முச்சந்தி

வெளிச்சத்துக்கு வந்த பட்டலந்த வதைமுகாம்: நீதி மறுக்கப்பட்ட சத்துருக் கொண்டான் படுகொலை!… நவீனன்

தற்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்படும் பட்டலந்த வதைமுகாம் பற்றிய விவகாரம் அனுரவின் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பட்டலந்த கொடூர வதைமுகாம் :
1987- 1989 ஜேவிபி கிளர்ச்சியினருக்கு எதிரான பட்டலந்த வதைமுகாம் கொடுமைகள், தற்போது ஜே.வி.பி யினர் ஆட்சியதிகாரத்துக்கு வந்ததன் பின்னர், சுமார் 37 ஆண்டுகளுக்கு முந்திய உண்மைகளை வெளிக்குக் கொண்டு வந்துள்ளனர்.
அதாவது ஜே.வி.பி. யினர் ஆட்சிக்கு வந்ததால்தான் ஜே.வி.பி யினருக்கு எதிரான சட்டவிரோதக் கொடிய செயல்களை அம்பலத்துக்குக் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் வடக்குக் கிழக்கில் பட்டலந்தை போன்ற வதை முகாம்கள் பல இருந்தன. அரச படைகளாலும், இராணுவ துணைக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு இதுவரை விசாரணைகள் எதுவும் நடைபெறவில்லை.
இவற்றை ஆராய்ந்து நீதி வழங்கும் நேர்மை கடந்தகால சிங்கள அரசாங்கங்களுக்கு இருக்கவில்லை. தற்போது ஆட்சியில் உள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஜேவிபி சகாக்கள் கொல்லப்பட்டதனால் பட்டலந்த வதைகள் கொலைகளை விசாரிக்க முன்வந்துள்ளது.
சிறிலங்கா அரச பயங்கரவாதம்:
நீண்டகாலமாக சிறிலங்கா அரச பயங்கரவாத நடவடிக்கைகளால் தமிழர்களுக்கு ஏற்பட்ட வதைகள், கொலைகள், காணாமல் ஆக்கப்பட்டதை விசாரணை நடாத்தி நீதி வழங்கும் என்பதை எதிர்பார்க்க முடியாது.
தேர்தல் வெற்றிக்காகவே பேச்சளவில் இன நல்லிணக்கம், சம தருமம், தேசிய ஒற்றுமை என பறைசாற்றும் தற்போதைய அனுர அரசு தமிழர் மீதான படுகொலைகளுக்கு நீதி வேண்டும் என்று கேட்பதே நகைப்புக்கிடமாகும்.
தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைகளுக்கு நீதி வழங்கும் என்று நம்பிக்கை கொள்ள முடியாது. ஜெனிவாவில் மனித உரிமை மீறல்களை உள்ளக விசாரணை மூலமே தீர்க்க முடியும் என்று உறுதியாக அனுர அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இனியும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
இன நல்லிணக்கம், உண்மையை கண்டறிதல் என்ற அடிப்படையில் தேர்தல் பரப்புரையில் தெரிவித்து ஆட்சியை பிடித்துள்ள இந்த அரசும் எவ்வகையிலும் தமிழ் மக்களின் இறையாண்மையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பது தெரிகிறது.
35 ஆண்டு கடந்துள்ள நிலையில் மட்டக்களப்பை உலுக்கிய சத்துருக்கொண்டான் படுகொலைகள் பொய்யாகிப்போன நீதி விசாரணைகளால் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
1990ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் 09ம் திகதி நடைபெற்ற அப்பாவித் தமிழ் மக்களின் மீதான படுகொலையே மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மிகக்கொடூரமான படுகொலை எனக் கூறப்படுகின்றது.
ஈழத்தில் பல இடங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும் இந்த சம்பவம் நடைபெற்று 35 ஆண்டு கடந்துள்ள நிலையில் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் யாரும் இலங்கை அரசாங்கத்தினால் இதுவரை தண்டிக்கப்படவில்லை என்பதே அந்த மக்களின் ஆராதரணமாக உள்ளது.
தற்போது மாற்றங்களை மையப்படுத்தி ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசாங்கமும் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதி வழங்கும் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர். காலங்காலமாக தமிழ் மக்களின் மீது போர் தொடுத்த சிங்கள அரசுகள் ஒரு போதும் நீதியை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ் மக்கள் அறிவார்கள்.
முள்ளிவாய்க்கால் படுகொலைகள் குறித்து சர்வதேசமும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தாலும் இதுவரை எவரும் குற்றஞ் சாட்டப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையே மட்டக்களப்பில் நடைபெற்ற இது போன்ற பல நூறு படுகொலைகளுக்கு பதிலளிக்காமல்
இலங்கை அரசும், சர்வதேசமும் தட்டிக் கழித்து வருகிறது.
மட்டக்களப்பு படுகொலையின் கோரக்களம் :
இரண்டாம் ஈழப் போரில் மட்டக்களப்பை பொறுத்தமட்டில் 1990ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் என்பது படுகொலைகளின் கொடூரமான மாதமாகவே அமைந்துள்ளது.
சிங்கள ஆட்சியாளர்களால் திட்டமிட்டவகையில் தமிழர்கள் என்ற ஒரே காரணத்திற்காக குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் என அனைவரையும் கண்மூடித்தனமாக சுட்டும் வெட்டியும் பாலியல் பலாத்காரம் செய்து கொடுமைப்படுத்திய சம்பவங்கள் மட்டக்களப்பு மக்களை பெரிதும் பாதித்துள்ளது.
படுகொலையான அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்கவிடாமல் அடுத்தகட்டத்திற்கு நகர்வதென்பது சர்வதேசத்திற்கான கண்துடைப்பாக அமையுமே தவிர சிறிலங்கா நாட்டின் உண்மையான இன நல்லிணக்கத்திற்கு வழியமைத்துக் கொடுக்கப் போவதில்லை என்பது புலப்படும்.
நீதி விசாரணை இல்லை :
இலங்கை அரசாங்கத்தினால், இப்படுகொலைச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தவென இரு விசாரணை ஆணைக்குழுக்கள் முன்பு நியமிக்கப்பட்டன.
பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தினால் ஓய்வுபெற்ற நீதிபதியான கே.பாலகிட்ணர் அவர்கள் இவ்விசாரணைகளை நடத்தவென அக்காலத்தில் நியமிக்கப்பட்டார்.
மிக கொடூரமான இச்சம்பவத்தை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கைப்படி 27 வயதான மோகன சுந்தரி எனும் தாயும் அவரது 3 மாதக்குழந்தையும் படையினரால் “மண்ணா” கத்திகளால் சாகும்வரை குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர் எனவும். அத்தோடு 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கும் குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் இச்சம்பவத்தின் போது கொல்லப்பட்டுள்ளனர்.
நீதிபதி தனது அறிக்கையில் படுகொலை நிகழ்ந்ததற்கான வலுவான சாட்சியங்கள் இருப்பதாகவும் குற்றவாளிகளுக்கெதிரான கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.
ஆனாலும் இதுவரை இவ்வாறான சட்ட நடவடிக்கைகளோ, காவல்துறை விசாரணைகளோ மேற்கொள்ளப்பட்டதாக தகவலெதுவும் இல்லை. அவர்கள் இலங்கையின் நீதிமன்றங்களினால் தண்டிக்கப்படவில்லை சம்பவம் நடந்து இன்று 35 ஆண்டுகளாகியும் இக்கொலைக்கான நீதி வழங்கப்படவில்லை.
சர்வதேச விசாரணை கோரிக்கை:
அப்பாவித் தமிழ் மக்கள் தங்களது சொந்தங்களை இழந்த உறவுகள் பலர் 35 ஆண்டுகளுக்கு பின்னரும் தங்களது உறவுகளை நினைவு கூற சிங்கள அரசாங்கங்கள் அனுமதிப்பதில்லை. கடந்த பல வருடங்களாக மிகுந்த கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே தங்களது உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
கடந்த 35 ஆண்டுகளாக இலங்கையில் இருந்த எந்த அரசாங்கங்களும் விசாரணைகளை நடாத்தி குற்றவாலிகளை தண்டிக்கவில்லை எனவே இனிமேலாவது சிங்கள
ஆட்சியாளர்கள் தங்களுக்கான நீதி பெற்றுத்தருவார்கள் என்ற நம்பிக்கையை தமிழ் மக்கள் இழந்து விட்டனர்.
தமிழ் மக்கள் தொடர்ந்தும் சிறிலங்கா அரசாங்கத்தை நம்புவதற்கு தயாராக இல்லை. பரந்த நீதிப்பொறிமுறைக்கு ஊடாக தங்களுக்கு சர்வதேச நீதிபதிகளைக் கொண்ட ஒரு சிறப்பு நீதிமன்றம் ஊடாக ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை ஒன்றை ஆரம்பித்து குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டிக் கொடுப்பதுடன் இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளையும் வழங்கவேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button