முச்சந்தி

மக்கள் இது தங்களின் காணி என்று கூறிய போது துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனவள அதிகாரி

வவுனியா பூவரசங்குளம் பகுதியில் மக்களின் சொந்த காணிகளை எல்லையிட வந்த வனவள அதிகாரி ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பிரதேச தேர்தல்காரியாலயம் வவுனியா மாகறம்பைக்குளம் பிரதான வீதியில் திறந்துவைக்கப்பட்டது.அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக்கட்சி ஆட்சி அமைக்கும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. இது ஒரு எல்லைப்புற மாவட்டம். இதன் இனப்பரம்பல் கணிசமான அளவு மாற்றப்பட்டிருக்கிறது. எந்த அரசாங்கம் வந்தாலும் இந்த செயற்திட்டம் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.

தற்போது இந்த ஆட்சிமாற்றம் ஏற்ப்பட்டமைக்கு முக்கிய காரணம் நாட்டின் பொருளாதார பிரச்சனையே.கடந்தகால ஆட்சியாளர்கள் விட்ட தவறே ஜேவிபி என்ற என்பிபி ஆட்சியமைப்பதற்கு காரணமாக இருந்தது.

தற்போதைய அரசுக்கு பயங்கவரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கான சந்தர்ப்பங்கள் இருந்தும் அதனை நீக்காமல் இப்போதும்பயன்படுத்திக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல அண்மையில் வவுனியாவில் மக்களின் சொந்தகாணிகளுக்குள் வனவளத்திணைக்களம் எல்லை போடுகின்றமை தொடர்பாக பொதுமக்களால் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டது. நான் அங்கு சென்றமையால் அதனை தடுக்கமுடிந்தது. ஏன் அரசாங்கத்தால் இதனை செய்யமுடியாது?

இடம்பெயர்ந்த மக்கள் தற்போது தமது சொந்த காணிகளுக்குள் செல்வதை இந்த திணைக்களம் எதற்காக தடுக்கிறது?. வவுனியா பூவரசங்குளம் பகுதியில் உள்ள மக்கள் இது தங்களுக்குரிய காணி என்று தெரிவித்த போது அங்கு நின்ற வனவளத்திணைக்கள அதிகாரி தனது துப்பாக்கியை எடுத்து காட்டியுள்ளார்.நான் அவர்களை எச்சரித்திருந்தேன்.

இதன் மூலம் அடக்கு முறை அரசியலை செய்வதற்கு அரசாங்கம் மாறினாலும் அரச நிர்வாகம் மாறவில்லை என்பது புலப்படுகிறது. அதனை மாற்றவேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு இருக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தை ஆறுமாதங்களுக்குள் மாற்றுங்கள் என்று கூறுவது இயலாத விடயம்.அதற்கு நீண்டகாலம் எடுக்கும். அதற்கு நாங்களும் இணைந்து வேலை செய்ய தயாராக இருக்கிறோம். அது பொதுவான பிரச்சனை. ஆனால் இந்த மக்களின் காணி விடயங்களில் நிதி செலவளிக்காமல் உடனடியாக தீர்வினை வழங்கமுடியும். அதனை செய்ய ஏன் தயங்குகின்றனர்?இந்த நிர்வாகங்களை கையாளமுடியாத கையாலாகாத அரசாங்கமாகவே இது இருக்கிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button