சிலேட்டுப் பலக… சிறுகதை… டீன் கபூர்

கலாபூஷணம் ஏ. பீர் முகம்மது எழுதிய “தைலாப்பொட்டி” சிறுகதைத் தொகுப்பிலிருந்த “சிலேட்டுப் பலக” என்ற கதைபற்றிய எனது வாசிப்பு அனுபவம் மற்றும் சிறு கணிப்பு இது.
வாசகர்கள் எனது கருத்தை விளங்க சிறுகதையை முழுவதுமாக வாசிப்பது உதவும். ஆதலால் கதையும் பிரசுரமாகிறது.
•••
பாறுக்கு மாஸ்டர்ர மகள் தன்ர புள்ளய நேசரிக்கு அனுப்ப ஒழுங்கு பண்ணிக்கிட்டு இரிக்கா, புள்ளட பொத்தக பேக்குக்குள்ள ஒத்த றூள் கொப்பி சித்திரக் கொப்பி பென்சில் கலர்ப் பொட்டி நூடுல்ஸ் வெச்ச சின்ன டப்பா தண்ணிப் போத்தல் எல்லாத்தயும் அடஞ்சா. பேக்கிட ரெண்டு பட்டிக்குள்ளாளயும் புள்ளட ரெண்டு கையயும் ஓட்டி தோளுக்கு மேலால பட்டிய எடுத்து பேக்க முதுகோடச் சேத்து கொழுவினா. பொடியன் பேக்கச் செமந்துக்கிட்டு நேசரிக்கிப் பொய்த்துக்கிட்டு இரிக்கான்.
பாறுக்கு மாஸ்டரு ஊட்டுல சும்மாதான் இரிக்காரு. அதால ஒவ்வொரு நாளும் பேரன நேசரிக்கிக் கூட்டிக்கிப் போற அவருதான். ண்டக்கிம் பொடியனோட நேசரிக்கிப் பொய்த்துக்கிட்டு இரிக்காரு. ஓஎல் ஏஎல் சோதினயெல்லாம் நெல்லாப் பாசி பண்ணின ஒரு பொம்புளப்புள்ள அரசாங்க வேல கெடைக்காததால நேசரி ஒண்டு போட்டு டீச்சரா அங்க வேல பாக்கா. வகுப்பறயில படம் கொஞ்சம் ஒட்டிரிக்கி. மாமரத்துக்குக் கீழ பொடியனுகள் நாலஞ்சி பேரு வெளயாடிக்கிரிக்கானுகள். கொஞ்சம் தள்ளி ரெண்டு பொம்புளப் புள்ளகள் அதப் பாத்துக்கிட்டு இரிக்கிதுகள். பாறுக்கு மாஸ்டரு பேரன உள்ளுக்க உடாம கைல புடிச்சிக்கிட்டு கேத்தடிய நிக்காரு. டீச்சரு ன்னம் வெரல்லியாம்.
அங்க ன்னொரு ஆள் நிண்டாரு. அவருக்கு நடுத்தர வயசிரிக்கும். மகன நேசரிக்குக் கூட்டிக்கிட்டு வந்தவரு. மாஸ்டருக்கு அவரத் தெரியா. ஆனா அவருக்கு பாறுக்கு மாஸ்டர நெல்லாத் தெரியிம். அவரோட மாஸ்டரு கதச்சாரு.
ஒங்குட காலத்தில ப்பிடி நேசரி இருந்தயா ண்டு பாறுக்கு மாஸ்டரு கேட்டாரு ஓமெண்டு சென்னாரு. அதக் கேட்ட பாறுக்கு மாஸ்டரு அவர்ர காலத்தில நேசரி இரிக்கல்லயாம். பள்ளிக்கொடத்தில அரிவரி வகுப்புத்தான் இருந்த. அரிவரி பாசி பண்ணினா மொதலாம் வகுப்பு ண்டு வெளக்கம் குடுத்தாரு.
அன்னேரம் டீச்சரு வந்திட்டா. ரெண்டு பேரும் புள்ளகள அவக்கிட்ட பாரம் குடுத்திட்டு வெளியேறினாக. கதச்சிக் கதச்சி கதட ருசில ரெண்டு பேரும் பாறுக்கு மாஸ்டர்ர ஊட்ட வந்து சேந்திட்டாக.
மகளக் கூப்பிட்டு ரெண்டு தேத்தண்ணி தாண்டு கேட்டாரு. நாங்க படிச்ச காலத்தில அரிவரி வகுப்பு மொதலாம் வகுப்பிலயெல்லாம் சிலேட்டும் குச்சியும்தான் பாவிச்ச. ஆனா ப்ப நேசரிப் புள்ளகள் கொப்பி பென்சிலெல்லாம் பாவிக்கிதுகள் ண்டு வந்தவருக்கிட்டச் சென்னாரு.
அந்தக் காலத்தில படிக்கிற புள்ளகள் கொண்டுபோற சிலேட்டுப் பலகய நீங்க கண்டிரிக்கீங்களா ண்டு கேட்டாரு. அவரு ல்லெண்டு பதில் சென்னாரு. சிலேட்டுப் பலகயப் பத்தி அவருக்கு வெளங்கப்படுத்தினாரு.
கொப்பிர அளவுக்கு ஒரு சொட்டுப் பெரிசா எழுத்துக் கொப்பியப்போல நீள் சதுரமா இரிக்கும். கல்லுத் தூளால செஞ்சது. கறுப்புக் கலரு. கீழ உழுந்தா ஒடயும்.
சிலேட்ர நாலு பக்கத்திலயும் செலாக பொருத்தி இரிக்கும். அந்த செலாகய நாங்க சிலேட்டு மட்ட ண்டுதான் செல்ர. சிலேட்டு மட்ட ஒண்டோட ஒண்டு பொருத்திக்கிட்டு சிலேட்ட புடிச்சிக்கிட்டிரிக்கும். மட்டய லேசா கையால களட்டலாம். செல புள்ளகள் வகுப்புல சிலேட்டு மட்டய களற்றதும் பூட்ரதுமா இரிப்பானுகள்.
பழய அஞ்சி சதக் காசி நாலு மூலயும் மழுங்கின மாதிரி சற்சதுரமா இரிக்கிம். அப்பிடி சிலேட்டுப் பலகட நாலு மூலயும் மொன மழுங்கி இரிக்கும். ரெண்டு தெரிப்பா சிலேட்டுகள் இருந்திச்சி. ஒண்டு பெரிசி. மத்தது ஒள்ளுப்பம் சின்னது.
சிலேட்டில ரெண்டு பக்கத்திலயும் குச்சியால எழுதலாம். செல ஆக்கள் குச்சிய சிலேட்டுப் பென்சில் ண்டும் செல்ர. நாம பாவிக்கிற பென்சிலவிட குச்சி தடிப்புக் கொறய. ஒசரமும் கொறய. குச்சிர ஒசரத்தில அரவாசிக்கி தாள் சுத்தி இரிக்கும். எழுத எழுத குச்சிர நீட்டம் கொறஞ்சி வரும். தாள்ர மட்டம் வந்தா அதுக்குப் பொறகு குச்சியால எழுதுற கைட்டம். சிலேட்டு கறுப்பா இருந்தாலும் குச்சியால எழுதினா எழுத்து வெள்ளயா தெரியும். பவுடர் மாதிரி தூள் தெரியும்.
வெளங்கிச்சா ண்டு கேட்டாரு.
ஒமெண்டு பதில் சென்னாரு சிலேட்டில எழுதினா கையால அழிச்சிப்போட்டு திருப்பியும் எழுதலாம். மாக்குச்சியால எழுதினா அழிக்கிற லேசி. கல்லுக் குச்சியால எழுதினா அழிக்கிற கொஞ்சம் கைட்டம். குச்சி வாங்கினா மாக்குச்சியா ண்டு பாத்துத்தான் வாங்குற. செல புள்ளகள் நாக்கில துப்பணிய எடுத்து வெரலால தொட்டு சிலேட்டில இரிக்கிற எழுத்த அழிப்பானுகள். நானெல்லாம் வகுப்புக்கு எதுக்க நிக்கிற மல்லிக மரத்தில பூவ ஆஞ்சி அதாலதான் அழிக்கிற.
மகள் நன்னாரி போட்ட தேத்தண்ணி கொண்டந்து குடுத்தா. ரெண்டு பேரும் குடிச்சாக. வந்தவரு வாய உசுப்பாம கேட்டுக்கிட்டு இருந்தாரு. கனநாளக்கிப் பொறகு மாஸ்டருக்கு கதச்சிரிக்க ஒரு ஆள் கெடச்சிட்டு. சிலேட்டுப் பலகட சாட்டுல வெளக்கம் வெளக்கமா குடுத்துக்கிட்டு இருந்தாரு.
கல்முன டவுண்ல மணமகள் பொத்தகசால ஒண்டு இருந்த. அதுக்கிட்டால நெல்ல பொத்தகக் கட நாகூரார்ர பொத்தகக் கடதான். அது நம்முட ஊர்ல இருந்த. ஆனா மணமகளவிடக் கொஞ்சம் சின்னது. நாகூரார்ர பொத்தகக் கட நம்முட ஊர்ல எங்க இருந்தெண்டு தெரியுமா? ண்டு கேட்டாரு. அவரு தெரியா ண்டு பதில் சென்னாரு.
ப்ப அந்தப் பொத்தகக் கட ல்ல. கலியாண ரோட்டுல மாமிர புரிசன்ட சந்திக்கும் ஆவிசாட சந்திக்கும் எடயிலதான் இருந்த. ப்ப அந்த மூலக்குத்துல ஒரு மரத் தளபாடக் கட இரிக்கி. அதுக்குப் பக்கத்திலதான் பொத்தகக் கட இருந்தெண்டு வெளக்கினாரு.
அந்தக் காலத்தில பெரிய சிலேட்டு முப்பது சதம். சின்ன சிலேட்டு இருபத்தஞ்சி சதம். குச்சி ரெண்டு சதம். ல்லாட்டி மூணு சதம்.
அரிவரி படிக்கிற காலத்தில பாலபோதினி வாசிப்புப் பொத்தகத்த அம்பத்தஞ்சி சதத்துக்கும் சிலேட்டுப் பலகயும் குச்சியும் இருபத்தஞ்சி சதத்துக்கும் எங்கிட வாப்பா நாகூரார்ர கடயில எனக்கி வாங்கித் தந்தது ப்பயும் ஞாபகத்தில இரிக்கி. சிலேட்டும் குச்சியும் சில்லறக் கடயிலயும் விக்கிற. ஆனா பொத்தங்கள பொத்தகக் கடயில மட்டும்தான் வாங்கலாம் ண்டு சென்னாரு.
வகுப்புல பொடியனுகள் சண்ட புடிச்சா சிலேட்டுப் பலகயால தலயில அடிப்பானுகள். எங்கிட வகுப்புல முஸ்தவா ண்ட பொடியன் படிச்ச. என்னேரமும் அவன்ட மூக்கால சளி வழிஞ்சி வாய்க்குள்ள பூரும். புள்ளகள் அவன மூக்கோடி முஸ்தவா ண்டு பட்டப் பேரு செல்லிப் பகிடி பண்ணுவானுகள்.
மாஸ்டர்ர கதய மத்தவரு மிச்சம் கவனமா வாய மூடிக்கிட்டுக் கேட்டுக்கிட்டிருந்தாரு.
நாங்க படிக்கிற காலத்தில எடவேளப் பாடத்தில சாப்பிர்ரதுக்கு வணிசியும் குடிக்கிறதுக்கு பாலும் கெடைக்கும். தகாநாயக்கா ண்ட கல்வி மந்திரி நாடு முழுக்க இதக் குடுத்ததால அவர ஆக்கள் வணிஸ் மாமா ண்டு செல்ர.
அஞ்சாம் வகுப்புப் படிக்கிற ரெண்டு பெரிய புள்ளகள் எங்கிட வகுப்புக்கு வணிசி கொண்டந்து பகிருவானுகள். ஒருக்கா வணிசி பகிரக் கொள்ள பக்கத்தில இருந்தவன் என்னயோ சென்னயாமெண்டு மூக்கோடி முஸ்தவா சிலேட்டுப் பலகயால சென்னவன்ட தலயில அடிச்சிப் போட்டான். பொடியன்ட தல கொஞ்சம் பொடச்சிருந்திச்சி. வகுப்பு டீச்சரு முஸ்தவாவக் கூப்பிட்டு மொழங்கால்ல நிப்பாட்டினா.
சிலேட்டு மட்டயால புள்ளகள் அடிபுடிப்பட்டதால பொறகு காட்போட்டால கறுப்பு சிலேட்டு வந்திச்சி, வளச்சி சிலேட்டு மட்ட இல்ல. உழுத்தா ஓடயயும் மாட்டா.
கறிபுளி வாங்குற நேரம் வந்திச்சி, பாறுக்கு மாஸ்டரு கதைக்கிறத நிப்பாட்டினாரு.
ப்ப ஆருக்கிட்டயும் பழய சிலேட்டுப் பலக இரிக்குமாண்டு வந்தவரு வாயத் தொறந்து ஒரு கேள்வி கேட்டாரு.
ஓம். எங்கிட மூத்த காக்கா பழய சாமான் சக்கட்டுகள பத்திரப் படுத்தி வெய்க்கிற. அவரு ஒரு தடவ தமுள் நாட்டுக்குப் பேசப் போன. ஒரு கடயில் சிலேட்டுப் பலகயக் கண்டு வாங்கிட்டு வந்தாரு. அவர்ர பொத்தக அலுமாரிக்கு மேல ப்பயும் அது இரிக்கி, ண்டு சென்னாரு.
நம்முட நாட்டுல வெள்ளக்காரன்ட காலத்திலயும் சிலேட்டுப் பாவன இருந்த. ப்ப அது நிண்டுபோய் கன காலம். ஆனா இந்தியாவுல தமுள் நாட்டுல கிட்டத்தில வெரயும் சிலேட்டுப் பாவன இருந்த. ப்பயும் இரிக்கா ல்லியாண்டு எனக்கித் தெரியா. எம்ஜியாரு பெரியாளா வந்தோடன படிக்கிற புள்ளகளுக்கு ஒணவுத் திட்டம் கொண்டந்து சாப்பாடு குடுத்தாரு.
புள்ளகள் ஊட்டுல இருந்து சாப்பாட்டுப் பிலேட்டு எடுத்துக்கிட்டுப் போவாங்க. தமுள் நாட்டு ஆக்கள் நெல்லாப் பேசுவாக. பைல சிலேட்டு. கைல பிலேட்டு ண்டு பேசின. அதச் செல்லி சிலேட்டுப் பலகட கதய முடிக்காரு எங்கிட வாப்பா ஒங்களோட ஒண்டாப் படிச்சயாமெண்டு எடைக்கெட செல்லுவாரு ண்டத்த பாறுக்கு மாஸ்டருக்கிட்டச் செல்லி மத்தவரு போக எழும்பினாரு. ஆரு ஒங்குட வாப்பா ண்டு கேட்டாரு.
முஸ்தவா ண்டு செல்லிக்கிட்டு அவரு வெளிய போனாரு
பாறுக்கு மாஸ்டரு சிலேட்டுப் பலகயயும் முஸ்தவாவயும் ஒருநாளும் மறக்கமாட்டாரு.
சிலேட்டுப் பலக: எனது வாசிப்பு அனுபவம் மற்றும் சிறு கணிப்பு …………………………………………………………………….
பாறுக்கு மாஸ்டரின் கதை ஓர் உரையாடலாக ஆரம்பமாகிறது. பழைய பள்ளிக்கூடங்கள், சிலேடுப் பலகைகள், அரிவரி வகுப்புகள்……
அத்தனையும் ஓரு காலத்தின் சுவடுகளாக மீண்டும் உயிர்பெறுகின்றன.
சிலேட்டுப் பலகையின் பளபளப்பு, எழுத்துக் கோடுகளின் தடிப்பும் மெல்லியதுமாக நிகழ்ந்த பயிற்சிகள், குச்சி பிடித்த விரல்கள்…..
அவை அனைத்தும் கல்வியை உணர்ந்து கற்ற காலங்களை நினைவுபடுத்துகின்றன. அந்தக் காலத்தில் பள்ளிக்கூடம் ஒரு அனுபவமாக இருந்தது. இன்று அது வெறும் கட்டாயமாகிவிட்டது.
பாறுக்கு மாஸ்டர் கதைகள் சொல்லிக் கொண்டே செல்கிறார். “நாங்க படிக்கிற காலத்தில…” என்று தொடங்கும் ஒவ்வொரு வரியும் ஒரு காலத்தை உயிர்ப்பிக்கிறது. பள்ளிக்கூட உணவுகளும் கல்வியுடனான பிணைப்பும் அவர் நினைவுகளில் தளிர்க்கின்றன. இன்றைய கல்வியின் வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்கும்போது, சிலேட்டுப் பலகை மட்டும் அல்ல, பழைய கல்வியின் ஆழமும் பாசமும் அற்றுப்போய்விட்டது என்பது உண்மை.
பார்த்துக்கொண்டிருந்தவன் அனைத்தையும் உணர்ந்தவன்போல் தலை ஆட்டுகிறான். காலம் சிலேட்டுப் பலகையைப்போல ஒரு புதிய எழுத்துக்கு இடம் கொடுக்கிறது. ஆனால் பழைய எழுத்துகள் எங்கோ மறைந்துவிட்டன.
சிலேட்டுப் பலகையை மையமாக வைத்து நகரும் இந்தக் கதை, கல்வியில் ஏற்பட்ட மாற்றங்களை விவரிக்கும் வகையில் இரசம் மிக்கதாக ஒரு வாசிப்பனுபவம் அளிக்கிறது. கல்வியில் நடந்த மாற்றங்களையும், அது அடிப்படை மனித உறவுகளைப் பாதித்த விதத்தையும் கேள்விக்குட்படுத்துகிறது.
இன்று கல்லூரிப் பிள்ளைகளும்கூட தங்கள் பள்ளி வாழ்க்கையை நினைத்துப் பார்க்கும்போது, இதுபோன்ற நினைவுகள்தான் அவர்களை நெகிழ வைக்கும்.
சிலேட்டுப் பலகை போலவே, காலமும் உருவான நினைவுகளின் மேலே எழுதிக்கொண்டே போகிறது.
![]()
![]()