கருங் கடலில் போர் நிறுத்தம்!… அமெரிக்கா – உக்ரைன் கனிமவள ஒப்பந்தம்… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(கருங்கடலில் ராணுவ நோக்கங்களுக்காக வணிகக் கப்பல்களை பயன்படுத்துவதைத் தடுக்கவும், வர்த்தக ரீதியான கப்பல்களுக்கான பாதுகாப்பான கடல்வழி பயணத்தை உறுதி செய்யவும் ரஷ்யா, உக்ரைன் உறுதி பூண்டுள்ளன)
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தத்தை அமுல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வரும் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயன்று வருகிறார்.
கருங்கடல் பகுதியில் போர் நிறுத்தம்:
இரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை முழுமையாக நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி முதலில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்போது ஒப்புக் கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, ரஷ்யாவிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில், கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்யா மற்றும் உக்ரைன் ஒப்புக் கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கருங்கடல் பகுதியில் ரஷ்யா படைகளை குவித்து வரும் சூழலில், அதனை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் உக்ரைன் வலியுறுத்தியது. சவுதி அரேபியாவில் நடந்த பேச்சுவார்த்தையில் கருங்கடல் பகுதியில் போர்நிறுத்தத்தை அமல்படுத்த இருநாடுகளும் ஒப்புக் கொண்டன.
அதேபோன்று கருங்கடலில் ராணுவ நோக்கங்களுக்காக வணிகக் கப்பல்களை பயன்படுத்துவதைத் தடுக்கவும், பாதுகாப்பான கடல்வழி பயணத்தை உறுதி செய்யவும் ரஷ்யா, உக்ரைன் உறுதி பூண்டுள்ளன.
இந்த தகவலை உறுதி செய்துள்ள அமெரிக்க வெள்ளை மாளிகை, இதற்கு பலனாக ரஷ்யா மீது விதிக்கப்பட்ட விவசாயப் பொருட்கள் மற்றும் உரம் ஏற்றுமதிக்கான தடையை நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
உக்ரேனின் கனிமவள ஒப்பந்தம்:
இதேவேளை அமெரிக்காவுடனான முக்கிய கனிம ஒப்பந்தத்தின் நிபந்தனைகளுக்கு உக்ரேன் ஒப்புக் கொண்டுள்ளது என்று கீவில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் உண்மையில் பல நல்ல திருத்தங்களுடன் இதை ஒப்புக் கொண்டுள்ளது. இதை ஒரு நேர்மறையான முடிவாக பார்க்கிறோம் என்றும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் குறித்து உக்ரைன் அரசு மேலும் எந்த விவரத்தையும் தெரிவிக்கவில்லை.
இயற்கை வளங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சாத்தியமான வருவாயில் 500 பில்லியன் டாலர் உரிமைக்காக ஆரம்பத்தில் வைத்த கோரிக்கைகளை அமெரிக்கா கைவிட்டுவிட்டதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
ஆனால் உக்ரேனுக்கு உறுதியான பாதுகாப்பு உத்தரவாதங்களை இன்னும் அமெரிக்கா
வழங்கவில்லை. இது உக்ரேன் அதிபர் முன் வைத்த முக்கிய கோரிக்கையாகும்.
கடந்த பெப்ரவரி மாதம் இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கடுமையான வார்த்தைகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்நிலையில், வாஷிங்டனில் உக்ரேனிய அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் வருகை தந்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா என உறுதியாக தெரியவில்லை.
ஆனாலும் இதனையே தான் எதிர்பார்ப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
கனிமவள உடன்பாடு எட்டப்பட்டதை உறுதிப்படுத்தாமல் பேசிய டிரம்ப், இந்த ஒப்பந்தத்திற்கு ஈடாக உக்ரேன் தங்கள் நாட்டை பாதுகாத்து, போராடுவதற்கான உரிமையை பெறும் என்று தெரிவித்திருந்தார்.
ஆனால் அமெரிக்காவும் அதன் நிதியும் ராணுவ தளவாடங்களும் இல்லாவிட்டால், இந்த போர் மிகக் குறுகிய காலத்தில் முடிந்திருக்கும் என்றும் டிரம்ப் காட்டமாக கூறியுள்ளார்.
உக்ரேனுக்கு அமெரிக்க ராணுவ தளவாடங்கள் மற்றும் வெடிமருந்துகளின் விநியோகம் தொடருமா என்று டிரம்ப் அரசு இதுவரை முடிவு எடுக்கவில்லை.
ஒருவேளை ரஷ்யாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்யும் வரை தற்காலிக ஆயுத உதவியை நிறுத்தம் என்றே எதிர்பார்க்கலாம்.
இவ்வருட ஆரம்பத்தில் டிரம்ப் ஜெலன்ஸ்கியை ஒரு “சர்வாதிகாரி” என்று வர்ணித்தார். அதேவேளை அமெரிக்காவின் 500 பில்லியன் டாலர் கனிம வளத்திற்கான ஒப்பந்த கோரிக்கைகளை . ஜெலன்ஸ்கி, நிராகரித்திருந்தார். இதன் பின்னர், போரைத் தொடங்கியதற்கு உக்ரேனை குற்றம் சாட்டியிருந்தார் டிரம்ப்.
நிதியுதவிக்கு ஈடாக கனிம உரிமை:
அமெரிக்கா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து உக்ரேனுக்கு வழங்கிய ராணுவ மற்றும் பிற உதவிகளுக்கு ஈடாக உக்ரேனின் கனிமங்களை தருமாறு டிரம்ப் அழுத்தம் கொடுத்து வந்திருந்தார்.
ஆனால் அந்த அளவுக்கு அமெரிக்க உதவிகள் வழங்கப்படவில்லை என்று வாதிடும் ஜெலன்ஸ்கி, எங்கள் நாட்டை என்னால் விற்க முடியாது என்றும் கூறினார்.
அமெரிக்கா உக்ரேனுக்கு 300 பில்லியன் டாலர் முதல் 350 பில்லியன் டாலர் வரை வழங்கியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். நாங்கள் அந்த பணத்தை திரும்பப் பெற விரும்புகிறோம் என்றும் டிரம்ப் கூறினார்.
உக்ரைன் நாட்டின் ஒரு மிகப் பெரிய பிரச்னையை எதிர்கொள்ள உதவிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அமெரிக்காவில் வரி செலுத்தும் மக்கள் இப்போது தங்கள் பணத்தை மீண்டும் பெறக் கோருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேனில் உள்ள கனிம வளம் :
உலகின் முக்கியமான கனிம வளங்களில் ஐந்து வீதம் உக்ரேனில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகளை தயாரிக்க பயன்படும் கிராபைட்டின் 19 மில்லியன் தொன் நிரூபிக்கப்பட்ட இருப்பு உக்ரைனிடம் உள்ளது.
ஐரோப்பாவில் அனைத்து லித்தியம் இருப்புகளில் மூன்றில் ஒரு பங்கும் உக்ரைனில் உள்ளது. இவை தற்கால பேட்டரிகளில் முக்கிய அங்கமாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு, உக்ரேன் உலகின் ஏழு வீத டைட்டானியத்தை உற்பத்தி செய்தது. இது விமானங்கள் முதல் மின் நிலையங்கள் வரை கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.
உக்ரேனில் அரிய உலோகங்களின் குறிப்பிடத்தக்க இருப்பும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவை, நவீன உலகில் முக்கியமான ஆயுதங்கள், காற்றாலைகள் , மின்னணுவியல் மற்றும் பிற தயாரிப்புகளை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் 17 கனிமங்களை கொண்டுள்ளது.

உக்ரைன் அரசுக்கு டிரம்ப் காலத்தில் அமெரிக்க உதவிகள் முன்பை போல கிடைக்கப் போவதில்லை. திருப்பித் தர வேண்டியிராத நல்லலெண்ண உதவிகள் என்பது முடிந்து போன விஷயமாகிவிட்டது. அவை மனிதாபிமான உதவியாக இருந்தாலும் சரி அல்லது மூலோபாய காரணங்களுக்காக வழங்கப்படும் உதவியாக இருந்தாலும் சரி.
அமெரிக்க முன்னுரிமை கொள்கை:
இந்த போர் 75 ஆண்டுகளுக்கும் மேலாக பின்பற்றப்பட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் ஒரு அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுத்தது எனலாம்.
டிரம்பும் அவரது வெளியுறவுக் கொள்கை குழுவும் அடுத்த நான்கு ஆண்டுகளில் உலகெங்கிலும் அவர்களின் “அமெரிக்காவுக்கு முன்னுரிமை” கோட்பாடுகளை செயல்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
போரின் பின்னர் இரு நாடுகளும் புனரமைப்பு முதலீட்டு நிதியம் ஒன்றை அமைக்க உடன்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. லித்தியம் மற்றும் டைட்டானியம் உட்பட முக்கிய கனிமங்களின் பெரும் இருப்புகளை உக்ரேன் கொண்டுள்ளது. அத்துடன் கணிசமான நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் மற்றும் யுரேனிய இருப்புகள் உள்ளன. இவை பல பில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை.
கடந்த ஆண்டு, அதிபர் ஜெலன்ஸ்கி அதன் மேற்கத்திய கூட்டாளிகளிடம் ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவதற்கான திட்டத்தை முன்வைத்தார். அது போரின் முடிவில் வெளிநாட்டு நிறுவனங்கள் உக்ரேனின் சில கனிம வள ஒப்பந்தங்களைப் பெற முடியும் என்றும் முன்மொழிந்தார்.
மேலும் ரஷ்ய அதிபர் புட்டின் அரிய கனிமங்களை அமெரிக்கா அணுக அனுமதி அளிக்க தயாராக இருப்பதாக கூறினார். இதில் உக்ரேனில் உள்ள ரஷ்யா மீளக் கைப்பற்றிய பகுதிகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

![]()