முச்சந்தி

ஜாலியன் வாலாபாக் – பிரிட்டிஷின் கோர முகம்: ஆங்கிலேய காலனியாதிக்க கறைபடிந்த வரலாறு…  ஐங்கரன் விக்கினேஸ்வரா

(இந்தியாவில் நிகழ்ந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைகளின் 106வது நினைவு தினம் இன்று ஆகும். 13.04.1919 அன்று பிரித்தானிய ராணுவத்தால் ஜாலியன் வாலாபாக்கில் 379 அப்பாவி இந்திய மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்)
இந்திய விடுதலை போரில் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றியும், ஆங்கிலேய காலனியாதிக்க கறைபடிந்த வரலாறாகும்.
இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்ல, ஆங்கிலேய காலனியாதிக்க வரலாற்றிலும் அழிக்க முடியாத கறை ஜலியான்வாலா பாக் ( Jallianwala Bagh massacre ) படுகொலை என்றே வரலாற்று ஆய்வாளர் கூறுவர்.
சத்தியாக்கிரக இயக்கம்:
அன்றைய காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்கள் இந்தியர்களின் சத்தியாக்கிரக இயக்கத்தை பிரட்டிஷ் பேரரசுக்கு வந்துள்ள பேராபத்து எனக் கருதினார்கள். அத்துடன் மக்களிடையே பரவி வளர்ந்து வரும் போராட்ட உந்துதலையும் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட ஆட்சியாளர் முடிவு எடுத்தனர்.
இதற்காக சிட்னி ரௌலட் என்பவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டு, ரௌலட் சட்டம் (Rowlatt Act ) நடைமுறைப் படுத்தப்பட்டது. சுதந்திர ஊடகங்களைக் கட்டுப்படுத்தவும், ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்து விசாரணையின்றி சிறைகளில் அடைத்து வைக்கவும், அனுமதியின்றி சிறையிலிடவும் காவல் துறையினருக்கு இச்சட்டம் வழிவகுத்தது.
இந்திய மக்களிடையே எழுச்சியும் எதிர்ப்பும் வேகமாயின. பல்வேறு ஊர்வலங்கள் கண்டன எதிர்ப்புக் கூட்டங்கள், ரௌலட் சட்டத்துக்கு எதிரான எதிர்ப்புகள் என பரவலாக வளர்ந்தன. இந்தப் போராட்டத்தின் உச்சக்கட்டம் தான் ஏப்ரல் 13 ஜாலியன்வாலாபாக் படுகொலை நிகழ்வாகியது.
பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் பூங்கா. நான்கு பக்கமும் மதிற் சுவர்களால் சூழப்பட்டு உள்ளே செல்ல ஒரே ஒரு பாதை மட்டுமே உள்ள ஒரு மைதானம். இந்த இடத்தில்தான் ரௌலட் சட்டத்தை எதிர்க்கும் போராட்ட விளக்க கூட்டம் 1919 ஏப்ரல் 13 ஆம் நாள் நடத்தப்பட்டது. பல ஆயிரக் கணக்கான மக்கள் தலைவர்களின் பேச்சைக் கேட்க மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது அந்த இடம் ஆங்கிலப் படையால் சுற்றிவளைக்கப்பட்டது.
பிரித்தானிய ஜெனரல் டயர் (General R. E. H. Dyer) சுட உத்தரவிட்டவுடன் ஆயிரக் கணக்கான மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். தப்பி ஓட வழியின்றித் தவித்தனர். அங்கிருந்த ஒரு கிணற்றில் குதித்தனர். துப்பாக்கிச் சூட்டில் இறந்தவர்களைவிட மிதி பட்டும் கிணற்றில் குதித்தும் இறந்தவர்கள் அதிகம் இருப்பார்கள். 90 துப்பாக்கிகளால் 10 நிமிடத்தில் 1,650 ரவைகள் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இறந்தவர்களின் முழுக் கணக்கு அப்போது மறைக்கப்பட்டது.
பகத்சிங் கண்முன்னே:
இப்படுகொலை நிகழ்கையில் அங்கே ஒரு 11 வயது சிறுவன், அந்த கோரக்காட்சியைக் கண்டு மனம் கொதித்தான். அங்கிருந்த ரத்த மண்ணைக் கையால் அள்ளினான்; சபதம் ஏற்றான், ‘ஆங்கிலேயர்களை பழிவாங்காமல் விட மாட்டேன்’. அவன் பெயர் பகத்சிங்.
இந்த சபத்தை நிறைவேற்ற அவருடன் தோளோடு தோள் கொடுத்து செயல்பட்ட இளைஞர்கள் தான் ராஜகுரு, சுகதேவ். அவர்களின் போராட்டத்தையும், தியாகத்தையும் உலகே அறியும்.
ஆயிரக்கணக்கான மக்கள் சுட்டுக் கொலை:
இன்றைக்கும் ஜலியான்வாலா பாக் சென்றாலும், ஆங்கிலேய ராணுவ வீரர்கள் சுட்ட குண்டுகள் பாய்ந்து பெயர்ந்த செங்கல் தடங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், ஜலியான்வாலா பாக் துயரத்தை முழுமையாக இந்திய மக்கள் உணர்ந்திருப்பார்களா என்பதும் ஐயமே. ரெஜினால்ட் டையர் என்ற இராணுவ அதிகாரியின் தலைமையில் பிரித்தானிய இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட கொடூர நிகழ்வால் பெண்கள், சிறுவர்கள் நூற்றுக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டனர். அங்கே உயிர் துறந்தவர்களின் கனவு அடுத்துவந்த தலைமுறைகளில் நிறைவேற்றப் பட்டிருக்கிமா என்பதும் கேள்விக்குறியே.
ஜலியான்வாலா பாக் படுகொலையில் கொல்லப்பட்டவர்கள் திட்டவட்டமாக எத்தனை பேர் என்று இதுவரை தெரியாது. அந்த எண்ணிக்கையோ, பெயர்களோ முறைப்படி இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை.
நீண்ட காலமாகியும் அடுத்ததாக ஜலியான்வாலா பாக்கில் பலியானவர்களின் வாரிசுகள், தங்கள் முன்னோர்களைப் பற்றி என்னவாகத் தங்கள் மனத்தில் வடித்துக் கொண்டிருப்பார்கள் என்பதும் தெரியாது. அந்தப் படுகொலை நிகழ்விலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்ட துயரமான வரலாறு இன்னமும் அந்த மண்ணில் உள்ளது.
பிரித்தானிய பிரதமரின் நினைவு கூறல்:
பிரித்தானிய காலனித்துவ வரலாற்றில் பெரும் இரத்தக்களரியை உண்டு பண்ணிய படுகொலைகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜூலியன்வாலா பாக் படுகொலையை, 2013 இல் அன்றைய பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் நினைவு கூர்ந்தார்.
பிரித்தானியப் பிரதமர் டேவிட் கேமரன் பெப்ரவரி 20, 2013இல் இந்தியா வந்திருந்த அவர் தனது பயணத்தின் போது பஞ்சாபின் அம்ரித்சர் நகருக்கு வந்திருந்தார். அங்கே அம்ரித்சர் நகரில் ஜூலியன்வாலா பாக் படுகொலை நினைவு இடத்தில் அஞ்சலி செய்து நினைவு கூர்ந்தார்.
முன்னரும் பல பிரித்தானிய பிரதமர்கள் தமது கவலைகளை இப் படுகொலைகளுக்கு வெளியிட்டிருந்தாலும், பணியில் இருந்த ஒரு பிரதமர் ஒருவர் நேரில் ஜாலியன்வாலா பாக் நினைவாலயத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்தியது பலரின் கவனத்தை ஈர்த்தது. ஆனாலும் அதற்காக அவர் முறையான மன்னிப்பு எதனையும் கேட்கவில்லை.
“பிரித்தானிய வரலாற்றில் இது ஒரு கறை படிந்த நிகழ்வு,” என டேவிட் கேமரன் கூறினார். இங்கு நடந்தவைகளை நாம் என்றுமே மறக்கக் கூடாது,” எனத் தனது அஞ்சலிக் குறிப்பில் அவர் எழுதினார்.
சாத்வீக சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பிரித்தானியப் படையினர் சரமாரியாகச் சுட்டதில் பெண்கள், குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் கொடூரமான ஜாலியன்வாலா பாக் படுகொலைகள் எனக் கூறப்படும்.
இப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 379 என அன்றைய பிரித்தானிய அரசு கூறியிருந்தது. ஆனாலும் இத்தொகை 1,000 இற்கும் அதிகம் என இந்தியத் தரப்பில் கூறப்படுகிறது. வரலாற்றின் கறைபடிந்த துயரமான நிகழ்வுக்கு இதுவரை யாரும் தண்டிக்கப்படவும் இ்ல்லை, அத்துடன் பொறுப்புக் கூறவும் இல்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.