கதைகள்

மனிதரின் நிறங்கள்! …. கதை …  கிறிஸ்டி நல்லரெத்தினம்

கிறிஸ்டி நல்லரெத்தினம்

யன்னலுக்கு அருகில் அமர்ந்து வெளியே மாறும் காட்சிகளை ரசிக்க யாருக்குத்தான் ஆசை இருக்காது? பேரூந்தில் எனக்குப் பிடித்த இருக்கை ‘விண்டோ சீட்’. அது என்ன பேருந்து? 1965ல் நடந்த சம்பவத்தை அல்லவா உங்களுக்கு சொல்லப்போகிறேன்! அப்போது பேரூந்து பிறக்கவில்லை – பஸ் என்றுதான் அழைப்போம். ஆனால் ஏ.சி, சொகுசு இருக்கை, கூரையில் இருந்து கூப்பிடும் ஏ.ஆர்.ரகுமானின் இசை என்று எங்கள் ஊர் பஸ்ஸை கற்பனை செய்து விடாதீர்கள். நான்கு சக்கரங்கள் பூட்டிய தகர டப்பாதான் எங்கள் பஸ். ஆனால் ‘அ’னாவில் இருந்து ‘ஃ’க்கனாவிற்கு உங்களை கொண்டு சேர்த்துவிடும் எங்கள் பஸ். உங்கள் பேரூந்தும் இதைத்தானே செய்கிறது?

“மகன், வசதியா கால நல்லா நீட்டி இரு மகன். ஏதும் வாங்கி சாப்பிட வேண்டுமென்றால் சொல்லு ராசா”. அப்பாவிற்கு என்னில் மிக அன்பு. பத்து வயது சிறுவனான எனது இந்தப் பயணம் சுகமாய் அமையவேண்டும் என்பதில் அப்பாவிற்கு அக்கறை. எல்லா அப்பாக்களுக்கும் இருக்கும் கவனிப்பின் வெளிப்பாடு இது.

ஆம் என்பதற்கு அடையாளமாக தலையை பலமாக அசைத்து என் ஆமோதிப்பை வெளிப்படுத்தினேன்.

“இஞ்ச இருந்து கல்முனைக்குப் போக ஒரு மணித்தியாலம் எடுக்கும். ஆனா களுவாஞ்சிக்குடியில ரீ, கோப்பி குடிக்க பஸ்ஸை நிப்பாட்டுவான். அப்ப ஏதாவது வாங்கிச் சாப்பிடுவம். சரியா மகன்?” என்ற கேள்விக்கும் தலையை ஆட்டிவைத்தேன்.
அப்பாவின் அம்மாவைப் பார்க்கத்தான் இப்பயணம். கல்முனையில் இறங்கி அரை மணி நேர நடையில் நற்பிட்டிமுனையை அடைந்துவிடுவோம். ஊரின் பெயரை இங்கிதமாய் நற்பிட்டிமுனை என்று நான் சொன்னாலும் ஊரார் வாயில் அது நாய்பட்டிமுனை என்றுதான் வருவதுண்டு. அதிலும் ஒரு ஊர் வாசம் இருப்பதாய் எனக்கு தோன்றுவதுண்டு. பெயரில் என்ன இருக்கிறது?

அப்பாவின் கையில் ஒரு சிறு காக்கிப் பை. அதனுள் நல்ல இரத வாழைப்பழ சீப்பு ஒன்றும் சொல்லி செய்வித்த பலகாரங்களும். எல்லாம் ஆச்சிக்குத்தான். அதுதான், அப்பாவின் அம்மாவுக்கு. நானும் அண்ணனும் அக்காவும் அவரை அப்பம்மா என்று அழைக்காமல் ஆச்சி என்றுதான் அழைப்போம். கூனல் முதுகு, இரண்டு காதுகளிலும் கனத்த பாரமான தங்கத்தோடு. தோட்டின் பாரத்தால் காதின் துளைகள் பெரிதாகி எங்கே தோடுகளின் பாரத்தால் காதின் தொங்குதசை அறுந்து விழுந்து விடுமே என பயம் காட்டும். சீத்தை சாறியின் முந்தானையால் உடலின் மேல் பக்கத்தை மூடியிருப்பார். ரவிக்கை போடும் பழக்கம் இல்லை. அவர் வயதை ஒத்த எவருக்கும் இல்லை. அதைப் பற்றி அவர்கள் அலட்டிக் கொள்வதில்லை. நாமும்தான்.
கூனல் முதுகு நிலம்பார்த்து நடக்கச்சொன்னாலும் இடைக்கிடை கழுத்தை நெளித்து நிமிர்ந்து பார்த்து அந்த தெய்வீக சிரிப்பை உதிர்ப்பார். அதற்கு ஆயிரம் பொன்! அப்படி ஒரு பரிவு, கருணை.

அப்பா தனது அன்புத்தாயை பார்க்க மாதத்தில் ஒரு முறையாவது செல்லத் தவறுவதில்லை. அந்நாட்களில் அரச உத்தியோகத்தர்களுக்கு 25ம் திகதி தான் மாதச்சம்பளம். பணமாக சம்பளத்தை பட்டுவாடா செய்வார்கள். தற்போதுபோல் வங்கிக்கணக்கில் வைப்பிலிடும் பழக்கம் இல்லை. எனவே அப்பாவின் பயணம் மாசக்கடைசியிலேயே அனேகமாக நிகழும். அப்பாவுடன் எங்கள் மூவரில் ஒருவர் இணைந்து கொள்வோம்.

பஸ் ஏறும்முன் பஸ் ஸ்டாண்டில் அப்பா அன்றய வீரகேசரி தினசரியை வாங்கிக் கொள்வார். வழமையாக டெய்லி நியூஸ் ஆங்கில தினசரியை படித்தாலும் இப்பயணங்களில் வீரகேசரிதான் பயணத் தோழன். ஆச்சியின் வீட்டில் அதை விட்டுவிட்டு வந்தால் வேறு யாராவது படிக்கலாமே என்ற பரந்த மனதின் வெளிப்பாடு அது!

அப்பாவும் நானும் வசதியாக உட்கார்ந்ததும் அப்பா தினசரியை படிக்கத் தொடங்குவர். நான் யன்னலூடே பராக்குப் பார்த்தபடி சிந்தனையில் மூழ்குவேன். 60பதுகளில் பஸ் யன்னலுக்கு வெளியே மாறும் காட்சிகள்தான் பயணத்துணை, பொழுதுபோக்கு எல்லாம்! ரோட்டின் மருங்கில் சைக்கிளிலும் நடந்தும் செல்லும் விசித்திர மனிதர்களை வேடிக்கைபார்த்தபடி நாளிகைகளை நகர்த்துவேன்.. சில தெரு நாய்கள் விட்டேனா பார் என்று பஸ்சை விரட்டி வந்து பின் வெல்ல முடியாமல் தளர்ந்து பின்வாங்கிச் சென்று அடுத்து வரும் வாகனத்தை விரட்டத் தொடங்கும். சரி, அப்படி விரட்டித்தான் பிடித்தாலும் இந்த நாலு கால் ஜீவன்களுக்கு வாகனத்தை செலுத்த வராதே என்று நினைத்து என்னுள் சிரித்துக் கொள்வேன்! எனினும் வாகனத்தை விரட்டும் அவற்றின் விடாமுயற்சியை மெச்சிக்கொள்வேன்!

இந்நாட்களில் வெளிவரும் முப்பது பக்க தினசரிகளைப் போல் அப்போது கிடையாது. இரண்டு அல்லது மூன்று நெடும் தாள்களை மடித்து அச்சடித்திருப்பார்கள். காலையில் வாங்கிய தினசரி மதியத்திற்குள் படித்து முடிந்துவிடும். பத்திரிகையை வாங்கி மடித்து கக்கத்தினுள் அடக்கிக் கொண்டு போக முடியும்… இன்றய தினசரிகளை தலையில் அல்லவா கட்டிச் சுமக்க வேண்டும்!

பஸ் களுவாஞ்சிகுடிக்கு வரும்போது அப்பா ஏறக்குறைய எல்லா முக்கிய தலைப்புகளையும் படித்து முடித்திருப்பார். பத்திரிகையை மடித்து வைத்து என்னுடன் பேச்சுக்கொடுப்பார். “நல்லாப் படிக்கிறையா மகன்? நல்ல கெட்டித்தனமாய் படி மகன். படிப்பு ஒண்ணைத்தால் ஆரும் நம்மட்ட இருந்து எடுக்க முடியாது.” என்பர். நாள் தலையை ஆட்டி வைப்பேன்.

எமது பயணத்தின் அரைவாசி தூரத்தில் இருக்கும் சிற்றூர்தான் களுவாஞ்சிக்குடி. களுவாஞ்சிக்குடியில் பனங்கிழங்கு சீசனில் அவித்த ஒடியல்தான் ஸ்னக். அவற்றை வாங்க பஸ்ஸை விட்டு இறங்க வேண்டியதில்லை. பஸ் யன்னலுக்குள்ளால் போட்டி போட்டுக் கொண்டு நீட்டப்படும் ஓடியல் கட்டுகளை தரம் பார்த்து பேரம் பேசி ‘பிசினஸ் டீல்’ கள் முற்றுப்பெறும். சீசனுக்கு ஏற்றால்போல் நாவல்பழமும், கடும் புளியம்பழமும் அவித்த கச்சானும் அல்லது முந்திரியம்பழமும் ஓடியலின் இடத்தில் வந்து குந்திக்கொள்ளும். தூர இருந்து வரும் றம்புட்டானுக்கும் மங்குஸ்தானுக்கும் கூட இங்கு இடம் உண்டு.

அப்பா பத்திரிகை படித்து முடிந்துவிட்டதை கவனித்த அருகில் இருந்த சக பயணி மெல்ல அப்பாவிடம் “ஐயா, பேப்பர ஒரு தரம் பாத்திட்டு தரட்டா” என்று விண்ணப்பிப்பார். அப்பா தான் இறங்கும் இடத்தை கேட்டவருக்கு ஞாபகமூட்டி வீரகேசரியை கையளிப்பார். கல்முனை நகரை கடந்து பயணிக்கும் அம்பாறை, திருக்கோவில், பொத்துவில் பஸ் என்றால் “நான் கல்முனையில் இறங்க வேணும். அதுக்குள்ள வாசிச்சிப் போட்டு தர வேணும் கண்டயளோ” என்று ஞாபகமூட்டுவார்.

அனேகமான பஸ்கள் எல்லா தரிப்பிடங்களிலும் நின்றுதான் போகும். எனவே கழுவாஞ்சிகுடியில் இருந்து கல்முனையை கிட்டும் போது அரை மணித்தியாலம் போயிருக்கும். பஸ் பாண்டிருப்பு கிராமத்தை நெருங்கும் போது அப்பா வீரகேசரியை எடுத்தவரிடம் பத்திரிகையை மீள தரும்படி ஞாபகமூட்டுவார். இப்போது வீரகேசரி அவரிடம் இல்லை. அது கைமாறி யாரிடமோ சென்றிருக்கும். எனவே அவர் எழுந்து நின்று “ஐயா இறங்கோணுமாம்… ஆரிட்ட ஐயாட வீரகேசரி இருக்கு? கெதியா தாங்க பாப்பம்…. வாசிச்சா திரும்பி தாற புத்தி இல்லை போல ” என்று ஒரு மிரட்டலுடன் கூடிய அறிவிப்பை விடுப்பார். ஒருவர் முதலாம் பக்க தாளையும் பல சீட்கள் தள்ளி இன்னொருவர் மூன்றாம் பக்க தாளையும் மீட்டுத் தர முழு வீரகேசரியும் பூரணத்துவம் பெறும்.

இன்று இந்த நினைவுகளை மீட்டும் போது ஒரு அடிப்படை மனித புரிந்துணர்வு எத்தனை மானுடர்களின் தேவைகளை பூர்த்தி செய்தது என எண்ணிப் பார்க்கிறேன். ஒரு குறும் பயணத்தில் என்னமாய் அந்த வாகனம் ஒரு சில்லுவைத்த வாசிகசாலையாய் மாறிய மாயையை கண்டு வியக்கிறேன். நான் படித்து விட்டேன்; மற்றவனும் படிக்கட்டும் என்ற அப்பாவில் பரந்த மனதையும் இப்போது நினைத்து பூரிக்கிறேன்.

காட்சி மாற்றம் :

மெல்பேர்னில் ஜுலை மாத குளிர். காலை நேர சன நெருக்கடியில் பலர் சீட்களுக்கு நடுவே உள்ள இடைவெளியில் நின்று பயணிக்கிறார்கள். இருக்கை கிடைத்த சில இளசுகள் வசதியாய் உட்கர்ந்து இயர் – போனில் தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை அசைத்து லயிப்பில் பயணிக்கிறார்கள். சிலர் மும்முரமாக தினசரிப்பத்திரிகைகளை படித்து முடித்து ரயில் மெல்பேர்ன் நகருக்குள் நுழையும் ஸ்டேசன் அண்மிப்பதால்.

பத்திரிகைகளை மடித்து சுருட்டி கை இடுக்குகளில் செருகிக் கொள்கிறார்கள். ஒரு இளம் பெண்மணி தன் கைப்பையை திறந்து உதட்டுச்சாய குப்பியையும் சிறு கண்ணாடியையும் எடுத்து இதழ்களை குவித்து சாயம் பூசி கண்ணாடியில் சரிபார்த்து ஒப்பனை பூரணத்துவம் பெற்ற திருப்தியுடன் நிமிர்ந்து உட்காருகிறார்.

ரயில் றிச்மன்ட் ஸ்டெசனில் தரித்து நிற்கிறது. மின்சார ரெயில் பெட்டியின் கதவுகள் டிங்…டிங் எனும் ஒலியுடன் தானே திறந்து கொள்ள, தரையில் கொட்டிய ஆரஞ்சு பழங்களாய் பயணிகள் சிதறி நாலாபக்கமும் விரைந்து சென்று மறைகிறார்கள்.

ரயிலில் பத்திரிகையை படித்து முடித்து அதை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு பிளாட்டாரத்தில் இறங்கி அங்கிருந்த ஒரு குப்பை தொட்டியை நோக்கி நடக்கிறார் ஒரு மூத்த வெள்ளைக்கார தனவந்தர். பின்னால் தோளில் பையுடன் ஒரு இளைஞன் இறங்குகிறான். பல்கலைக்கழக மாணவனுக்கேற்ற தோற்றம். முள்னால் சென்ற அந்த மனிதரை அகலக்கால் வைத்து அருகே சென்று அவரை அந்த இளைஞர் குனிந்து கேட்கிறான்: excuse me….may I have the paper please, if you have finished with it? (பேப்பரை படித்து முடித்து விட்டீர்கள் என்றால் அதை எனக்கு தர முடியுமா?). தனவந்தர் அந்த இளைஞனை மேலும் கீழும் பார்த்துவிட்டு சொல்கிறார் “Why don’t you buy your own?” (ஏன் நீ உனக்கொரு பத்திரிகையை வாங்கக்கூடாது?) என்று கூறி தனது தினசரியை அருகே இருந்த குப்பைத் தொட்டிக்குள் திணித்து விட்டு நடையை தொடர்கிறார்! திகைத்து நிற்கிறான் இளைஞன்! அவன் தன்மானமும் அல்லவா அக்கணத்தில் குப்பைக்கூடை வாசியானது!

மேற்கத்திய சமூக நியாயங்களும் நியதிகளும் ஒரு வரையறுக்கப்பட்ட கட்டமைப்பின் கீழ் தடம்புரளாமல் பயணிப்பவை. எப்போதாவது அவை நிலைகுலையும் போது உடனே அவை ஆரவாரமின்றி சீர் செய்யப்படுகின்றன. எவரும் அவற்றை தராசில் ஏற்றி நியாயத்தீர்ப்பு வழங்குவதில்லை.

எது எப்படி இருந்தாலும், பாமர மக்களுக்கு இருக்கும் புரிந்துணர்வும் பகிர்ந்துண்ணும் போக்கும் கடல் கடப்பதில்லையோ?

மனிதரில்தான் எத்தனை நிறங்கள்!

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *