முச்சந்தி

குர்திஷ் போராளிகளின் போர்நிறுத்தம்! துருக்கியில் 40 ஆண்டுகால போராட்ட முடிவு! …. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(துருக்கியில் நாற்பது ஆண்டுகால தனிநாட்டு போராட்டத்தில் ஈடுபட்ட குர்திஷ் போராளிகள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். நீண்ட காலமாக தங்கள் இன அடையாளத்தைத் தக்கவைக்க குர்திஷ் மக்கள் போராடினர். ஆனால் அவர்களை எல்லை தாண்டியும் அழித்தொழிக்கத் துடித்தது துருக்கி)
தனிநாடு கோரி போராடும் குர்திஷ் போராளிகள் அமைப்பான பி.கே.கே-க்கும் துருக்கிக்கும் இடையிலான மோதல் 1984 இல் தொடங்கியது. இந்த மோதல் பல்லாயிரக்கணக்கான இறப்புகளுக்கு வழிவகுத்தது.
கடந்த வாரம் 27/2/25 குர்திஷ் அரசியல் குழு, பி.கே.கே அமைப்பு தனது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு சிறையில் இருந்து குர்திஷ் போராளித் தலைவர்
அப்துல்லா ஓஜலான் அழைப்பை விடுத்தார்.
எல்லை தாண்டி அழித்த துருக்கி:
நீண்ட காலமாக தங்கள் இன அடையாளத்தைத் தக்கவைக்க குர்திஷ் மக்கள் போராடினர். ஆனால் அவர்களை எல்லை தாண்டியும் அழித்தொழிக்கத் துடித்தது துருக்கி.
சிரியாவில் கடந்த ஆண்டு இறுதியில் குர்திஷ் போராளிகளுக்கு எதிராக தரை வழியாகவும், வான் வழியாகவும் துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பாரிய அழிவை அவர்கள் சந்தித்தனர்.
நாற்பது ஆண்டுகால கிளர்ச்சியை நடத்தி வரும் குர்திஷ் போராளிகள், தங்கள் சிறையில் அடைக்கப்பட்ட தலைவரால் போராட்ட அமைப்பை நிராயுதபாணியாக்க அழைப்பு விடுத்தார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு சனிக்கிழமை குர்திஷ் போராளிகள்
போர்நிறுத்தத்தை அறிவித்தனர்.
குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி அல்லது பி.கே.கே-யின் போர் நிறுத்த அறிக்கையை அக்குழுவிற்கு நெருக்கமான ஊடக நிறுவனமான ஃபிரத் செய்தி நிறுவனம் வெளியிட்டது.
1999 முதல் துருக்கியால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்துல்லா ஓஜலனைப் பற்றி குறிப்பிடுகையில், அந்தக் குழு கூறியது: “தலைவர் அப்துல்லா ஒஜலான் அமைதி மற்றும் ஜனநாயக சமூகத்திற்கான அழைப்பை செயல்படுத்துவதற்கு வழி வகுக்கும் வகையில் இன்று முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளார்.
துருக்கியால் தாக்கப்படாவிட்டால் எங்கள் படைகள் எதுவும் ஆயுதமேந்திய நடவடிக்கை எடுக்காது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
2015 கோடையில் பி.கே.கே மற்றும் துருக்கி படைகள் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததிலிருந்து, அமைதிக்கான
முதல் அறிகுறியாக இந்த போர் நிறுத்தம் உள்ளது.
குர்திஷ்தான் மற்றும் மத்திய கிழக்கில் ஒரு புதிய வரலாற்று செயல்முறை தொடங்கியுள்ளது என்பதை ஓஜலனின் அறிக்கை சுட்டிக்காட்டுவதாக பி.கே.கே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குர்திஷ்தான் பூர்வீக தாயகம் :
குர்திஷ்தான் என்பது துருக்கி, ஈராக், சிரியா மற்றும் ஈரானின் குர்துகள் வசிக்கும் பகுதிகளைக் குறிக்கிறது.
பி.கே.கேயின் தலைவர் அப்துல்லா ஒஜலான், 1999ல் இருந்து சிறையில் இருக்கிறார். எனினும் குர்திஸ் அமைப்பு தொடர்ந்து போராடி வருகிறது. பல அமைதி ஒப்பந்தங்கள் பயனற்றுப் போன நிலையில், சிறையில் இருக்கும் அப்துல்லாவை சமீபத்தில் துருக்கி அரசியல் தலைவர்கள் சந்தித்து, வன்முறையை கைவிடும்படி கோரினர்.
இந்த நிலையில், ஆயுதங்களை கைவிடுவதாக குர்திஷ் பி.கே.கே அமைப்பினர் அறிவித்துள்ளனர்.
குர்திஷ் அமைப்பைச் சேர்ந்த யாரும் ஆயுத தாக்குதலில் ஈடுபட மாட்டார்கள். துருக்கி, ஈராக், ஈரான், சிரியாவை உள்ளடக்கிய குர்திஷ் பிராந்தியம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் புதிய வரலாறு எழுதப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
துருக்கியில் அதிபர் எர்டோகன் பதவிக்காலம் 2028ல் முடிகிறது. அதன் பிறகும் பதவியில் தொடரும் வகையில் சட்டத்தை திருத்த குர்திஷ் ஆதரவு தேவைப்படுவதால், அவரது முயற்சியில் இந்த போர் நிறுத்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
அத்துடன் சிரியாவில் அதிபராக இருந்த பஷிர் ஆசாத்தின் ஆட்சி கவிழ்ப்பு, லெபனானில் ஹெஸ்பெல்லா அமைப்பு பலவீனமானது போன்ற காரணங்களும், குர்திஷ் போராளிகளின் போர் நிறுத்த முடிவுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
காவு வாங்கப்படும் கனவு தேசம்:
சிரியாவில் பஷிர் ஆசாத் ஆட்சி வீழ்ச்சியின் பின்னர், குர்திஷ் மக்கள் தம் வசமுள்ள சுயாட்சி அதிகார பிரதேசத்தை பாதுகாக்க முயல்கின்றனர். ஆனால் அங்கும் துருக்கியின் ஆக்கிரமிப்பு தொடருமானால், குர்திஷ்தான் மக்களின் நாடு காவு வாங்கப்படும் கனவு தேசமாகவே மாறும்.
ஈராக், ஈரான், சிரியா, துருக்கி நாடுகளுக்குள் ஆயிரம் பகைமை போட்டியிருந்தாலும், குர்திஷ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் இந்நாடுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை தான்.
தாயகம் இல்லாத குர்திஷ் மக்கள் :
மத்திய கிழக்கில் பாரம்பரியமாகவே வாழ்ந்து வரும் இனமான குர்திஷ் மக்கள் (Kurdish) தென்கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வட ஈராக், வடமேற்கு ஈரான், தென்மேற்கு ஆர்மேனியா ஆகிய பகுதிகளில் அதிகம் வாழ்கின்றனர்.
ஆயினும் தாயகம் இல்லாத மிகப்பெரிய இனக்குழுவான குர்திஷ் மக்கள் துருக்கியிலும், சிரியாவிலும் பிற இடங்களிலும் நீண்டகாலமாக துன்புறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறி வாழும் குர்திஷ் மக்களின், பேரிடியாக ஐந்து நாடுகளிலுமே அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட இனமாக கருதப்படுகின்றனர். இதன் விளைவாக விடுதலை போராட்டத்திற்கும் தள்ளப்பட்டார்கள்.
ஈராக், ஈரான், சிரியா, துருக்கி நாடுகளுக்குள் ஆயிரம் பகைமை போட்டியிருந்தாலும், குர்திஷ்தான் என்கிற ஒரு அரசு உருவாகிவிடக் கூடாது என்பதில் இந்நாடுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மை தான்.
2011 இல் சிரியாவின் உள்நாட்டுப் போர் வெடித்த பிறகு, நவம்பர் 2103 இல் குர்திஷ் படைகள் வடகிழக்கு சிரியாவின் சில பகுதிகளில் சுயாட்சியை அறிவித்தன.
அங்கு அவர்கள் பெரும்பான்மையாக உள்ளனர். சுமார் 30 மில்லியன் குர்திஷ் மக்கள் வடக்கு ஈராக், மேற்கு ஈரான், வடக்கு சிரியாவில் பரவி உள்ளனர். மேலும் துருக்கியின் மக்கள் தொகையில் சுமார் 18% பேர் உள்ளனர்.
ஐந்து நாடுகளில் சிதறிய குர்திஷ்தான்:
குர்திஷ்தான் தாயகமானது ஈராக், ஈரான், சிரியா, துருக்கி, ஆர்மேனிய நாடுகளுக்குள் ஒவ்வொன்றுடனும் இணைந்தவாறு, அந்தந்த நாடுகளின் எல்லைப் பகுதிகளிலேயே அமைந்திருக்கின்றன. குர்திஷ் மக்கள் வாழும் இந்த மலைப்பகுதிகளை இணைத்து ‘குர்திஷ்தான்’ எனும் தனிநாடு காண விரும்புகிறார்கள்.
முதலாம் உலகப்போருக்குப் பின்னர் ஓட்டோமான் சாம்ராஜ்யம் வீழ்ந்ததையடுத்து நடைபெற்ற ‘வெர்சாய்ஸ்’ சமாதான மாநாட்டில் குர்திஷ்தான் கோரிக்கை முதலில் முன்மொழியப்பட்டது.
இதையடுத்து, முதலாம் உலகப்போரில் வெற்றிபெற்ற மேற்கத்திய கூட்டுப்படையினர் சுவிட்சர்லாந்தில் கூடி, ‘செவ்ரெஸ் ஒப்பந்தம்’ கொண்டுவந்தனர். 1920ல் கொண்டுவரப்பட்ட அந்த ஒப்பந்தத்தில், ஐந்து நாடுகளிலும் உள்ள பகுதிகளை சேர்க்காமல், துருக்கியில் மட்டும் உள்ள பகுதியில் ’குர்திஷ் தேசம்’ ஒன்று உருவாக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், 1923ம் ஆண்டில் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளுடன் கையெழுத்தான ‘லாவ்சன்னே’ ஒப்பந்தத்தின்படி நவீன துருக்கியின் எல்லைகள் வரையறுக்கப்பட்ட போது குர்திஷ் தேசம் உருவாக்கப்படவில்லை என்பது வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களாகும்.
ஆனால் தற்போது குர்திஷ் பி.கே.கே அமைப்பின் அரசியல் குழுவானது ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு கலைந்து செல்லுமாறு சிறையில் இருந்து குர்திஷ் போராளித் தலைவர்
அப்துல்லா ஓஜலான் அழைப்பை விடுத்தமை உள்நோக்கம் கொண்டதாக அறியப்படுகிறது.
ஐந்து நாடுகளில் சிதறிக் கிடக்கும் குர்திஷ் மக்களின் தாயகக் கனவு நனவாகாமல், கலைந்த கனவாக மாறிடுமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *