இலங்கை

சபையில் சஜித் சண்டித்தனமா?;  மன்னிப்பு கேட்குமாறு கூறிய சபை முதல்வர்

பிரதி சபாநாயகரை பார்த்து ”நடுவே பாய வேண்டாம்” என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறிய போது அதற்கு சபை முதல்வர் எதிர்ப்பு வெளியிட்டதால் சபையில் நேற்று வியாழக்கிழமை அமைதியின்மை ஏற்பட்டது.

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை சம்பவம் தொடர்பில் பிரதமரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வியெழுப்பி உரையாற்றிக்கொண்டிருந்த போது, சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்விசாலி அவ்வேளையில் ஏதே கூற முயன்ற போது நடுவே பாய வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியதை தொடர்ந்து, அந்த வசனத்தை எதிர்க்கட்சித் தலைவர் வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததையடுத்தே அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பிரதமரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றி கூறுகையில், ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் பிரதமரிடம் முக்கியமான கேள்வியொன்றை கேட்க வேண்டியுள்ளது. அதாவது இந்த கொலை சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையான விசாரணைகளை நடத்தி அவரின் குடும்பத்தினருக்கும் ஊடகத்துறைக்கும் நீதி, நியாயத்தை நிலைநாட்டி குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவர அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்ன? என்றார்.

இவ்வேளையில் தொடர்ந்தும் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிய போது, குறுக்கிட்ட பிரதி சபாநாயகர் மொஹமட் ரிஷ்விசாலி, ”எதிர்க்கட்சித் தலைவர் அவர்களே” என்று கூறும் போது அவரை பார்த்து பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர் தயவு செய்து இடையே பாயாது நிமிடமொன்றை தாருங்கள் என்று கூறினார்.

இதன்போது எழுந்த சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இந்த சபையில் நிறைய சண்டியர்கள் உள்ளனர். நேற்று ஒருவர் சபாநாயகரை பார்த்து வெட்கம் என்று கூறுகின்றார். இன்று ஒருவர் ஆளும் கட்சி பிரதம கொரடாவுக்கு ஏதோ கூறுகின்றார். இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பிரதி சபாநாயகருக்கு குறுக்கே பாயாமல் இருங்கல் என்கிறார். நீங்கள் இந்த வசனத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் பிரதமரிடம் கேள்வியெழுப்பும் போது பிரதி சபாநாயகர் ஏதோ நேரம் தொடர்பில் ஏதோ கூற வந்தார். இதனை விமர்சிக்கின்றீர்கள். நீங்கள் பிரதி சபாநாயகரிடம் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது அந்த வசனத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இங்கே சண்டித்தனம் கூடாது என்றார்.

சபை முதல்வர் அவ்வாறு தெரிவித்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டது.

இவ்வேளையில் அனைவரையும் அமைதியாக இருக்குமாறு அறிவித்த பிரதி சபாநாயகர், நீங்கள் என்னை அவமதிக்கவில்லை. இந்த ஆசனத்தையே அவமதிக்கின்றீர்கள். நேற்று ஒருவர் இந்த ஆசனத்தை பார்த்து வெட்கம் என்று கூறி அவமதித்துள்ளார். நீங்கள் அமருங்கள். நான் கூறுவதை கேளுங்கள். இந்த சபையின் ஒழுங்கை பேணுங்கள் என்றார்.

எதிர்க்கட்சித் தலைவரான உங்களிடம் இருந்து அந்த வசனம் வெளியானமை தொடர்பில் நான் அதிர்ச்சியடைந்தேன். நீங்கள் என்னை கூறாவிட்டாலும் இந்த ஆசனத்திற்கு கூறியுள்ளீர்கள். அதனை நீக்கிக்கொள்ளுங்கள் என்றார்.

இதன்போது பதிலளித்த எதிர்க்கட்சித் தலைவர், நான் குறுக்கே பாய வேண்டாம் என்று நான் கூறினேன். அதனை உங்களின் ஆசனத்திற்கு அவமதிப்பதாக இருந்தால் அதனை நான் வாபஸ் பெற்றுக்கொள்கின்றேன். எனக்கு வரட்டு கௌரவம் கிடையாது என்றார்.

இவ்வேளையில் கூறிய பிரதி சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் அதனை வாபஸ் பெற்றுக்கொள்வதாக கூறியதை நான் வரவேற்கின்றேன். இது தொடர்பில் சகல இலங்கையர்களும் பெருமை கொள்வர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *