இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் -02 … சங்கர சுப்பிரமணியன்

சிலர் கடவுளை நினைக்க இடம் சூழ்நிலை என்று எதையும் பார்க்க தேவையில்லை என்பார்கள். ஒருபடி மேலே சென்று அகிலமெல்லாம் நிறைந்திருக்கும் ஆண்டவனை எங்கேயும் எப்போதும் நினைக்கலாம் என்பார்கள. கூடவே எதையாவது சொல்வார்கள். உண்மையை எப்போதும் எங்கும் பேசலாம் என்பார்கள். அரிச்சந்திரன் உண்மையை சுடுகாட்டில் இக்கட்டான சூழ்நிலையிலும் பேசவில்லையா என்பார்கள்.
ஆனால் இவர் பணிபுரியும் இடத்திலும் கடவுள் பெயரை சொல்லிக் கொண்டே இருப்பாரா? இவர் கடைக்கு சென்றாலோ அல்லது வேறு இடத்தில் இருந்தால் இப்படித்தான் நடந்து கொள்வாரா? என்றெல்லாம் எண்ணினேன். அதன்பின் அது அவர் வாய் முணுமுணுக்கிறார் இதில் எனக்கென்ன வந்தது என்று அந்த எண்ணத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.
சரி, கந்தசஷ்டிக் கவசத்துக்கு வருவோம். நான் ஆஸ்திரேலியா வரும்வரையிலும் ஏன் வந்த பின்னும் சில ஆண்டுகள் வரை தீவிரமான இறை நம்பிக்கை இருந்தது. இப்பவும் குறிஞ்சிநிலத்தை உருவாக்கி விவசாயத்திக்கு வழிவகுத்தவன் என்பதாலும்
இலங்கையில் முதன்முதலாக மானாவாரிப் பயிர்த் தொழிலுக்கு வித்திட்டு நம்மினத்தின் தலைவனாக இருந்து வழிநடத்தினான் என்பதற்காக முருகனை வணங்குகிறேன்.
மற்றபடி வீடுபேறு கிடைக்குமென்றோ உழைக்காமலே முன்னேற அருள்கிட்டும்
என்பதற்காகவோ அல்ல. கந்தசஷ்டி கவசம் எனக்கு மனப்பாடமாகத் தெரியும். பின் ஏன் இந்த மாற்றம்? மாற்றம் என்று முழுக்க முழுக்க சொல்ல முடியாது. இப்போதும் நான் நம்மை இயக்கும் பேராற்றலை ஏற்கிறேன். அதற்கு என்னிடம் மறுப்பேதுமில்லை.
ஆதலால் இறைமறுப்பென்பது இங்கு வந்தபின்னரே உண்டானது. நானே உணர்ந்து இந்த நாட்டில் பெற்ற அனுபவத்தின் மூலம் ஒப்பிட ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பின் மூலம் உண்மையை உணர்ந்து புரிந்து கொண்டபின் தான் என்னுள் மாற்றம் ஏற்பட்டது.
எனவே என் மனம் என்ன சொல்கிறது என்பதை நன்குணர்ந்த பின்னரே இந்த மாற்றத்தை ஏற்றேன். மற்றவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக நான்
செய்யவில்லை. மனம் சொன்னதைக் கேட்டதால் தான் மனுநீதிச் சோழன் மகன்மேல் தேர்க்காலை ஏற்றினான்.
மற்றவர்கள் சொன்னதைக் கேட்டிருந்தால் பெரிதாக பரிகாரம் என்ற ஒன்றை பண்ணி ஊர் வாயை மூடி இருப்பான். எத்தனையோ அரசியல்வாதிகளை பார்த்திருப்போம் நாட்டுமக்களுக்கு நல்லதைப் பண்ணாமல் நாட்டின் செயல்திட்டங்களுக்கான பணத்தை எல்லாம் கொள்ளையடிப்பார்கள்.
பின் கொள்ளையடித்ததற்கு பரிகாரமாக கொள்ளையடித்த பணத்தில் ஒரு பங்கை
கோவில்களைத் தேர்ந்தெடுத்து பெரும் பொருட் செலவில் வாயில் பெயர்நுழைய முடியாத யாகங்களை எல்லாம் பண்ணுவார்கள். ஆதலால் கடவுள் மறுப்பை
இந்தியாவில் எவரும் எனக்கு போதிக்கவில்லை. எவரும் அந்த எண்ணத்தை என்னுள் விதைக்கவுமில்லை.
அப்படியே ஒருவரைக் கூறவேண்டடுமானால் நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்றுரைத்த திருமூலரைத்தான் சொல்வேன். மற்றபடி
உழைப்புதான் உயர்வைத் தரும் என்பதையும் work is worship என்பதையும் அறிந்தேன். உழைப்பும் முயற்சியும் இன்றி எப்போதும் ஈசனடி போற்றி எந்தையடி போற்றி என்றிருந்தால் உயர்வடைய முடியாது.
சிறந்த பக்தனாக வேண்டுமானால் ஆகலாம். மற்றபடி உயர்வென்பது செய்யும் தொழிலே தெய்வம் அதில் திறமைதான் நமது செல்வம் என்று ஒரு எளிமையான திரையிசைப் பாடல் சொல்லும் கருத்தை எந்த பக்திநூலும் சொல்லித்தராது.
ஒருவரை சிறந்த வழக்கறிஞர் என்போம். இன்னும் சிலரை சிறந்த மருத்துவர் என்போம். சிறந்த
நீதிவான், சிறந்ந அறுவைசிகிச்சை நிபணர், மற்றும் சிறந்த பொறியாளர் என்றெல்லாம் சொல்வோம். அதேபோல் இவர் சிறந்த பக்தன் என்போம். சரி, அவர் சிறந்த பக்தனாயிருந்து நாட்டுக்கு என்ன செய்வார்.
ஒருகோவிலை கட்டி குடமுழுக்கு செய்ய முயற்சிசெய்து நிதி திரட்டுவார். அல்லது ஒரு குழு அமைத்து வாசிப்பு அனுபவம் போல பக்தி நூல்களை படித்து பகவான் அருமை பெருமைகள் சொல்லி பக்தகோடிகளை உருவாக்குவார். அப்படியே பகவானைப் பற்றி பாடல்களை பாடி பஜனைகள் பல செய்து புகழின் உச்சமடைவார். அதனைத் தாண்டி என்ன செய்துவிடப் போகிறார்.
நான் இக்கருத்தை சொன்னதும் கடுப்பாகிய மாடசாமி அண்ணாச்சி அவருக்கான சந்தேகத்தை எழுப்புகிறார். உழைப்பு உயர்வைத்தரும் என்பது இப்போதுதான் உனக்குத் தெரிந்ததா? என்று. அவருக்கு நான் ஆம் என்று சொல்வதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை.
நான் படித்து முடித்தவுடன் அரசாங்க பணியாக தொழிற் பயிற்சி பள்ளியில் கற்பிக்கும் பணி கிட்டியது. அரசாங்க பணி என்பது இந்தியாவில் இருந்தவர்களுக்கு நன்கு தெரியும். இருபதனாயிரம் ஆட்கள் பணியாற்றிய தொழிற்சாலையில் நான் பணிபுரிந்தேன். கிட்டத்தட்ட நூறு பேருந்துகள் இருந்தன. பேருந்து எல்லோரது வீட்டினருகேயும் வந்து அழைத்துச் செல்லும்.
அடுத்தபடியாக கிடைத்த பதவி உயர்விலும் என்னிடம் தொழில் நுட்பத்தை கற்றுக்கொள்ள நால்வர் இருந்தனர். அவர்களுக்கு தொழில் நுட்பத்தைக் கற்றுக் கொடுப்பதில் என் பணிகளை அவர்களே முடித்து விடுவார்கள். ஆதலால் என் வாழ்க்கை காலை ஜப்பானில் காபி மாலை மாலை நியூயார்க்கில் காபரே இரவில் இரவில் தாய்லாந்தில் ஜாலி என்பது போல் பெங்களூரில் இந்தியன் தொலைபேசித் தொழிற்சாலையில் இன்ப மயமாக சென்றது.
அதற்கு அடுத்தபடியாக தரக்கட்டுப்பாட்டு பிரிவில் கிடைத்த பதவி உயர்வும் எனக்கு கடினமாக உழைக்க வேண்டிய சந்தர்ப்பத்தை வழங்கவில்லை என்பதே மாடசாமி அண்ணாச்சிக்கு என் பதில்.
எனக்கு சொர்க்கம் நரகம், பாவம் புண்ணியம், கடவுளிடம் முறையிட்டால் எல்லாம் நடந்துவிடும், விடாது தொழுதால் மேலுலகம் கிட்டும் போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. நம்புபவர்களை நான் குறைகூறவும் இல்லை. மாறாக வினை விதைப்பவன் வினை அறுப்பான் என்பதிலும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதில் மட்டும் அசைக்க முடியா நம்பிக்கை கொண்டவன்.
-சங்கர சுப்பிரமணியன்.
(தொடரும்)
![]()