இலக்கியச்சோலை

அமரர் கலாலக்ஷ்மி தேவராஜா எனும் ஆளுமை!… அற்பாயுளில் மறைந்தவரின் வாழ்வும் பணிகளும்!… முருகபூபதி

மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி தனது ஜே.ஜே. சில குறிப்புகள் ( 1981 இல் வெளியானது ) நாவலில் அற்பாயுளுக்கும் மேதா விலாசத்திற்கும் அப்படி என்ன நெருங்கிய தொடர்பு என குறிப்பிட்டிருந்தார்.

அதற்கு பாரதியார், புதுமைப்பித்தன், மு. தளையசிங்கம், மற்றும் அந்நியன் நாவல் எழுதிய ஆல்பெர் காம்யூ ஆகியோரையும் உதாரணம் காண்பித்திருந்தார்.

அண்மையில் அனைத்துலக பெண்கள் தினம் வந்தபோது, நான் வெளியிட்ட யாதுமாகி ( இரண்டாம் பாகம் ) மின்னூலில் இடம்பெற்ற ஈழத்தின் மற்றும் ஒரு பெண்ணிய ஆளுமை பற்றிய பதிவை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

எனது நீண்டகாலத் தோழர் சோ. தேவராஜா அவர்கள் இலங்கையில் சட்டத்தரணியாகவும் பதில் நீதிவானாகவும் பணியாற்றுபவர்.

தேசிய கலை, இலக்கியப்பேரவை மற்றும் புதிய ஜனநாயக மார்க்ஸிஸ லெனினிஸக் கட்சி, இவற்றின் வெளியீடான தாயகம் இதழ் முதலானவற்றில் முக்கிய அங்கம் வகித்து வருபவர்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜீவநதி வெளியீடாக வந்திருந்த எனது “ சினிமா: பார்த்ததும்கேட்டதும் “ நூலின் வெளியீட்டு அரங்கு ஜீவநதி ஆசிரியர் கலா. பரணீதரனின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் நடந்தபோது, தேவராஜாவும் கலந்துகொண்டு முதல் பிரதியை பெற்றுக்கொண்டார்.
மீண்டும் அவரை கடந்த 2024 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மெல்பனில் சந்தித்தேன். அவரை நண்பர் மாவை நித்தியானந்தன் எமது இல்லத்திற்கு அழைத்து வந்தார்.

அன்று நீண்டநேரம் நாம், கலை, இலக்கியம், அரசியல் தொடர்பாக உரையாடினோம்.
எனினும் தோழர் தேவராஜா, சில வருடங்களுக்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி அற்பாயுளில் மறைந்துவிட்ட தமது அன்புத்துணைவியார் கலாலக்ஷ்மி பற்றி எதுவுமே பேசவில்லை.

அற்பாயுள் மரணங்கள், என்னை மட்டுமல்ல எவரையுமே அதிர்ச்சிகொள்ள வைப்பவை.
அவ்வாறு மரணிப்பவர்களின் நினைவுகள் எப்போதும் மனதில் அலைமோதிக்கொண்டுதானிருக்கும்.

அன்றைய சந்திப்பில், கலாலக்ஷ்மி பற்றியும் அன்னாரது திடீர் மறைவு பற்றியும் நானும் எதுவும் பேசவில்லை.

கலாலக்ஷ்மி யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் மாணிக்கவாசகர் – தங்கம்மா தம்பதியினரின் ஐந்தாவது மகளாகப் பிறந்தவர். பண்டத்தரிப்பு மகளிர் கல்லூரியிலும் பண்டத்தரிப்பு இந்துக் கல்லூரியிலும் கல்வி கற்று அதன் பின்னர் தனது உயர்தரக் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் நிறைவுசெய்து, யாழ் . பல்கலைக்கழகம் பிரவேசித்து இளங்கலைப் பட்டத்தைப் பெற்றார்.

சட்டத்தரணியும் கலை, இலக்கியவாதியும் இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளருமான சோ. தேவராஜாவை காதலித்து பதிவுத் திருமணம் செய்துகொண்டவர்.

தாலி பெண்ணுக்கு வேலி என்பது எமது தமிழ் சமூகத்தின் விதி. ஆனால், அந்த வேலிக்குள் சிறைப்படாமல் மங்கல நாண் அணியாமல் வாழ்ந்தவர்தான் இந்த கலாலக்ஷ்மி என்ற தகவலும் உண்டு.

சிறுகதை, கட்டுரை, கவிதை முதலான துறைகளில் எழுதிவந்திருக்கும் கலாலக்ஷ்மி சிறந்த நாடக நடிகையாக வலம் வந்தவர். அத்துடன் அரசியல் ஈடுபாட்டுடன் சமூகப்பணிகளையும் மேற்கொண்டவர்.

ஒரு தடவை மேல்மாகாண சபைத் தேர்தலிலும் போட்டியிட்டவர்.
கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கு நான் சென்றிருந்த வேளைகளில் இவரை சந்தித்திருந்தாலும், நீண்ட நேரம் உரையாடச் சந்தர்ப்பங்கள் அமையவில்லை.

கலாலக்ஷ்மி மறைந்த பின்னர் வெளியாகியிருக்கும் கலாலக்ஷ்மி எனும் ஆளுமை என்ற நூலும், கலாலக்ஷ்மி கதைகள் என்ற தொகுப்பும் இவரது வாழ்வையும் பணிகளையும் எழுத்தாற்றலையும் எமக்கு இனம்காட்டுகின்றன.

பேராசிரியர் சி. மௌனகுரு, க. பாலேந்திரா, குழந்தை ம. சண்முகலிங்கம், வி. எம். குகராஜா, அருணா. செல்லத்துரை, கே. எம். வாசகர், சிங்கள நாடகக்கலைஞர் விஜித் சிங் கணவர் சோ. தேவராஜா ஆகியோரின் நாடகங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் முதலானவற்றிலும் பங்கேற்றிருக்கும் கலாலக்‌ஷ்மி, செம்மனச்செல்வி என்ற புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர்.

இவரது சிறுகதைகள்: மகரகாவியம், பூமராங், ரோசாப்பூ முதலான தொகுப்புகளில் இடம்பெற்றுள்ளன. இவரது திடீர் மறைவின் பின்னர் கலாலக்ஷ்மி கதைகள் என்ற பெருந்தொகுப்பு 2021 ஆம் ஆண்டு வெளியானது.

படைப்பிலக்கியவாதியாக, நாடகக் கலைஞராக இயங்கியிருக்கும் கலாலக்ஷ்மி போருக்கு எதிரான போராட்டங்களிலும் ஈடுபட்டவர்.

கலாலக்ஷ்மி எனும் ஆளுமை நூலில் பல கலை, இலக்கிய ஆளுமைகள் “ கலா “வுடனான தங்கள் தோழமையை கலாவின் நல்லியல்புகளை விரிவாகவும் சுருக்கமாகவும் பதிவுசெய்துள்ளனர்.

அந்தப்பதிவுகளிலிருந்து, கலாவின் செயற்பாடுகள் எவ்வாறு சமூகத்திற்கு பயன்பட்டிருக்கிறது என்பதையும் வாசகர்கள் தெரிந்துகொள்ள முடியும்.

கலாவின் கதைகள் காணொளி வாயிலாகவும் பேசப்பட்டிருக்கின்றன. தனது வாழ்வின் தரிசனங்களை படைப்பிலக்கியமாக்கியவர் கலா.

தனது அற்பாயுளில் நிறையச்சாதித்திருக்கும் இவரது இழப்பு ஈடுசெய்யப்படவேண்டியது. கலாவின் சிறுகதைகள், அவர் வாழ்ந்த சமூகத்தின் நடப்பியல்புகளை சித்திரித்தவை.
மீண்டும் சுந்தரராமசாமியின் கூற்றை நினைவுபடுத்துகின்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.