பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் – நூல் அறிமுகம்

ஓவியரும் எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்த ஓவியங்களுடன் “பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் !” – தமிழின் முதல் டிஜிட்டல் கிராபிக் நூல்!
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
“பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன்” எனும் ஜார்ஜ் எஸ் கிளாசன் The Richest Man in Babylon என்ற பிரபலமான நிதி அறிவுரை நூல், இப்போது தமிழில் கிராஃபிக் நாவலாக, 109 பக்கங்களுடன், தமிழ்நாடு கண்ணதாசன் பதிப்பகத்தினால் வெளிவந்துள்ளது!
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரையில் பணத்தை எவ்வாறு சேமிப்பது, முதலீடு செய்வது, கடனை தவிர்ப்பது போன்ற அடிப்படை நிதித்திட்டமிடலை எளிய கதைமொழியில் படம்-வாரியாக விளக்குகிறது.
பணத்தை கையாளும் பொறிமுறைகளில் ஏற்படும் சிக்கலை எவ்வாறு தவிர்ப்பது என்பதை இலகு தமிழில் எம் கண்முன்னே விரித்துப்போடுகின்றது. இதுவே இந் நூலின் சிறப்பு எனலாம். இத்தொகுப்பு, ஆங்கில மூலத்தின் முதல் கிராஃபிக் நாவல் பதிப்பாகவும் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கதைச் சுருக்கம்:
பண்டைய பாபிலோன் நகரத்தைப் பின்னணியாகக் கொண்ட இக்கதை, ஆர்க்காத் என்ற ஏழை செதுக்குதலாளர், எப்படி பாபிலோனின் மிகப் பெரிய பணக்காரன் ஆனார் என்பதை ஞானத்துடன் விவரிக்கிறது.
ஆர்க்காதின் 7 பொற்குறிகள்:
வருமானத்தில் 10% எப்போதும் சேமி.
தேவையற்ற செலவுகளைத் தவிர்.
சேமித்த பணத்தை லாபகரமான முதலீடுகளில் பெருக்கு.
ஆலோசனையின்றி முதலீடு செய்யாதே.
வீட்டைச் சொந்தமாக்கு.
எதிர்காலத்திற்கான பாதுகாப்பை உருவாக்கு.
அறிவை வளர்த்துக்கொள்.
கதையில், கடன் கவலைகள், மோசடி முதலீட்டாளர்கள், பொருளாதார நெருக்கடிகள் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் பாபிலோன் மக்களின் வாழ்க்கைப் போராட்டங்கள், நவீன காலத்தின் நிதிச் சிக்கல்களுடன் ஒப்பிடும்படி செய்கின்றன. ஒவ்வொரு அத்தியாயத்திலும், “பணம் எப்படி வேலை செய்கிறது” என்பதை விளக்கும் சாதாரண மக்களின் உரையாடல்கள் இடம்பெறுகின்றன.
கிராஃபிக் நாவலின் சிறப்பு:
ஆஸ்திரேலிய ஓவியரும் எழுத்தாளருமான கிறிஸ்டி நல்லரெத்தினம் வரைந்த நூறுக்கும் அதிகமான டிஜிட்டல் (Digital) ஓவியங்கள், பாபிலோனின் பாரம்பரியக் கட்டிடங்கள், உடைகள் என்பன கதைப்பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டுகின்றன.
இளம் தலைமுறையைக் கவரும் ஓவியங்கள் மற்றும் காமிக்-பாணி வடிவமைப்புகள், கடினமான நிதி சம்மந்தமான கருத்துகளை எளிதாகப் புரிந்துகொள்ள உதவுகின்றன.
தமிழ் மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் யுகன் இக்கதையை இயற்கையான உரையாடல் முறையில் தமிழாக்கியுள்ளார். படக்கதை கருத்துருவாக்கம் காந்தி கண்ணதாசன் மற்றும் முரளி கண்ணதாசன் பதிப்பகத்தினர் இணைந்து இந்த முன்முயற்சியை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளனர்.
கண்ணதாசன் பதிப்பகம் தமிழ் இலக்கிய உலகில் பல புரட்சிகளை உருவாக்கியுள்ளதுகவிஞர் கண்ணதாசனின் படைப்புகளை மட்டுமல்லாமல், தமிழ் மொழியில் அறிவியல், பொருளாதாரம், இலக்கியம் போன்ற பல்துறை நூல்களை வெளியிட்டு, இளைஞர்களுக்கான கல்வியை மேம்படுத்துகிறது.
“இலக்கியத்தை எளிய மக்களுக்கு எட்டும் தொலைவில் கொண்டுவருவது” இவர்களது நோக்கம். இந்த கிராஃபிக் நாவல் திட்டம், அந்தப் பாரம்பரியத்தைத் தொடர்ந்துள்ளது.
கண்ணதாசன் பதிப்பகத்தின் நூல்கள் தரமான காகிதம், கவர்ச்சியான அட்டைப்படங்கள் மற்றும் மலிவு விலையில் கிடைப்பதால், தமிழ் மக்களிடையே பிரபலமாக உள்ளன.
இளைஞர்கள் முதல் பெற்றோர்கள் வரை நிதி அறிவு (Financial Literacy) பெற ஒரு சுவாரஸ்யமான வாய்ப்பு இந்நூல். புத்தகத்தின் காட்சிகள் மற்றும் உரையாடல்கள், நிதி ஆலோசனைகளை நினைவில் வைக்க உதவும்.
தமிழ் மொழியில் அறிவுரை மற்றும் பொழுதுபோக்கு இரண்டையும் ஒருங்கிணைக்கும் அரிய முயற்சி இது எனலாம்.
“பணத்தின் மொழி உலகளாவியது. ஆனால் அதைத் தமிழில் கற்றுக்கொள்வது நமது கடமை!”— இந்த நூல், தமிழர்களின் நிதி ஞானத்தைவளர்க்கும் ஒரு பொற்காலத்தின் தொடக்கமாகும்! இந்த நூல் வளர்ந்தவர்களுக்கு அறிவுரை பகிர்வதற்கும் மேலாக எமது இளம் சமுதாயத்திற்கு பணத்தை கையாளுவதற்கான வழிமுறைகளை சிறப்பாய் சொல்லிப் போகிறது. எனவே இச்சந்ததியாருக்கு வாங்கி பரிசளிக்க உகந்து நூல் இது என்றால் அது மிகையாகாது!