கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் – 04 … சங்கர சுப்பிரமணியன்

பூஜை அறையை கோவில் மாதிரி மாற்றி விடுவார்கள். ஒன்று தான் பாக்கியிருக்கும். உங்களால் யூகிக்க முடிகிறதா? முடியவில்லை என்றால் நானே சொல்கிறேன். அந்த மீதம் என்னவென்றால் கொடிமரமும். அதையும் வைத்திருப்பார்கள் ஆனால் அவற்றை பூஜை அறைக்குள்ளே வைக்க முடியாதல்லவா?

கொடிமரத்தை பூஜை அறையில் வைக்க முடியாததால் பூஜை அறைக்கு எதிரே இன்னொரு இடத்தில்தான் வைக்க வேண்டும். ஏனென்றால் அதுதான் முறையாம். வீட்டுக்குள்ளே கருவறை மாதிரியே பூஜை அறை அமைப்பது முறையா என்பது தெரியவில்லை. இங்கே இன்னொன்றை குறிப்பிடவேண்டும். கட்டுரை திசைமாறுகிறது என்றாலும் சொல்ல வேண்டியதை சொல்லித்தானே ஆக வேண்டும்.

அப்படி கொடிமரத்தை வீட்டிலேயே வைத்தால் மற்றவர்கள் பார்த்து நகைக்கும்படி ஆகிவிடுமாம். ஆதலால் கோவில் மாதிரி செட்டப்பிலும் இருக்க வேண்டும் ஆனால் யாரும் எதுவும் நம்மை சொல்லி விடக்கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டியுள்ளது.

நான் சிறுவயதில் கிராமத்தில் வளர்ந்தவன். எங்கள் வீட்டிலோ அல்லது அங்கு எவர் வீட்டிலும் பூஜை அறை என்று ஒன்று கிடையவே கிடையாது. நகரத்திலும் என் உறவினர் நண்பர்கள் யார் வீட்டிலும் பூஜை அறையை நான் பார்த்ததில்லை. கடவுள் படத்தை சுவரில் தொங்க விட்டிருப்பார்கள். அல்லது சுவற்றிலேயே ஸ்டாண்ட் மாதிரி ஒன்றைப் பொருத்தி அதில்கடவுள் படத்ததை வைத்திருப்பார்கள்.

வசதி படைத்தவர்கள் தேவைக்கு அதிகமாக பெரிய வீடுகளைக் கட்டும்போது ஏதாவதொரு அறையை பூஜை அறையாக மாற்றிக் கொள்வார்கள். நிறைய துணி எடுத்துவிட்டு மீதமுள்ள துணியை வீணாக்க மனமின்றி பேண்ட்டின் அடிபாகத்தை பெரிதாக தைத்து பெல்பாட்டம் என்றொரு முறையை அறிமுகப்படுத்தியது போல் இந்த பூஜை அறை கலாச்சாரமும் வந்துவிட்டது.

சிலர் ஊரில் துணி எடுக்கும் விதம் வித்தியாசமாக இருக்கும். ஒரு பன்னிரெண்டு
வயது சிறுவனுக்கு மேல்சட்டைக்கும் கால்சட்டைக்கும் துணி எடுக்க வேண்டும் என்று வைத்துக் கொள்வோம். அச்சிறுவன் அக்கா மகனோ தங்கை மகனாகவோ வேறு
ஊரில் இருப்பான். தாய்மாமனாக உடன் பிறந்தாள் மகனின் மேலுள்ள பாசத்தால் பார்க்கப் போகும் போது மருமகனுக்கு ஆசையடன் துணியெடுக்க கடைக்கு போவான்.

இப்போதெல்லாம் அந்த மாதிரி அண்ணன் தம்பி உறவு அக்கா தங்கை உறவு என்பதெல்லாம் அரிதாகி வருகின்றது. அப்போதெல்லாம் மாமா மச்சான்என்றால்
அப்படியொரு பாசம். அந்த பாசத்தோடு மருமகனுக்கு துணியெடுக்க துணிக்கடை போவார் தாய்மாமன்.

கடைக்காரனிடம் பன்னிரெண்டு வயதுப் பையனுக்கு முழுக்கால் சட்டைக்கும் முழுக்கை சட்டைக்கும் துணி கொடுங்க என்பார். துணிக்கடைக்காரனுக்கு இவரின் மருமகன் எப்படி இருப்பான் என்று தெரியாது. கடைக்காரன் கற்பனைக்கு ஒரு வாட்டசாட்டமான பையனாகத் தெரிவான். ஏனெறால் வந்திருப்பவர் ஆஜானுபாகனாக இருப்பார்.

குறைவாக துணியைக் கொடுத்தால் தைப்பதற்கு போதாமல் போனால் துணி எடுத்தவர் மறநாள் வந்து திட்டுவார். கடை முதலாளியும் திட்டுவார். வேலைக்கும் பங்கம் வந்து விடும். அதிகமாக கொடுத்தால் தனக்கும் பிரச்சனையில்லை முதலாளிக்கும் வருமானம் என்பதால் கொஞ்சம் அதிகமாகவே துணியை வெட்டிக் கொடுப்பான்.

ஆனால் தையல்காரனிடம் பையனைக் கூட்டிச் சென்று அளவெடுக்கும் பொழுதுதான் அண்ணாச்சி துணி கூடுதலாகவே எடுத்திட்டிங்க என்று சொல்வார். உடனே பையனின் அப்பாவும் அண்ணாச்சி குறைவா இருந்தாதான் பிரச்சனை. மச்சான் தாராளமா எடுத்துட்டு வந்திருக்கிறார். வளரும் பிள்ளைதானே அதனால் அளவு எடுப்பதை எடுங்க ஆனால் துணியை வீணடிக்காமல் தாராளமாய் தைத்துக் கொடுங்கள் என்பார்.

உடன்பிறப்பும் மச்சானும் மகனுக்கு துணி எடுத்துக் கொடுத்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆனால் உடுப்பு தைத்து வந்தபின் மாமா பாசமாக வாங்கித் தந்தாரா அல்லது பரிதவிப்பதற்கு வாங்கித் தந்தாரா என்ற நிலை பையனுக்கு வரும். ஏனென்றால் சிறுவன் அந்த உடுப்புகளைப் போடும்போது சோளக்காட்டு பொம்மைக்கு போட்டது போல் இரட்டைக்கிளவியாக தொள தொள என்று இருக்கும்.

வேறுவழியில்லை. பையன் போட்டுத்தான் ஆகவேண்டும். அந்த நாட்களில் சிறுவர்களுக்கு திரும்ப உடுப்புகளை வெட்டி சரிசெய்து போடும் பழக்கம் இல்லை. சட்டைக்குள் இன்னொருவர் புகுந்து கொள்ளலாம். அது பெரிதாக இருந்தாலும் கீழே விழாமல் தோள்பட்டையில் நின்று கொள்ளும். ஆனால் இரட்டைக்கிளவியாக கால்சட்டை படக் படக் என்று கீழேவிழும்.

சிறுவனும் ஆசையாக மாமா வாங்கித் தந்ததை விட மனமின்றி கால்சட்டையை இடுப்பில் வேட்டி மாதிரி கட்டிக் கொள்வான். கூடுதல் கவனமாக இடுப்பில் இருக்கும் அரைஞான் கயிற்றை கால்சட்டை மேல் போட்டுக் கொள்வான். இப்படிப் பட்ட செயல் உடுப்பு கிழியுமட்டும் தொடரும்.

இப்படியெல்லாம் நடக்குமா? நடக்கும் என்பது மாடசாமி அண்ணாச்சிக்கு நன்றாகவே தெரியும். இன்னும் உங்களுக்கு நம்பிக்கை வரவில்லை என்றால் சான்றாக நானே இருக்கிறேன். அந்த காலத்தில் கைபேசி இல்லை. இருந்திருந்தால் என்னை வீடியோ எடுத்து மலரும் நினைவாக அதைவைத்து மகிழ்ந்து இருப்பார்கள்.

அதை குறிப்பாக என் மனைவியிடமும் முறையே மனைவி அவளது தம்பி தங்கைகளுடன் காட்டி இன்பத்தின் எல்லைக்கே போயிருப்பார்கள். இந்த மாதிரி அனுபவம் உங்களில் பலருக்கு நடந்திருக்கலாம். நான் இப்போது அதை எழுதும்போது உங்களுக்கும் அந்த நாள் ஞாபகம் வந்ததேன் நண்பனே என்ற ஃப்ளாஷ் பேக் எல்லாம் கண்முன் வந்துபோகும்.

இதுபோன்று அந்த குறிப்பிட்ட காலத்தில் ஃபேஷன் என்ற ஒன்றை தையற்காரர்கள் அறிமுகம்படுத்தி வருமானத்தை அதிகப்படுத்தும் அறிகுறியாகவும் இருந்திருக்கலாம். அதனால் துணி விற்பனை அதிகரிக்கவும் வாய்ப்பை உண்டாக்கியிருக்கலாம். ஒருவர் அதிகம் துணி அதிகம் எடுத்தால் பணப்புழக்கத்தில் கிடைக்கும் முன்னேற்றம் ஓராயிரம் பேர் எடுத்தால் என்னவாகும்?

ஆயிரம் பேர் கொஞ்சம் அதிகமாக பெல்பாட்டத்துக்கு துணி எடுத்தால்? அதுவே கொஞ்சம் கொஞ்சமாக ஒருலட்சம் பேர் துணி எடுத்தால்? அதுவே கோடிக்கணக்கானவர்கள் துணி எடுத்தால் பணப்புழக்கம் அதிகரிக்குமல்லவா? இப்பொது ஒரு திரைப்படம் நினைவுக்கு வருவதாக மாடசாமி அண்ணாச்சி சொல்கிறார். உங்கள் நினைவுக்கு அப்படி ஏதாவது வருகிறதா?

(தொடரும்…)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *