இலங்கை

பொலிஸ்மா அதிபர் கைது தொடர்பில் சந்தேகம்!

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்னர், முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையம் ஒன்றில் கூட்டம் ஒன்று நடந்துள்ள நிலையில் அந்தக் கூட்டத்தில் ஏதேனும் சூழ்ச்சி திட்டமிடப்பட்டதா? என்ற சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று (05) புதன்கிழமை நடைபெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு மற்றும் கடற்றொழில், நீரியல் வளங்கள் அமைச்சின் ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் போது,

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பபிக்கப்படுவதற்கு முன்னர் கடந்த அரசாங்கத்தில் இருந்த பிரபல அமைச்சர் ஒருவரின் வர்த்தக மையத்தில் கூட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டவர்கள் தொடர்பில் பார்த்தால் அது பிரச்சினைக்கு உரியதே. குறித்த கூட்டத்தில் இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த சூளாகொடிதுவக்கு, கொழும்பு குற்றவியல் பிரிவில் இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் நெவில் ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வராமையினால் அவரின் சகா இனியபாரதியை அனுப்பியுள்ளார். இனியபாரதி ஹில்டன் ஹோட்டலில் இருந்துள்ளார். அவரின் வாகனத்தை சுதா என்பவர் செலுத்தியுள்ளார். இங்கு என்ன சூழ்ச்சி செய்யப்பட்டது என்று தெரியவில்லை.

இது தொடர்பில் உங்களுக்கு எதுவும் தெரியுமா? இனிய பாரதி என்பவர் கடந்த காலங்களில் பல்வேறு கொலைகளுடன் தொடர்புடையவர். பிள்ளையான் தொடர்பிலும் பல தகவல்கள் உள்ளன.

நீங்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக கூறுகின்றீர்கள். ஆனால் கணேமுல்லை சஞ்சீவவை கொன்ற பெண்ணை இன்னும் தேடுகின்றீர்கள். நாட்டின் பொலிஸ்மா அதிபரையும் தேட முடியவில்லை. உங்களுக்கு பொறுப்பு உள்ளது. பாதுகாப்பு தொடர்பான பிரச்சினை உள்ளது குறித்த கூட்டத்தில் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *