இலங்கை

கட்சிகள் இணைப்பு ரணில் – சஜித் சந்திப்பர்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் இருக்கட்சித் தலைவர்களும் இணைந்து கலந்துரையாடுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தற்போது இருக்கட்சிகளும் குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு செயற்குழுக்களை நியமித்துள்ள போதும் இதுவரை நான்கு கட்ட பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்துள்ளன. ஆனால் இதுவரை கட்சித் தலைவர்கள் சந்திப்பு இடம்பெறவில்லை.

இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய இரு கட்சிகளின் தலைமைத்துவ மட்டப் பேச்சுக்கள் எதிர்வரும் சில தினங்களில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இரண்டு கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என சில காலமாக தாம் கூறி வந்த கருத்தை தற்போது பலரும் அங்கீகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.

மேலும் இரு கட்சிகளுக்குமிடையிலான கலந்துரையாடல்கள் மிகவும் வெற்றிகரமான மட்டத்தில் இருப்பதாகவும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சில இடங்களில் கூட்டணியாகவும் சில இடங்களில் தனித்தனியாகவும் போட்டியிட்டு பின்னர் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இரு கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *