முச்சந்தி

4 கோடி ரூபா மோசடி செய்தவர் இன்று அமைச்சர்!; உங்கள் பட்டியலும் நீளும் என்கிறார் சாணக்கியன் 

ஏனையவர்களின் மோசடிகள், ஊழல்களை பட்டியலிடும் இந்த அரசில் உரக் கூட்டுத்தாபனத்தில் நிதி மோசடியில் ஈடுபட்டு சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டு தப்பியோடி அரசுக்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய ஜயகொடி என்பவர் அமைச்சரவை அமைச்சராக பதவி வகிக்கிறார். இந்த விடயத்தின் உண்மைத்தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைச்சர் பதவி விலக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  இடம் பெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

கடற்றொழில் அமைச்சர்சந்திரசேகர் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இலக்காகக் கொண்டு ஒருசில விடயங்களை குறிப்பிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்புமனுக்கள் ஏதும் நிராகரிக்கப்படவில்லை. மன்னாரில் நிராகரிக்கப்பட்டுள்ள ஒரு வேட்புமனு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம். நாங்கள் அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தலைவர் பிரபாகரனின் பெயரை குறிப்பிடும் நிலைக்கு வந்திருப்பதையிட்டு வாழ்த்துகிறோம். நீங்கள் வாயால் மாத்திரமே வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அபிவிருத்தி பற்றி பேசுகின்றீர்கள். நிறைவடைந்த ஆறுமாத ஆட்சியில் எதனையும் செய்யவில்லை.வட மாகாணத்துக்கு நீங்கள் ஏதும் செய்யவுமில்லை, செய்யபோவதுமில்லை என்பதனை உங்களுக்கு வாக்களித்த மக்கள் தற்போது விளங்கிக்கொண்டார்கள்.

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பற்றி பேசும் நீங்கள், உடலகம,மற்றும் பரணமக ஆணைக்குழு மற்றும் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் பற்றி பேசவில்லை. இதனை குறிப்பிடும் போதே அமைச்சர் சபையை விட்டு வெளியேறுகிறார்.

தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2004 ஆம் ஆண்டு விவசாயத்துறை அமைச்சராக பதவி வகித்த போது பொது மேலாளராக ஜயகொடி, மனிதவள முகாமையாளராக மல்லிகா ஆராய்ச்சி, தொழில்நுட்ப முகாமையாளராக திசாநாயக்க என்பவரையும் நியமித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்த மனித வள முகாமையாளர் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜயகொடி என்பவர் உரக் கூட்டுத்தாபனத்தில் சேவையாற்றியுள்ள நிலையில், நிதி மோசடியில் ஈடுபட்டு தப்பித்துச் சென்றுள்ளார்.இதனால் அரசாங்கத்துக்கு 4கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டது. அந்த நபர் இந்த அமைச்சரவையில் அமைச்சராக உள்ளார்.இந்த விடயத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் அல்லது அந்த நபர் அமைச்சு பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button