அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 20 வைத்தியர்கள் எம்.பி.க்களாக இருந்தும் நன்மை எதுவுமில்லை

10 ஆவது பாராளுமன்றத்தில் சுமார் 20 வைத்தியர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற போதும், சுகாதார சேவைகளைப் பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தையும் வெளிப்படுத்தவில்லையெனவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் வைத்தியர்கள் தற்போது பேசவில்லை எனவும் தெரிவித்தார்.
அவர்களில் 3 அல்லது 4 பேரைத் தவிர, மீதமுள்ளவர்கள் கடந்த அக்டோபர் வரை வைத்திய சேவையில் இருந்தனர். வைத்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் ஆழம் அவர்களுக்குத் தெரியும். ஆனால் மருத்துவர்களுக்கு அநீதி மற்றும் சுகாதார சேவைகளில் ஏற்படும் பாதிப்பு குறித்து அதிகாரிகளுக்கோ அல்லது ஜனாதிபதிக்கோ தெரிவிக்க அவர்கள் எந்தக் கருத்தையும் முன்வைப்பதற்கு முயற்சிப்பதை தாங்கள் காணவில்லை எனவும் தெரிவித்தார்.
கடந்த அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்தில் 13 வைத்தியர்கள் இருந்தபோது, வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் பிரச்சினையைத் தீர்க்க அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சுகாதார சேவைகளைப் பாதுகாக்கச் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
எனினும் தற்போதைய அரசாங்கத்திற்குள் வைத்தியர்களிடமிருந்து அத்தகைய ஆதரவை நாங்கள் காணவில்லை. இது ஒரு கடுமையான பிரச்சினை. வைத்தியர்கள் மற்றும் நாட்டின் இலவச சுகாதார சேவை மீது அவர்களுக்கு தேசிய பொறுப்பு உள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
![]()