“வெந்து தனியா வெண்பாஸ்பரஸ்”…. வாசிப்பு அனுபவம் …. யாழ் ராகவன்.

வாசிப்பு அனுபவம்
நாவல்:வெந்து தனியா வெண்பாஸ்பரஸ்
ஆசிரியர்:ஜெயாநவி
“நாபிக் குலத்தில் எரிமலை குழம்பு
தகிக்கும் வெம்மையில் கரை புரண்ட வாழ்வு”
குட்டி ஜப்பான் என்று சிவகாசிக்கு பேர் வைத்தவர்கள் யார் என்று தெரியவில்லை ஆனால் ஜப்பானில் ஒரே ஒரு முறை தான் ஹிரோஷிமா நாகசாகியில்குண்டு போட்டார்கள் அங்கே ஏற்பட்டு அழிவு மிகப்பெரியது. வரலாற்றில் அவற்றை படிக்கும் போது அதிர்ச்சியும் கவலையும் மேலோங்கி நிற்கும். ஆனால் சிவகாசியில் அடிக்கடி நடக்கும் விபத்துகள் துன்பமயமானவை.
வான வேடிக்கை ,மத்தாப்பு,தரைச்சக்கரம் புஸ்வானம், செவன் சாட் சீனிவெடி ஆயிரம் வாலா தீப்பெட்டி இப்படி இவை எல்லாம் கொண்டாட்டத்தின் சாரமாக இருப்பதற்கு எத்தனையோஉயிர்கள் பலியாவதுதுயரம்.
ஒரு காலத்தில் இறப்பின் ஓலம்கேட்டுக் கொண்டே இருந்தது. இப்பொழுதும் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொழுந்து விட்டு எரியும் விபத்து பற்றிய செய்திகள் துயரம்.சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் பட்டாசு தொழிற்சாலை தீப்பட்டி தொழிற்சாலை விபத்து பற்றி படிக்கும் போது மனது பதறத்தான் செய்கிறது.
கந்தக பூமி ,கரிசல் மண் ,மானாவாரி பயிர்களின் மட்டுமே நம்பி வாழும் விவசாயம் பொய்த்துப் போன ஒரு நிலப்பரப்பில் மக்களின் வாழ்வாதாரம் உயிரை காவு வாங்கும் தொழிலில் முடங்கி இருப்பது வேதனையின் உச்சம்.
எண்பதுகளின் இறுதியில் 90களில் ஆரம்பகட்டத்தில் குழந்தை தொழிலாளர் பலர் அந்த பாஸ்பரஸின் கருகி காணாமல் போன பல வரலாறு நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
கரிசல் பூமியின் எழுத்தாளர்களான பூமணி சோ .தர்மன் ,மேலாண்மைபொன்னுச்சாமி
கு.அழகிரிசாமி தமிழ்ச்செல்வன் இன்னும் பற்பல எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளில் இந்த வெடி தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்துகளைப் பற்றி ஆயிரத்துக்கு மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் ஆனால் எல்லாமே வேதனை. அப்படி ஒரு புதுவரவு
“வெந்து தணியாத வெண்பாஸ்பரஸ்”எழுத்தாளர் ஜெயா நவி அவர்கள் எழுதிய நூலைப் படிக்க நேர்ந்தது.
சிவகாசி மாவட்டத்தைச் சார்ந்தவர் எழுத்தாளர் ஜெயாநவி . விவசாயம் பொய்த்துப் போன கிராமத்திலிருந்து சிவகாசிக்கு இடம் பெயர்ந்த ஒரு குடும்பத்திற்கு நேர்ந்த அவலமான சூழலை காத்திரமாகவும் சமூக அக்கறையோடும் பதிவு செய்திருக்கிறார் நாவலாசிரியர்.
குடிகார கணவனான ராமசாமி அவன் தொல்லைகளை பொறுத்துக் கொண்டு எப்படியாவது பிள்ளைகளை வளர்க்கத் துடிக்கும் மனைவி முத்துமாரி இவர்களுக்கு
தமிழ்ச்செல்வி. மலர்விழி என்ற இரண்டு பெண் குழந்தைகள் ஆகியோர் உள்ள எளிமையான வறுமையின் பிடியில் வாழுகின்ற ஒரு குடும்பம்.
பெண் குழந்தைகளை நல்ல முறையில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையோடு மாடு கன்றுகளை வைத்துக்கொண்டு விவசாய வழியில் பிழைக்க முடியாது தீப்பெட்டி தொழிற்சாலையில் வெடி மருந்து தொழிற்சாலைகளிஸல்பிழைத்துக் கொள்ளலாம் என்ற ஆயிரம் கனவுகளோடு நகரத்திற்கு இடம்பெறுகிறது ராமசாமி குடும்பம்.
குடி நோயின் காரணமாக குடும்பத்தின் சீரழிவை குடும்பத் தலைவனின் பொறுப்பாற்ற நிலையை எல்லா குடும்பங்களில் நடக்கும் துயரங்களையும் மிகுந்த வேதனையோடு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வேலியே பயிரை மேய்வது போல் தற்பொழுது மிக அதிகமாக காணப்படுகின்ற பாலியல் வன்கொடுமை, பாலியல் அத்துமீறல் பாலியல் சீண்டல். ஆகியவற்றை மிக தைரியமான குரலில் படைப்பாளி பேசுகிறார்.
குறிப்பாக ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலே நடக்கும் பாலியல் வக்கிரங்களை ஆசிரியர் என்ற பேரில் இருக்கின்ற அரக்கர்களின் அத்துமீறிய செயல்களைத்தோலுரித்துக் காட்டும் துணிச்சலான கதாபாத்திரமும் ,காட்சியமைப்பும் நாவலாசிரியரின் சமூக அக்கறைக்கு சாட்சியம்மாகிறது.
நன்றாக படித்து நல்லதொரு நிலையை அடையத் துடிக்கின்ற தமிழ்ச்செல்வி என்ற எட்டாம் வகுப்பில் உள்ள சிறுமிக்கு ஏற்பட்ட பாலியல் வல்லுறவால் அவள் மனநிலையும் படிப்பும் எப்படி பாதிக்கப்பட்டது என்பதை தத்துவமாக வர்ணித்து இருக்கிறார்.
தீப்பெட்டி தொழிற்சாலை மற்றும் வெடி மருந்து தொழிற்சாலைகள் ஏற்படும் ஆபத்தான நிலை அங்கு ஏற்படும் விபத்து அந்த விபத்திற்கு காணசூழல்கள் இவை எல்லாம் படிக்கின்ற பொழுது வேதனை அதிகமாகிறது.
சரவணன் சித்ரா இவர்களின் காதலில் உள்ள சாதிய பாகுபாட்டின் காரணமாக ஏற்படும் சிக்கல்கள் பணியிடங்களில் ஏற்படும் பாலியல் அத்துமீறல்கள் ஆகியவற்றையெல்லாம் அழுத்தமாகவும் ஆழமாகவும் பதிவு செய்திருக்கிறார்.
பெண்கள் குடும்பத்தில், வெளியிடங்களில், பணியிடங்களில் சந்திக்கின்ற பல்வேறு இன்னல்களை நாவல் பேசுகிறது.
வெடி மருந்து தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டவுடன் நடக்கின்ற சம்பவங்கள் மருத்துவமனை காட்சிகள் இறுதிக்கட்ட காட்சிகள் மிகவும் விறுவிறுப்பாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
முத்துமாரி என்ற கதாபாத்திரம் கதையை நகர்த்தி செல்கிற முதன்மை பாத்திரமாகிறார் வீரம் விவேகம் உழைப்பு அன்பு பரிதாபம் எல்லாம் நிறைந்த சராசரி பெண்மணியாக இருக்கிறாள்.
ஆறுமுகம் ,ராமசாமி,வெடிமருந்து கடை முதலாளி தமிழ்ச்செல்வி சர்ச்சைக்குரிய ஆசிரியர் மற்றும் நல்லாசிரியர் ஆகிய கதாபாத்திரங்கள் நாவல் முழுதும் உலா வருகின்றனர்.
சிவகாசி சுற்றி உள்ள கிராமங்களில் உள்ள மக்களின் வாழ்க்கையை படம்பிடித்து காட்டியது உண்மையிலேயே நாவல் மனதில் நிற்கிறது. தமிழ்ச்செல்வி மீண்டும் படிப்பை தொடர்வதுஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது.
நாற்கரம் பதிப்பகம் வெளியீடாக வந்திருக்கிற இந்த நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்று ள்ளது என்பது கூடுதல் தகவல்
பரிசு பெற்ற நாவலாசிரியர் ஜெயாநவி அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்
பக் .160
நாற்கரம் பதிப்பகம்
சென்னை
![]()