேயே வாழும் மற்ற உயிரினமாக பிறக்குமா?

அதுபோல் திருமாலும் மீன், ஆமை, பன்றி என்று பிறவி எடுத்திருக்கிறார். அவரும் இன்ப துன்பங்களை அனுபவித்துள்ளார். பரசுராமனாக இருந்து தாயின் தலையையே துண்டாடக்கூடிய பெருந் துன்பச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

தாயைக் காத்த தனயனென்று சொல்வார்கள். ஆனால் தாயின் தலையை அல்லவா பரசுராமன் துண்டித்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய துன்பம். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று உலகுக்கு எடுத்துக் காட்டவே தந்தை சொற்படி தாயின் தலையையே துண்டித்து இருக்கிறாராம் இந்த பரசுராமர்.

இது மாதிரி மனிதர்கள் யாராவது அப்பா சொன்னார் என்பதற்காக அம்மா தலயைத் துண்டிப்பார்கள? அதுதான் கடவுளுக்கும் மனிதருக்கும் உள்ள வேறுபாடு. ஏனென்றால் கடவுள் கருணாமூர்த்தி. துண்டித்த தலையை திரும்ப சேர்த்து உயிர் கொடுப்பார்.

யாரோ ஒரு பெரிய மனிதர் எப்போதோ எங்கோ சொன்னதாக ஞாபகம். பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வெட்டிய யானைத் தலையை மனித உடலில் பொருத்தியதாலேயே நமக்கு விநாயகர் கிடைத்திருக்கிறாராம். யானைத் தலையையே மனிதத் தலையுடன் பொருத்தியவர்களுக்கு மனித உடலுடன் மனித தலையை இணைப்பது எளிதல்லவா?

பின் ஏன் அந்த அறுவைசிகிச்சையை முறையாக மேம்படுத்தி மனிதர்களுக்கும் பயன் கிடைக்கும்படி பரவலாக்கவில்லை? இந்த சிகிச்சையை இருதயமாற்று சிகிச்சை போல செய்து வெற்றிகண்டிருந்தால்
தலையை வெட்டும் குற்றவாளிகளுக்கு சிறு தண்டனையுடன் தூக்குத் தண்டனையில் இருந்து விடுபட வாய்ப்பு கிடைத்திருக்கும்.

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *