கட்டுரைகள்

இரட்டைக்கிளவியும் இரட்டிப்பு மகிழ்ச்சியும்… தொடர் -01 … சங்கர சுப்பிரமணியன்

சங்கர சுப்பிரமணியன்

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக எண்ண வேண்டாம். தமிழ் இலக்கணம் என்றால் நானூறு கல் தூரம் ஓடுபவர்களுக்கு வேண்டுமானால் இந்த தலைப்பு பிடிக்காமல் இருக்கலாம். இலக்கணத்தை விரும்புபவர்களுக்கு இந்த தலைப்பு பலே பலே சொல்லு சொல்லு என்று இரட்டைக்கிளவியிலேயே சொல்லத் தோன்றும்.

மேலும் நான்கு வீட்டுக்கு அப்பால் வசிக்கும் காதலியைப் பார்ப்பதுபோல் இனிமையாக இருக்கும். எல்லாவற்றுக்கும்மேலாக இலக்கணத்தில் எனக்கும் ஏதோ தெரிந்திருக்கிறது என்ற புதிரும் உங்களுக்கு புரிய வரும். இரட்டைக்கிளவி என்றால் இலக்கணம். சரி, அது என்ன இரட்டிப்பு மகிழ்ச்சி. ஆம், அந்த மகிழ்ச்சிதானே புதிரை அவிழ்க்கிறது. ஆதலால் மகிழ்ச்சி இரட்டிப்பு மகிழ்ச்சி ஆனது.

அதுபோகட்டும் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு என்ன காரணம்? சுற்றுலா என்றாலே மகிழ்ச்சி. அதிலும் சொந்தக் காசில் செல்லாமல் ஓசியில் சென்றால் மகிழ்ச்சிதானே. இரட்டிப்பு மகிழ்ச்சியாக
அடுத்தவன் காசை ஆட்டையை போடுவதில்தான் எத்தனை சுகம்? மற்றவன் காசில் மஞ்சள் குளிப்பதெல்லாம் ஒரு பிழைப்பா? என்று நீங்கள் நினைப்பதில் பொருளுள்ளது.

எனக்கும் உங்கள் கருத்தில் உடன்பாடு உள்ளது. நான் பொதுவாக வைத்திருக்கும் கருத்து என்னவெனில் என் காசு இன்னொருவரிடம் பத்து காசு இருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் இன்னொருவர் காசு என்னிடம் ஐந்து காசு இருந்தாலும் எனக்கு பிடிப்பதில்லை. ஏனென்றால் மற்றவர்களின் கடின உழைப்பை நான் சுரண்டுவதில்லை. இது கிட்டத்தட்ட கொள்ளயடிப்பதுக்கு சமம்.

அத்தகைய அப்பாடக்கர் அடுத்தவன் காசை ஆட்டையைப் போடுவதில்தான் எத்தனை சுகம் என்று எழுதியிருக்கிறாயே என்று கேட்கலாம். ஆனால் இந்த அடுத்தவர் என்மகன். இலக்கணத்தில் விதிவிலக்கு என்று ஒன்று வருமே அதை முறைப்படி நான் பயன்படுத்தியுள்ளேன். அந்த சுகத்தையே குறிப்பிட்டேன்.

ஆதலால் உங்கள் நினைப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்? யாருக்கும் செலவை வைக்கவில்லை. என் மகன்தான் இந்த சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றான். அப்படியும் சிலர் முணுமுணுப்பது என் செவிகளில் விழுகிறது? அந்த முணமுணுப்பு யார் கூட்டிச்சென்றால் என்ன ஓசி ஓசி தானே என்பது. அப்படியும் சொல்லிவிட முடியாது.

அதற்கும் ஒன்றைச் சொல்கிறேன். தமிழ் நாட்டில் ஒரு அமைச்சர் மக்கள் கொடுக்கும் வரிப்பணத்தால் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மக்களுக்கு நிரந்தரமாக தீர்வுக்கு வழி எதுவும் செய்யவில்லை. மக்களை ஐந்துக்கும் பத்துக்கும் அரசாங்கம் அலையவிட்டதை மறந்து விட்டார்.

ஆனால் வரிப்பணத்தில் பெண்களுக்காக இலவச பேருந்து விட்டதை ஓசி ஓசி என்று இரட்டைக்கிளவியில பதில் சொல்லியிருக்கிறார்.

அப்படி சொல்லும் போது அவர் முகமொழியை நோக்கினால் எவ்வளவு
இழிவாக பெண்களை கொச்சைப் படுத்தியிருக்கிறார் என்பது தெரியும். நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்கத் தாக்க தடையறத் தாக்க என்று கந்தகஷ்டி கவசமும் அதிலுள்ள இரட்டைக் கிளவியும் குறிப்பாகத் தாக்க தாக்க ஞாபகத்துக்கு வரும்.

முருகனிடம் பக்தன் வேண்டும்போது தாக்க தாக்க என்று வேண்டுகிறான். அநீதி நடக்கும்போது தாக்கச்சொல்லி மனிதன் இறைவனை தடையின்றி தாக்கச் சொல்கிறான். முருகன் தாக்குவானா என்பது இரண்டாவது விடயம். இது மானிட உளவியல். மனிதன் அநீதிக்கு எதிராக தன்னால் போராட முடியாதபோது வேறொருவரை உதவிக்கு அழைப்பது வழக்கம் என்பதை மறுக்க இயலாது.

இப்பொழுது மாடசாமி அண்ணாச்சி குறுக்கிடுகிறார். உனக்கு கடவுள் நம்பிக்கையே கிடையாதே? இப்போது சஷ்டி கவசத்தைப் பற்றி பேசுகிறாயே என்கிறார். அவருக்கு பதில் சொல்வது என் கடமை.

நாம் எதை விரும்பி அதன் நினைவாக இருக்கிறோமோ அதுவோடு ஐக்கியமாகி விடுவோம். மது அருந்துவது புகை பிடிப்பது போன்றவற்றை சொல்லலாம். அதில் அளவுக்கு மீறி ஈடுபடும்போது அதற்கு அடிமையாகி விடுவோம். இது பொது விதி. இந்த விதியை எதனோடும் பொருத்திப் பார்க்கலாம். பக்தியையும் பொருத்திப் பார்க்கலாம் தவறொன்றும் இல்லை.

நமக்கு மேல் ஓர் ஆற்றல் இருக்கிறது என்பது வேறு. அந்த ஆற்றலை எப்போதும் எண்ணி அதற்கு அடிமையாவது வேறு. இது அவரவர் விருப்பம் என்றாலும் ஏன் எதற்கும் நாம் அடிமையாக கூடாது என்பதற்கும் ஒரு காரணத்தை கூறுகிறேன். ஒருமுறை நான் நண்பர் ஒருவர் வீட்டு திருமணத்துக்கு சென்றேன். அவ்விழாவிற்கு ஒருவர் வந்திருந்தார். அவர் என் பார்வையில் வித்தியாசமாகப் பட்டார்.

அவரை நான் கூர்ந்து கவனித்தேன். சொல்லி வைத்தாற்போல் என் பக்கத்தில் காலியாக இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தார். அவரின் உதடுகள் ஒரு கடவுளின் பெயரை உச்சரித்துக் கொண்டே இருந்தது. நான் அந்த விழாவில் நான்கைந்து மணி நேரம் இருந்திருப்பேன். அந்த நான்கைந்து மணி நேரமும் அவரது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருந்தது. இது எனக்கு சற்று மிகையாக தென்பட்டது.

அத்தோடு இது நம்பமுடியாத செயலாகவும் இருந்தது. இங்கு எல்லோர் முன்னிலையிலும் இவர் இப்படி நடந்து கொள்கிறாரே என்று எண்ணினேன். இது கோவிலும் இல்லை. வந்த இடத்தில் விழாவில் கவனத்தைக் காட்டாமல் கண்கள் நடந்து கொண்டிருப்பதை கவனிக்க அந்நியன் படத்தில் வரும்இன்னொருவராக மாறிய வாய் அந்த இடத்துக்கு சம்பந்தப்படாததை
முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

ஆலயத்திற்கு சென்றால் இறைவன் பெயரை விடாது சொல்லிக் கொண்டிருப்பவர்கள் உண்டு. அங்கே சென்று யாராவது கொய்யாப்பழம் கொய்யாப்பழம் என்று முணுத்துக்கொண்டே இருப்பார்களா? அது எப்படி சரியில்லையோ அதுபோல் இங்கே கடவுள் பெயரை சொல்லிக் கொண்டிருப்பதும் சரியில்லை அல்லவா?

எதற்கும் இடம் பொருள் என்று உள்ளதல்லவா? வெள்ளைக் காரன் சொல்வதுபோல் work while you work, play while you play என்பதுபோல் அதையதை அங்கங்கே செய்வதுதானே முறை. சாவு வீட்டில் யாராவது சங்கீதாவுக்கு வரன் பார்ப்தைப் பற்றி பேசிக் கொண்டிருப்பார்களா? இதை நான் சொன்னால் அவனை சிறந்த பக்திமான் என்பார்கள்.

சங்கர சுப்பிரமணியன்
(தொடரும்….)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *