இலங்கை

மட்டக்களப்பில் இன்று ஆர்ப்பாட்டம்; 3 எம்.பி.க்கள் உட்பட 7 பேருக்குத் தடை!

மட்டக்களப்பு தலைமைய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தேசிய சுதந்திர தினமான இன்று செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டங்கள் மற்றும் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை தடுப்பதற்ககாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட ஏழு பேருக்கு நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் இதற்கான தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படவுள்ள நிலையில் காந்திபூங்காவில் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வினை பாதிக்கும் வகையிலான எந்தவொரு ஆர்ப்பாட்டத்தினையோ எந்தவொரு சட்ட விரோத செயற்பாடுகளையோ மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நியாயதிக்குட்பட்ட எந்தவொரு பகுதியிலும் மேற்கொள்ளக் கூடாதென இந்த ஏழு பேரின் பெயர் குறிக்கப்பட்டு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவர் அ.அமலநாயகி,செயலாளர் சுகந்தினி, அரசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியமான இணையத்தின் தலைவர் எஸ்.சிவயோகநாதன்,சிவில் சமூக செயற்பாட்டாளர் இ.செல்வகுமார் ஆகியோருக்கு இந்த தடையுத்தரவு பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி,தமிழர்களுக்கான உரிமையினை வலியுறுத்தி இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டித்து வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வடகிழக்கில்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மட்டக்களப்பில் இன்று மாபெரும் பேரணிக்கும் போரராட்டத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இதில் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதேநேரம் ஜனநாயகத்தினை பாதுகாக்கப் போவதாக கூறி ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கமும் ஜனநாயகத்தினை குழிதோண்டி புதைக்கும் செயற்பாடுகளையே முன்னெடுத்துள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளுக்கும் தமது உரிமைக்காக போராடும் உரிமையிருக்கும் போது தமிழர்களுக்கும் மட்டும் அந்த உரிமையினை மறுக்கும் செயற்பாடுகளையே இந்த நாட்டில் ஆட்சியமைக்கும் அதிகாரங்கள் கையிலெடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *