முச்சந்தி
கனடா தேர்தல் 2025; அரசியலில் புதியவரான கார்னி VS கன்சர்வேடிவ் பியரே பொலீவியர்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

கனடாவுக்கு மாபெரும் அச்சுறுத்தலாக டிரம்ப் உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலில், நாட்டை வழிநடத்த யார் தகுதியானவர் என்பதைக் கனடா மக்கள் தேர்வு செய்ய உள்ளனர்.
நீண்ட காலம் பிரதமராக ஜஸ்டின் ட்ரூடோ இருந்தவர். இருப்பினும், பல்வேறு காரணங்களால் அவருக்கான அழுத்தம் அதிகரித்தது என்பதும் உண்மையே. இதனால் வேறு வழியின்றி தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து கனடா நாட்டின் புதிய பிரதமராக, இங்கிலாந்து வங்கியின் முன்னாள் ஆளுநரான மார்க் கார்னி (Mark Carney) சமீபத்தில் பதவியேற்றிருந்தார்.

கடைசியாக 2021ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடந்தது. கனடா நாட்டின் சட்டப்படி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும். அதன்படி இந்தாண்டு தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. பிரதமர் பதவியும் கைமாறிய நிலையில், இத் தேர்தல் முடிவு முக்கியத்துவம் மிக்கதாக எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் எதிரியா ?
கனடாவில் அக்டோபர் வரை தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் கார்னி நினைத்திருந்தால் அக்டோபர் வரை பிரதமராகத் தொடர்ந்து இருக்கலாம்.
ஆனால் ட்ரூடோவுக்கு பதிலாக கார்னி பிரதமராகத் தேர்வாகியுள்ள நிலையில், அவருக்கு மக்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. இதை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முயலும் கார்னி, இதன் காரணமாகவே தேர்தலை உடனடியாக அறிவித்துள்ளார்.
மேலும், ஒட்டுமொத்த கனடாவுக்கான அச்சுறுத்தலாக டிரம்பை நிறுத்தம் கார்னி அதன் மூலம் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என நம்புகிறார். இது தொடர்பாக கார்னியின் கூற்றுப்படி “அதிபர் டிரம்பின் நியாயமற்ற வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நமது இறையாண்மைக்கு அவர் விடுத்த அச்சுறுத்தல்கள் காரணமாகக் கனடா இப்போது நெருக்கடியான சூழலை எதிர்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
கனடாவைப் பாதுகாக்க நாம் இன்னும் நிறையச் செய்ய வேண்டியிருக்கிறது. கனடாவில் முதலீடு செய்ய, கனடாவைக் கட்டியெழுப்ப, கனடாவை ஒன்றிணைக்க பல்வேறு விஷயங்களை நாம் செய்ய வேண்டி இருக்கிறது. இதற்குக் கனடா மக்கள் ஆதரவளிப்பார்கள் என நம்புகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கனடா அரசியல் கட்சிகள் :
கனடாவில் நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் உள்ளன. லிபரல், கன்சர்வேடிவ், நியூ டெமாக்ரடிக் கட்சி மற்றும் பிளொக் கியூபெக்கோயிஸ். இவற்றில், லிபரல் மற்றும் கன்சர்வேடிவ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கு மட்டுமே பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கத் தேவையான 172 இடங்களைப் பெறும் வாய்ப்பு உள்ளது.கனடாவின் நாடாளமன்றத்தில் உள்ள 343 இடங்களில் பெரும்பான்மையைப் பெற முக்கிய கட்சிகள் கடுமையாக போட்டியிடுகின்றன. பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் கட்சியின் தலைவர் பிரதமராவது வழக்கமாகும்.
ஆனால் எந்தக் கட்சியும் ஒட்டுமொத்த பெரும்பான்மை பெறவில்லை என்றால், அதன் விளைவு தொங்கு நாடாளுமன்றம் அல்லது சிறுபான்மை அரசாங்கம் அமைக்க வழிவகுக்கும்.
கனடாவைப் பொறுத்தவரை ஆளும் லிபரல் கட்சிக்கும் கன்சர்வேடிவ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அங்கு ட்ரூடோ இருந்தவரை கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவே அதிகமாக இருந்தது. ஆனால், கார்னி பதவியேற்றவுடன் நிலைமை மாறியுள்ளது.
தற்போதைய கருத்து கணிப்புக்களில் கன்சர்வேடிவ் கட்சியைக் காட்டிலும் லிபரல் கட்சிக்கான ஆதரவு சற்று அதிகமாக இருக்கிறது. இருப்பினும், தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
ஆனால் கருத்துக் கணிப்புகளில் ட்ரூடோ ராஜினாமா செய்வதற்கு முன்பு லிபரல்களை விட இரட்டை இலக்க முன்னிலை வகித்த எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் இருந்தது.
அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் மற்றும் கனடாவை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களின் பின்னணியில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், வாக்கெடுப்புகளில் லிபரல்கள் முன்னிலை பெறுவதாக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.
அரசியல் புதியவரான மார்க் கார்னி:
இதற்கு முன் தேர்தல் பிரச்சார அனுபவம் இல்லாத 60 வயதான கார்னி அரசியலில் புதியவர் ஆவார். அவர் ட்ரூடோவின் அரசாங்கத்திலும் பணியாற்றவில்லை. நீண்ட காலமாக நிதி மற்றும் பொது சேவையில் பணியாற்றி உள்ளார்.
கனடா வங்கியின் தலைவராக இருந்த மார்க் கார்னி , 2008 நிதி நெருக்கடியில் கனடாவை வழிநடத்த உதவினார். மேலும் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்து வங்கியை நடத்தும் முதல் குடிமகன் அல்லாதவர் என்ற பெருமையையும் பெற்றார். பிரெக்ஸிட்டின் நிதி நிலை தாக்கத்தை நிர்வகிக்கவும் உதவினார்.
மார்க் கார்னி லிபரல் கட்சியை வலதுசாரி பக்கம் நகர்த்தவும் முயன்றார். நடுத்தர வர்த்தக வரி
குறைப்பை அறிவித்தும் உள்ளார்.
குறைப்பை அறிவித்தும் உள்ளார்.ட்ரூடோவின் கார்பன் வரியை ரத்து செய்து, மூலதன ஆதாய வரி அதிகரிப்பை ரத்து செய்து வருகிறார். ஆனால் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும், வீட்டுவசதி போன்ற பிற பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் உறுதி பூண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
டிரம்புடன் கனடா அரசு முட்டி மோதிக் கொண்டாலும், பேச்சுவார்த்தை நடத்த திரு. கார்னி சிறந்த தேர்வாக இருப்பதாக கனடியர்கள் நம்புவதாக கருத்துக் கணிப்புகள் காட்டுகின்றன.
அமெரிக்காவிற்கான கனேடிய ஏற்றுமதிகளில் 25%, எரிசக்தி தயாரிப்பு ஏற்றுமதிகளில் 10% மற்றும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்களில் 25% வரியை விதித்த பிறகு, திரு. கார்னி அமெரிக்க பொருட்களுக்கு பழிவாங்கும் வகையில் 25% வரிகளை அமல்படுத்தினார்.
டிரம்பின் விரோதத்திற்கு கார்னியின் வலுவான எதிர்வினை கனேடிய தேசியவாதத்தில் தீர்க்கமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது என்றே கூறலாம்.
கன்சர்வேடிவ் கட்சியின் பியரே பொலீவியர்:
45 வயதான கன்சர்வேடிவ் தலைவர் பியரே பொலீவியர் (Pierre Poilievre ) மார்க் கார்னியின் முக்கிய போட்டியாளராக விளங்குகிறார். அவர் “கனடாவை முதலில் வைப்பேன்” என்றும் கூறுகிறார். முன்னாள் கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பரிடம் பணியாற்றி உள்ளார்.
முதலில் 2004 இல் கனடாவின் நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2006 மற்றும் 2015 க்கு இடையில் ஹார்பர் நிர்வாகத்தின் கீழ் அவர் விரைவாக பல பதவிகளில் உயர்ந்தார். இறுதியாக 2022 இல் அவர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவரானார்.
அவரது தேர்தல் பிரச்சாரத்தில் கொரோனா தொற்று நோய்க்குப் பின்னர் வாக்காளர்களின் கட்டுப்படியாகாத வீட்டுவசதி, வாழ்க்கைச் செலவு மற்றும் சுற்றுச்சூழல் வரிகள் மீதான விரக்தியை பொய்லீவ்ரே பயன்படுத்திக் கொள்கிறார்.
மேலும் பியரே பொலீவியர் ஒரு தசாப்த கால லிபரல் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரத் தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது கட்சியும் டிரம்ப் வரிவிதுப்பால் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். டிரம்பின் வரிவிதிப்புகளும், கனடாவை இணைக்கும் அச்சுறுத்தல்களும் கன்சர்வேடிவ்களின் 25% வீத முன்னிலையை முடக்கி உள்ளது.
பியரே பொலீவியர் அமெரிக்க நிர்வாகத்திலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொள்ள விரும்புகிறார். வரி குறைப்புக்கள் மற்றும் அதிகரித்த வள உற்பத்தி உள்ளிட்ட அவரது கொள்கைகள் முதலீட்டைத் திரும்பக் கொண்டுவரும் என்றும், கனடா மேலும் தன்னம்பிக்கை கொண்டதாகவும், டிரம்பை எதிர்த்து நிற்க சிறந்த முறையில் தயாராகவும் இருக்கும் என்றும் தேர்தல் பிரச்சாரங்களில் கூறியுள்ளார்.காலநிலை மாற்றம் குறித்த லிபரல் கட்சியின் திட்டங்களின் பெரும்பகுதியை அவர் அகற்ற விரும்புகிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கனடாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளை அறிவித்துள்ள நிலையில், அதைக் குறிப்பிட்டு இதுபோன்ற முக்கியமான தருணங்களில் நாட்டை யார் வழிநடத்த வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()