கிழக்கில் தமிழ் பேசும் ஆளுநர் ஏன் இல்லை?

இனம், மதங்களை அடிப்படையாகக் கொண்டு எந்த பதவிக்கும் நியமனங்களை அரசாங்கம் செய்வதில்லை என்றும், குறிப்பிட்ட பதவிக்கு தகுதியுடைவரா என்பதனை பார்த்தே நியமனங்களை அரசாங்கம் வழங்குகின்றது என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானஙகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது,
கிழக்கு மாகாணத்திற்கு தமிழ் பேசும் ஆளுநர் மற்றும் செயலாளர் நியமிக்கப்படாமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார்.
அதன்போது அவர் மேலும் கூறுகையில்,
நாங்கள் தமிழ், சிங்களம், முஸ்லிமா என்று பார்த்து எந்த நியமனங்களையும் செய்வதில்லை. தேவையான இடங்களுக்கு பொருத்தமானவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஆளுநர்கள் நியமனத்தின் போதும் அவ்வாறே நியமனங்கள் இடம்பெறுகின்றன. எந்த இனம் மற்றும் மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் அவருக்கு குறித்த பதவியில் செயற்பட தகுதி இருந்தால் அந்த நியமனத்தை மேற்கொள்வோம்.
இதேவேளை அரசியல் கட்சிகள் மற்றும் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்வது நீங்கள் மாறாவிட்டாலும் மக்கள் மாறிவிட்டனர். மக்கள் தேசியக் கொடியுடன் சுதந்திர தினத்தை கொண்டாட ஆரம்பித்துள்ளனர். மக்களின் மனநிலைகளை புரிந்துகொள்ளுங்கள். பொருத்தமான பதவிக்கு தகுதியுடைவர்கள் நியமிக்கப்படுகின்றனர். இனம், மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளை மகிழ்விக்கவோ அவர்களின் சமூக ஊடகங்களின் அழுத்தங்களுக்காகவோ செயற்பட போவதில்லை. தகுதியானவர்களை பொருத்தமான பதவிகளுக்கு நியமிப்போம் என்றார்.
![]()