முச்சந்தி

இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கும் அநுர அரசாங்கம்! ஐக்கிய மக்கள் சக்தி சாடல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது இஸ்ரேலின் முகவராக மாறியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கிழக்கு மாகாணங்களில் அரசியல் கூட்டங்களுக்கு செல்லும் போது சற்று கலவரமடைகின்றார். பலஸ்தீனுக்கு ஆதரவாக ஸ்டிக்கர் ஒட்டியமை தொடர்பில் அண்மையில் கைது செய்யப்பட்ட இளைஞர் எந்தவொரு பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்பற்றவர் என்று ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ஆனால் அதற்கு முரணான கருத்தை பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிடுகின்றார்.

எனினும் அந்த இளைஞன் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு நிபந்தனைகளின் அடிப்படையில் ஜனாதிபதி கையெழுத்திட்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனுக்கு பயங்கரவாத செயற்பாடுகளுடன் எந்த தொடர்பும் இல்லை எனில் எதற்காக வாராந்தம் குற்றத்தடுப்பு பிரிவில் கையெழுத்திடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது?

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பலஸ்தீனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தேசிய மக்கள் சக்தி இன்று அது தொடர்பில் மௌனம் காக்கிறது.

ஆனால் அக்கறைப்பற்று போன்ற பிரதேசங்களில் வீசா இன்றி இஸ்ரேலியர்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து இந்த அரசாங்கத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கொழும்பில் சட்ட விரோதமாக மத வழிபாட்டுத் தலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லையா? ஜனாதிபதியின் கூற்றுப்படி பலஸ்தீனுக்கு ஆதரவாக செயற்படுவது மாத்திரமே தற்போது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button