இலக்கியச்சோலை

‘கறுப்பு நட்சத்திரங்கள்’… செங்கதிரோன் ஆற்றிய நயவுரை

அழகு குணசீலன் அவர்களின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்) நூல் 01.03.2025 அன்று கிழக்குப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் மா. செல்வராசா முன்னிலையிலும், கிழக்குப் பல்கலைக்கழகக் கலாசார பீடத் தமிழ் கற்கைகள் துறைத் தலைவர் பேராசிரியர் சி. சந்திரசேகரம் தலைமையிலும் மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடைபெற்றபோது பன்முகப்படைப்பாளியும் திறனாய்வாளருமான செங்கதிரோன் த. கோபாலகிருஸ்ணன் ஆற்றிய நயவுரை.

கதை சொல்லும் மரபு ஆதிகாலத்திலிருந்தே மனிதனின் வாழ்வியலோடு வளர்ந்து வந்ததொரு கலையாகும்.

உலகில் முதல் கதையாக அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட கிரேக்க சிற்பமொன்றுதான் அடையாளப்படுத்தப் பெற்றுள்ளது. ஆற்றில் முதலையின் முதுகில் குரங்கொன்று உட்கார்ந்து செல்வதுபோல் அமைந்த சிற்பம்தான் அது. இச் சிற்பம் கூறும் கதை நமக்குப் பரிச்சயமானதே. ‘குரங்கும் முதலையும்’ கதை குழந்தைப் பருவத்திலிருந்தே கூறப்பட்டுவரும் கதைதான்.

உலகம் எத்தனையோ இயற்கை அழிவுகளைக் கண்டிருக்கலாம். போரினால் நாடுகள் சாம்பல் மேடாகிப் போயிருக்கலாம். ஏடுகள் அழிவுற்றிருக்கலாம். ஆனால், கதைகள் காலத்தை வென்று வாழ்கின்றன. வாய் மொழிக்கதைகளைக் காப்பாற்றுவதற்காக முதலில் சுவீடன் நாடு முடிவு செய்து 2003 முதல் மார்ச் 20 ஆம் திகதியைக் கதை சொல்லும் நாளாகக் கொண்டாடி வருகின்றது. பின்னர் முழு உலகமும் இத்தினத்தைக் கதை சொல்லும் நாளாக அங்கீகரித்தும் உள்ளது.

குகைகளில் கீறல்களாகவும், ஆதிவாசிகளின் உடல்களில் பச்சை குத்திய படிமங்களாகவும் கதைகள் உலகில் உலாவந்தன. பின்னர் இலைச் சருகுகளிலும் பனை ஓலைகளிலும் கதைகள் வளர்ந்தன.
விடுகதைகளும் பழமொழிகளும்கூட தமக்குள் கதைக்கான கருக்கள் நிரம்பியவைதான்.

பூம் பூம் மாட்டுக்காரன்- குடுகுடுப்பைச் சாத்திரக்காரன்- குறி சொல்லும் மந்திரவாதி எல்லோரும் தமக்குள் கதைகளைப் பதுக்கி வைத்துள்ளனர். காகம் ஏறப் பனம்பழம் விழுந்ததும் ஒரு கதைதான் எனக் கவிஞர் காசி ஆனந்தன் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார். வேலியே பயிரை மேய்ந்தது என்பது ஒரு முரண்நகைக் கதை. எனவே கதைகள் மனிதனோடு கூடப்பிறந்தும் கூடவே வருகின்றதுமான ஒரு வாழ்வியல் கூறாகும்.

ஒரே கதை வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு விதமாகக் கூறப்படுகி;ன்றது. உதாரணமாகக் ‘காகமும் நரியும்’ கதையைக் கூறலாம்.

காகத்தை நரி ஏமாற்றிய கதை நாம் எல்லோரும் அறிந்ததே. சீனாவிலே இக்கதை வேறு விதமாகக் கூறப்படுகின்றது.

பாட்டியிடம் பசிக்கிறது என்று கூறிக் காகம் வடை வாங்கிச் சென்றதாம். காகத்திடம் நரி பாட்டுப்பாடச் சொன்னதாம். காகம் பாடத் தொடங்க வடை கீழே விழுந்ததாம். நரி அதனைக் கவ்விக் கொண்டு ஓடியதாம். காகம் கா…… கா…….. என்று கத்தியதாம். நூற்றுக்கணக்கான காகங்கள் கூடி நரியைக் கொத்திக் கொன்று தமக்கு இரையாக்கினவாம்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சீனப் புரட்சி. சுரண்டுவோரின் ஆதிக்கத்தை மக்கள் புரட்சி தகர்த்த வரலாறு. இது காகமும் நரியும் கதை நாடுவிட்டு நாடு நகரும்போது அந்த நாட்டின் சமூக- பொருளாதார- அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மொழி மாற்றம் உறும்போது அல்லது மொழி பெயர்க்கப்படும்போது எத்தகைய மாற்றத்தை அது உள்வாங்குகின்றது என்பதை இந்த உதாரணத்திலிருந்து உணர்ந்து கொள்ள முடியும்.

தமிழ்ச் சூழலில் பண்டைக்காலத்திலிருந்தே கதை சொல்லும் மரபு இருந்து வந்திருக்கிறது.. கதை சொல்லிகள் இருந்திருக்கிறார்கள். ஜரோப்பியரின் வருகைக்கு முன்னரே அதாவது அச்சியந்திரம் வரும் முன்னரே தமிழர்களிடம் ஓலையும் எழுத்தாணியும் இருந்த காலத்திலேயே தமிழில் கதைகள் இருந்திருக்கின்றன.

கதைகள் கால தேச வர்த்தமானங்களுக்கூடாகச் சிறுகதை – நாவல் – தொடர்கதை – உருவகக் கதை- குட்டிக் கதை – குறுங்கதை – ஒரு பக்கக் கதை – ஒரு பத்திக்கதை – சித்திரக்கதை மற்றும் மாத்திரைக் கதைகளாகவும்;;; நவீன நாடகங்கள் – கவிதை – காவியம் – குறும்படம் – திரைப்படம் எனப் பல அவதாரங்களை எடுத்துள்ளன. இவைகள் எல்லாமே கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. இப்போதும் கதைகள் தேவைப்படும் சூழலில்தான் நாம் வாழ்கின்றோம். கூட்டுக் குடும்பத்தில் பாட்டிமார்களும் தாத்தாமார்களும் தமது பேரப் பிள்ளைகளுக்கு கதை சொல்லிகளாகவே மாறினர். ஆனால், இப்போது கூட்டுக் குடும்பமும் தொலைந்;து பாட்டி தாத்தார்மார்களும் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்துபோய் தொலைக்காட்சிகளும் ‘செல்’ போன்களும் பாட்டிமார்களினதும் தாத்தாமார்களினதும் இடத்தைப் பிடித்துக் கொண்டு குழந்தைகள் எந்திரப் பொம்மைகள்போல் உலாவருகிறார்கள்.

குழந்தைகளுக்கு- சிறுவர்களுக்கு மட்டுமல்ல இளைஞர்களுக்கும்- பெரியவர்கள் மற்றும் முதியவர்களுக்கும்கூட அவர்களின் மனங்களைச் செழுமைப்படுத்தவும் உளவியல் அழுத்தங்களுக்கு உள்ளாகும் அவர்களை ஆசுவாசப்படுத்தி ஆற்றுப்படுத்தவும் புதிது புதிதாகக் கதைகள் தேவைப்படும் காலத்தில்தான் நாம் இப்போதும் காலூன்றி நிற்கின்றோம்.
இப்படியானதொரு காலப் பின்னணியில்தான் அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ எனும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் நூல் முனைக்காடு அழகு வெளியீடாக புதுக்குடியிருப்பு காந்தள் அச்சகம் மூலம் வெளிவந்துள்ளது.

தமிழ்ச் சூழலின் புனைகதைப் பொதுவெளியில் மொழி பெயர்ப்புக்கள் ஒரு புதிய பரிமாணத்தையும் பரிணாமத்தையும் ஏற்படுத்திவந்துள்ளன.

‘பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும்’; என மகாகவி பாரதி எடுத்துவைத்த அடியையொற்றிக் கருமங்கள் ஆற்றத் தொடங்கியவர்களில் ஈழத்தைப் பொறுத்தவரை விபுலானந்த அடிகளே முன்னோடியாகத் திகழ்கின்றார்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்களின் சில பகுதிகளை ‘மதங்க சூளாமணி’ ஆகத் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ப மடைமாற்றித்தந்தார்.

கதைகளைப் பொறுத்தவரை தமிழ் இலக்கியப் பொதுவெளியில் ஆரம்பத்தில் வங்காள மற்றும் மலையாளக் கதைகளே மொழி பெயர்க்கப்பட்டன. அதற்குக் காரணம் வங்காள மற்றும் மலையாளச் சிறுகதைகளே தரம் மிக்கவையாகத் திகழ்ந்தன.

அந்தவகையில் மலையகத்தில் தலாத்துஓயாவைச் சேர்ந்த கே.கணேஷ் அவர்கள் கே.ஏ.அப்பாஸின் சிறுகதைகளை மொழி பெயர்த்துக் ‘கல்கி’ இதழில் 1940 களில் வெளியிட்டார். டாக்டர் முல்ராஜ் ஆனந்தின் ஆங்கிலப் புனைவுகளையும் மொழி பெயர்த்தார். ஒரு மார்க்ஸியவாதியான கே.கணேஷ் கம்யூனிஸநாட்டு எழுத்தாளர்களுடன் தொடர்பைப் பேணி வந்தவகையில் பல்கேரிய, உக்ரேனிய எழுத்தாளர்களின் படைப்புக்களையும் மொழி பெயர்த்துள்ளார்.

எழுத்தாளர் முல்ராஜ் ஆனந்த் 1946 இல் இலங்கை வந்திருந்தபோது அவர் முன்னிலையில் தலாத்துஓயா கே.கணேஷ் முன்னின்று ‘இலங்கை எழுத்தாளர் சங்கம்’ ஒன்றினை உருவாக்கினார். இவ்வெழுத்தாளர் சங்கத்தின் தலைவராக சுவாமி விபுலானந்தரும் உப தலைவராக மார்ட்டின்விக்ரமசிங்கவும் இணைச் செயலாளர்களாகக் கணேஷ_ம், சரச்சந்திராவும் தெரிவுசெய்யப்பட்டனர் என்ற தகவலை இத்தருணத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன்.

அநேகமாகப் பிறமொழிக் கதைகள் மூல மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு வந்து பின்னர் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டவையாகவே இருந்து வந்துள்ளன.
மூலம் ஆங்கிலமாகவுள்ள படைப்புக்களும் அவ்வப்போது தமிழுக்கு ஏனைய பலரால் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டுள்ளன.

மலையாளச் சிறுகதைகளை ஈழத்து இலக்கியப் பரப்பில் மொழி;பெயர்ப்புச் செய்தவர்களில் வீ.ஆனந்தன் அவர்களும் ஒருவர். அதேபோல ஆங்கில ஆக்கங்களைத் தமிழுக்குத் தந்தவர்களில் ராஜஸ்ரீகாந்தனைக் குறிப்பிடலாம். எழுத்தாளர் எஸ்.பொ. அவர்கள் ஆபிரிக்கக் கதைகளை ஆங்கிலத்தினூடாகத் தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். இலங்கையில் சிங்கள மொழிச் சிறுகதைகளை திக்குவல்லை கமால் போன்றவர்கள் தமிழுக்கு மொழி பெயர்த்துள்ளனர். அதுபோல் தமிழ்ச் சிறுகதைகளைச் சிங்களத்திற்கு மொழி பெயர்த்தவர்களாக மடுளுகிரிய விஜயரட்ன – உபாலி வீரரட்ன – ஹேமச்சந்திர பத்திரன ஆகியோரைக் குறிப்பிடலாம்.

சிங்களச் சிறுகதைகளை தமிழில் மொழி பெயர்த்து அறிமுகம் செய்ததில் டொமினிக் ஜீவாவின் ‘மல்லிகை’ சஞ்சிகைக்குப் பெரும்பங்கு உண்டு. அண்மைக்காலமாக தமிழ் – சிங்கள மொழிப் பரிவர்த்தனைகளைக் கொழும்பில் ‘கொடகே’ நிறுவனம் நிறுவனரீதியாக முன்னெடுத்து வருகின்றது.

தமிழகத்தில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளுக்கென்றே ‘திசைஎட்டும்’ என்ற மாசிகை மாதந்தோறும் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

அரேபியச் சிறுகதைகளைத் தமிழில் மொழி மாற்றம் செய்தவர்களில் ஈழத்தில் அஸ்ரப் சிஹாப்டீனும் ஒருவர்.

இவ்வாறு தமிழ் இலக்கியப் பொதுவெளியில் மொழிபெயர்ப்புக் கருமங்கள் நிலவிய – நிலவிவருகின்றதொரு பகைப்புலத்தின் நீட்சியாக அழகு குணசீலனின் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ மொழி பெயர்ப்புச் சிறுகதை நூல் வெளிவந்தள்ளது. எனினும் இதுவரை தமிழில் வெளிவந்த அல்லது மேற்கொள்ளப்பெற்ற பிறமொழிச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு முன்னெடுப்பபுக்களையும்விட ஒப்பீட்டளவில் ‘கறுப்பு நடசத்திரங்கள்’ பல விடயங்களில் தனித்துவச் சிறப்புடையத்தக்கதாயும் சிலாகித்துக் கூறவேண்டிய பண்புகளுடனும் விளங்குகின்றது.

மொழிபெயர்ப்பு என்பது எளிதான கருமமல்ல. சுயமாக ஒரு படைப்பை ஆக்குவதைக் காட்டிலும் மொழிபெயர்ப்புப் பணி கடினமானது. மொழிபெயர்ப்பாளரைப் பொறுத்தவரை அவர் இருமொழிப் புலமையாளராக இருப்பது மட்டுமல்ல அவற்றின் புனைவுமொழி பற்றிய புரிதலும் உணர்திறனும் அவருக்கு அவசியம்.

‘உலகமயமாக்கல்’ செயற்பாடுகளின் ஊடாக உலகம் ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட இன்றைய காலத்தில் மொழிபெயர்ப்புக் கலை முக்கியத்துவம் பெறுகிறது. ‘மொழி பெயர்ப்பு’ என்ற சொல்லை விட ‘மொழிமாற்றம்’ என்ற சொல்லையே நான் பயன்படுத்த விரும்புகின்றேன். மூலமொழியிலுள்ள படைப்பொன்றை பிறிதொரு மொழிக்கு மாற்றுகிற செயல்பாடாகவே அதனை நோக்க வேண்டும்.

ஒரு மொழிபெயர்ப்பாளன் அல்லது மொழிமாற்றம் செய்பவன் இரு மொழிகளிலும் நிறைந்த புலமையும் சொல்வளமும் உடையவராக இருப்பது மட்டுமல்ல அவ்விரு மொழிகளுக்குமுரிய சமூக, பொருளாதார அரசியல் கலை இலக்கியப் பண்பாட்டு அம்சங்களுடனும் பரிச்சயம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் மொழிபெயர்ப்பு அல்லது மொழிமாற்றம் செய்யப்பட்ட படைப்பொன்றைப் படிக்கும்போது அது சொந்த மொழிப் படைப்பொன்றைப் படிக்கும் உணர்வை நுகர்வோனுக்கு- வாசகனுக்கு ஏற்படுத்தும்.
ஒருவகையில் இச் செயற்பாடு கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தைக்கு ஒப்பானது.

நான் முன்பு குறிப்பிட்ட தலாத்துஓயா கே.கணேஸ் அவர்கள் ‘ஞானம்’ சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலொன்றில் “கூடுவிட்டுக் கூடுபாய்ந்து- உருமாறி- உடைமாறி உணர்வுகளை ஒருமைப்பட உணர்த்தி- மூல ஆசிரியரின் கருத்தை கற்பு நிலை மாறாது காப்பாற்றவேண்டிய கடமை உள்ளவனாக மொழிபெயர்ப்பாளன் இருக்க வேண்டும். மொத்தத்தில் இந்தக் கூடுவிட்டுக் கூடுபாயும் பணியில் யாருக்காக இலக்கியம் ஆக்கப்படுகின்றதோ அவர்களுக்கு மூல ஆசிரியரின் உட் கருத்தை மொழிபெயர்ப்பாளன் அனைவரும் புரிந்து கொள்ளும் நடையில் சுவைபட உணர்த்துவதே பெரும் கடமையாகும். இதற்கு நிறைய சரித்திர ஞானமும், மொழி பெயர்க்கப்படும் மக்களின் பழக்க வழக்கங்கள் பற்றியும் கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

‘கறுப்பு நட்சத்திரங்கள்’ என மகுடம் தாங்கிய இந்நூலின் உள்ளடக்கமாகவுள்ள மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் அனைத்தும் நூலாசிரியரான அழகு குணசீலன் அவர்கள் சுவிஸ்சர்லாந்து நாட்டில் தொழில்ரீதியாக ஒரு மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிவது மட்டுமல்லாமல் தன்னளவில் அவர் ஒரு ஆக்க இலக்கியப் படைப்பாற்றல் மிக்கவராகவும் திகழ்வதால் கனகச்சிதமாக இதிலுள்ள கதைகள் மொழிபெயர்ப்புக்குள்ளாகி அல்லது மொழி மாற்றம்பெற்றுச் சிறப்புடைத்தாகி உள்ளன. இந்தக் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை அழகு குணசீலனுக்கு நன்றாகவே கைகூடியுள்ளது என்பதற்கு இக்கதைகள் கட்டியம் கூறி நிற்கின்றன.

ஆம்! இந்நூலிலுள்ள கதைகளை வெறுமனே ஒரு வாக்கியத்தில் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எனக் கூறுவதைவிடவும், அழகு குணசீலனின் இரு மொழிப்புலமையும் அவரது படைப்பாற்றலும் அதாவது புனைவாற்றலும் ஒன்றையொன்று தழுவிக் கூடி முயங்கிக் கருவுற்று வளர்ந்து உரிய நேரத்தில் நோக்காடு உற்று இக்கதைகள் பிரசவிக்கப்பட்டிருக்கின்றன என்று கூறுவதே பொருத்தமானது. எனது இந்தக் கூற்றுக்கு ஆதாரமாக அவரே இக்கதைகளை நீண்டகாலக் கனவுகளாகத் தான் அடைகாத்து வந்தள்ளதாக இந்நூலிலுள்ள தனது உரையான ‘இதயம் பேசுகிறது’ பகுதியில் பதிவு செய்துள்ளார்.

தென்னமெரிக்கா – மத்திய ஜரோப்பா – ஆபிரிக்கா – அரபுப் பிரதேசம் – துருக்கி – இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளைக் கதைக்களமாகக் கொண்டு ஸ்பானிஷ் – ஆங்கிலம் – அரபு – துருக்கி- ஜேர்மன்- சிங்களம்- ஹிந்தி மொழிகளில் பிறந்த இந்நூலிலுள்ள கதைகள் பல்வேறு மொழியாக்கங்க@டாகப் பயணித்து இறுதியில் அனைத்தும் ஜேர்மன் மொழியிலிருந்து தமிழுக்கு அழகு குணசீலன் அவர்களால் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளமைகூட இந்நூலின் சிறப்புத் தகுதியாகும்.

நான் அறிந்தவரை பல்வேறு நாட்டுப் பல்வேறு மூலமொழிக்கதைகள் இறுதியில் தமிழுக்கு மடைமாற்றம் அதாவது மொழிமாற்றம் பெற்று அதுவும் ஒரு ஈழத்துப் படைப்பாளியினால் அது சாத்தியமாகி அது ஈழத்திலேயே பதிக்கப் பெற்று ஈழத்திலேயே வெளியிடப் பெறுவதும் இதுவே முதல் தடவையாகும். அந்த வகையில் இந்நூலை அழகாகவும், தரமாகவும் பதிப்பிப்பதில் பங்களித்த புதுக்குடியிருப்பு காந்தள் அச்சக உரிiயாளர் மதனுக்கும் பாராட்டுக்கள்.

கதைக்களங்களும் கதை மாந்தர்களும் வெவ்வேறு நாட்டவர்களாகவும் வெவ்வேறு மொழி பேசுபவர்களாகவும் இருப்பினும் வாழ்வியல் அனுபவங்களும் அவை எழுப்புகின்ற உணர்வு வெளிப்பாடுகளும் அவை தருகின்ற செய்திகளும் மனித சமூகத்திற்கு பொதுவானவையே என்பதை இந்நூலிலுள்ள கதைகள் எடுத்துக் காட்டுகின்றன. இக்கதைகளில் ஊடு பொருளாக மனித நேயமும் அறவிழுமியங்களுமே உள்ளனவென்பதால் இக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் அழகு குணசீலன் மிகுந்த சமூகப் பொறுப்புடன் செயற்பட்டுள்ளார் என்பதும் தெரிகிறது.

மேலும், ‘ஒளிபாய்ச்சும் கறுப்பு நட்சத்திரங்கள்’ எனத் தலைப்பிட்டு கலாநிதி சு.சிவரெத்தினம் அவர்கள் வழங்கியுள்ள இந்நூலுக்கான அணிந்துரையில் கூறியுள்ள, இவற்றை வாசிக்கும்போது ஒரு மொழிபெயர்ப்பையா வாசிக்கின்றோம் என்ற எண்ணமே தெரியவில்லை. மொழியினைப் பிரயோகித்த முறையிலும் கதை நகர்விலும் அதன் கருப் பொருளிலும் எல்லாமே எமது மக்களின் அனுபவங்களாக இருக்கின்றன’ எனும் கூற்றை நான் வழிமொழிகின்றேன்.

ஷேக்ஸ்பியருடைய ‘ஹம்லெட்’ – ‘கிங்லியர்’ – மாட்பெட் ஆகிய மூன்று நூல்களையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்த தமிழ் நாட்டைச் சேர்ந்த நீதிபதி எஸ் மகாராஜன் என்பவர் மொழிபெயர்ப்புக் குறித்துக் கூறிய கூற்றொன்றை இத்தருணத்தில் நினைவுகூர விரும்புகின்றேன்.

‘பிரெஞ்சுக்காரர்கள் ஆயிரக்கணக்கான வேற்றுமொழி நூல்களைப் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்திருகின்றார்கள். அதைப்போலவே பிரெஞ்சு மொழியில் இருக்கும் படைப்புக்களை அந்நிய மொழியில் தர உதவியிருக்கிறார்கள். இந்தக் கொடுக்கல் வாங்கல் மூலமாக பிரெஞ்சு உரைநடை மிகுந்த ஊட்டம் பெற்றிருக்கிறது. தமிழ் மொழிக்கு ஊட்டம் கொடுக்க விரும்புகிறவர்கள் மொழி பெயர்ப்பு வேலைகளில் இறங்கித்தான் ஆக வேண்டும்’.
இதுவே நீதிபதி மகாராஜனின் கூற்று.

அந்த வகையில் அழகு குணசீலன் அவர்கள் இக் ‘கறுப்பு நட்சத்திரங்கள்’ நூலினூடாகத் தமிழ் மொழிக்கும், இலக்கியத்திற்கும் ஒளிபாய்ச்சி ஊட்டம் அளித்திருக்கிறார். இவர் மென்மேலும் இவ்வாறான ‘விற்றமின்’ மாத்திரைகளைத் தமிழ்மொழிக்கும் இலக்கியத்திற்கும் தரவேண்டுமென்று அவரை அன்போடு கேட்டு இப்பெறுமதிமிக்க கருமத்தை அவர் ஆற்ற முன்வந்தமைக்காக அவரைப் பாராட்டியும் வாழ்த்தியும் விடைபெறுகின்றேன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.