கர்ப்பத்தை மறைத்து 3- வது திருமணம்; 4 மாதத்தில் பிரசவம்

தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 40 வயது தொழிலாளி ஒருவருக்கும், 40 வயது பெண் ஒருவருக்கும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் நடந்தது. அந்த தொழிலாளிக்கு, அது தான் முதல் திருமணம். ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 2 திருமணம் நடந்துள்ளது. முதல் 2 கணவர்களும் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து 3-வதாக அந்த தொழிலாளியை அப்பெண் கரம் பிடித்தார். திருமணத்தின் போது அந்த பெண்ணின் வயிறு சற்று பெரிதாக இருந்துள்ளது. இதுகுறித்து அவரிடம் தொழிலாளி விசாரித்தார். அப்போது அது ‘தொப்பை’ என்று அவர் கூறிவிட்டார். அதனை கணவரும் நம்பி விட்டார். இதற்கிடையே திருமணமான சில மாதங்களில் வயிறு மேலும் பெரிதாக இருந்ததால், அவர் தனது மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று ஸ்கேன் பரிசோதனை செய்தார். அப்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த தொழிலாளி அதிர்ச்சி அடைந்தார். திருமணத்துக்கு முன்பே அந்த பெண் கர்ப்பமாகி இருந்திருக்கிறார். இருப்பினும் பெருந்தன்மையுடன் அந்த பெண்ணை ஏற்றுக்கொண்டு அவருடன் தொழிலாளி குடும்பம் நடத்தி வந்தார்.இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு கடந்த மாதம் ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவம் ஆனது. அப்போது அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சில நாட்களில், அந்த பெண், குழந்தையை வீட்டில் இருந்த தனது கணவரிடம் கொடுத்து விட்டு ஆஸ்பத்திரிக்கு சென்று பிரசவத்தின்போது போடப்பட்ட தையலை பிரித்து விட்டு வந்துவிடுவதாக கூறினார்.கைக் குழந்தையுடன் அந்த தொழிலாளி வீட்டில் இருந்தார்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற மனைவி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே பசியால் குழந்தை அழுததால் சமாளிக்க முடியாமல் அவர் தவித்தார். அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் மனைவியை கண்டு பிடிக்க முடியவில்லை. தொழிலாளியை பிரிந்து அவர் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் ஒரு காப்பகத்தில் இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
அப்போது வேறு ஒரு போலீஸ் நிலையத்துக்கு சென்று தனது குழந்தையை தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறு முறையிட்டதாகவும், போலீசார் தன்னை காப்பகத்தில் சேர்த்து விட்டதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் அந்த பெண், தனது கணவருடன் வாழ விருப்பம் இல்லை என்றும், குழந்தையை மட்டும் தன்னிடம் பெற்றுக் கொடுக்குமாறும் கூறினார்.
இதனையடுத்து அவரை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் விருப்பத்தின் பேரில், கணவரிடம் இருந்து குழந்தையை வாங்கி அந்த பெண்ணிடம் போலீசார் ஒப்படைத்தனர். குழந்தையை ஒப்படைத்த தொழிலாளி, ‘இப்படி தன்னை ஏமாற்றி விட்டாரே’ என்று அந்த பெண் குறித்து புலம்பியபடி போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது பரிதாபத்தை ஏற்படுத்தியது.