சர்வதேச நீதிமன்றில் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி!… மனிதகுலத்திற்கு எதிரான படுகொலை விசாரணை !!… ஐங்கரன் விக்கினேஸ்வரா

(மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட ஒரு ஆசிய நாட்டின் முன்னாள் ஜனாதிபதிக்கு சர்வதேச நீதிமன்றில் தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனால் போர்க்குற்றங்களை இழைத்த மற்றய நாடுகளின் தலைவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கியமாக பர்மா, கம்போடியா, இந்தோனேசியா, சிறிலங்கா போன்ற நாடுகளிலும் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர்களும் , பதவியில் உள்ள தலைவர்களும் பிலிப்பைன்ஸ் தலைவரின் கைதை அடுத்து கதிகலங்கிப் போயுள்ளனர்)
பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) ஹேக்கில் உள்ள(Hague) சர்வதேச நீதிமன்ற விசாரணைக்காக மணிலாவில் இருந்து விமானம் மூலம் கடந்த வாரம் நாடு கடத்தப்பட்டார்.
இவருடைய ஆறு வருட ஆட்சிக் காலத்தில் பல ஆயிரம் மக்களை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டு இன்டபோலினால் கைது செய்யப்பட்டார்.
சர்வதேச விசாரணை :
அவர் பிலிப்பைன்ஸ் நாட்டின் பதவியில் இருந்தபோது மேற்பார்வையிட்ட போதைப்பொருள் மீதான கொடிய ஒடுக்குமுறையுடன் தொடர்புடைய மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்சாட்டை தற்போது எதிர்கொள்கிறார்.
முன்னாள் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஹாங்கொங்கிற்கான ஒரு தனிப்பட்ட பயணத்திலிருந்து திரும்பிய வேளை மணிலா விமான நிலையத்தில் வைத்து கடந்த மார்ச் 11ம் திகதி செவ்வாயன்று பொலிஸார் கைது செய்தனர்.
79 வயதான அவர் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படும் முதல் ஆசிய முன்னாள் அரச தலைவராக மாறியுள்ளார். தனது நாடுகடத்தலை எதிர்த்துப் போராடிய டுடெர்ட்டே, 2016 முதல் 2022 வரை பிலிப்பைன்ஸை வழிநடத்தினார்.
மணிலாவில் பதவிக் காலத்தில் அவர் மேற்கொண்ட கொடூரமான போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கையில் பல ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
டிகொங் என்று அழைக்கப்படும் வழக்கறிஞரான ரோட்ரிகோ டுடெர்டே பிலிப்பைன்ஸின் 16 வது ஜனாதிபதி ஆவார். அவர் 22 வருடங்களுக்கும் மேலாக 1,449,296 மக்கள்தொகை கொண்ட மிண்டானாவோ மாகாணத்தின் டவாவோ நகரத்தின் மாநகரத் தலைவராக பணியாற்றினார்.
அவரே பிலிப்பைன்ஸின் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றிய மாநகரத் தலைவர்களில் ஒருவராவார். அதற்கு முன்பு துணை மாநகரத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.
போதை பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான கடுமையான கொள்கைகளுக்காக உள்ளூரில் இவர் பெரிதும் புகழ் பெற்றவராவார். இதனால் அமெரிக்க டைம் இதழ் இவரை “கடுமையாக தண்டிப்பவர்” என பெயரிட்டுள்ளது.
இவரின் ஆதரவுடனேயே போதை மருந்து கையாளுபவர்கள், குற்றவாளிகள், கமற்றும் பிற
சட்டவிரோத குழுக்களை தண்டனைக் கொலை செய்ததாக கருதப்படுகின்றது.
இருபது ஆண்டுகளுக்கும் மேலான
பிலிப்பைன்சின் கொலைத் தலைநகரம் என்பதிலிருந்து தென்கிழக்கு ஆசியாவின் மிகவும் அமைதியான நகரமாக மாற்றினார் என்றும் அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாகப் போட்டியிட பலமுறை அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டும் 2015 வரை தவறான அரசமைப்பு எனக் கூறியும் குடும்ப எதிர்ப்பு காரணமாகவும் செவிமடுக்கவில்லை. இருப்பினும், நவம்பர் 21, 2015ஆண்டில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு செய்தார்.
அவர் ஜனாதிபதி தேர்தலில் 39.01% வாக்குகளுடன் வெற்றி பெற்றார். அவரது துணை ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறவில்லை. எனவே லிபரல் கட்சியின் லெனி ராப்ரெடோ துணை ஜனாதிபதியானார்.
ஆனால் அக்டோபர் 2021 இல், ரோட்ரிகோ டுடெர்டே 2022 இல் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடவில்லை என்றும் அரசியல் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார்.
ஆட்சியிலிருந்து விலகிய பின்னரே அவர் மீது பாரிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. நீண்ட காலமாக சட்ட ரீதியாக அவர் போராடி வந்தார். ஆனால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் பேரில் மணிலாவில் கைது செய்யப்பட்ட பின்னர், பிலிப்பைன்ஸின் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ டுடெர்டே (Rodrigo Duterte) நெதர்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார்.
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம்:
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court -ICC) நெதர்லாந்தின் டென் ஹேக் நகரில் அமைந்துள்ள ஒரு அரசுகளுக்கிடையேயான அமைப்பு ரீதியான பன்னாட்டு நீதிமன்றம் ஆகும்.
உலகில் இனப்படுகொலை, மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்டது. இது நாடுகளுக்கிடையேயான தகராறுகளை விசாரிக்கின்ற ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான பன்னாட்டு நீதிமன்றத்திலிருந்து வேறுபட்டது.
123 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன, ஆனால் ரஷ்யா, இந்தியா, ஐக்கிய அமெரிக்கா போன்ற சில நாடுகள் இந்த அமைப்பை கண்டனம் செய்ததுடன் உறுப்பினராக சேரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிலிப்பைன்ஸ் முன்னாள் ஜனாதிபதி ரோட்ரிகோ, ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இத்தனைக்கும் தெற்காசிய நாடான பிலிப்பைன்சில் சட்டவிரோத போதைப்பொருள் கலாச்சாரத்தை ஒழிக்கும் முயற்சியிலேயே ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் ஜனாதிபதி துப்பாக்கியால் பலரை சுட்டுக்கொன்றதாகவும் கூறப்பட்டது. இதையடுத்து நெதர்லாந்து நாட்டின் சர்வதேச நீதிமன்றத்தில் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
ரோட்ரிகோ நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும்போது அவரது ஆதரவாளர்கள் திரண்டு நின்று கோஷங்களை எழுப்பினர். நீதிமன்றில் தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்பதாக ரோட்ரிகோ டியுடெர்ட் தெரிவித்தார்.
கைதான பின்னர் அவர் நாட்டு மக்களுக்கு பேசுகையில், நான் தான் நம் சட்டம் மற்றும் ராணுவத்தை வழிநடத்தினேன். உங்களை பாதுகாப்பேன் என்று கூறினேன். இதற்கான அனைத்துப் பொறுப்பையும் நானே ஏற்கிறேன் என கூறியிருக்கிறார்.
தற்போது ரோட்ரிகோ தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படும் என்பது உறுதியாகியுள்ளது.
மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை மேற்கொண்ட ஒரு ஆசிய நாட்டின் முன்னாள்
ஜனாதிபதிக்கு தண்டனை வழங்கப்பட உள்ளது. இதனால் போர்க்குற்றங்களை இழைத்த மற்றய நாடுகளின் தலைவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
முக்கியமாக பர்மா, கம்போடியா, இநதோனேசியா, சிறிலங்கா போன்ற நாடுகளிலும் பல படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. இந்நாடுகளின் முன்னாள் ஆட்சியாளர்களும் , பதவியில் உள்ள தலைவர்களும் பிலிப்பைன்ஸ் தலைவரின் கைதை அடுத்து கதிகலங்கிப் போயுள்ளனர்.
![]()