‘கரிநாள்’ போராட்டங்களில் நாங்களும் பங்கேற்போம்

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாக பார்ப்பது தான் எம்முடைய மரபாக இருக்கிறது என தெரிவித்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் தாயக நிலப்பரப்பில் சுதந்திர நாளில் நடைபெறவுள்ள கரிநாள் போராட்டங்களில் பங்கேற்போம் என்றார்.
யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறிலங்காவின் சுதந்திர தினத்தை தமிழ்த் தேச மக்கள் சுதந்திர தினமாக கருதுவது கிடையாது.சிறிலங்காவிற்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்புக்களை தமிழ் மக்கள் நிராகரித்தே வந்திருக்கின்றனர்.
அந்த அரசியலமைப்புக்கள் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டதை தமிழ் மக்கள் நிராகரித்திருந்தனர்.
அதேபோன்று இப்போதும் புதிய அரசியலமைப்பை கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான ஒற்றையாட்சி அரசியலமைப்பை தமிழ் மக்கள் எப்போதும் நிராகரிப்பார்கள்.
அடிமை சாசனத்தின் அடையாளமாக இருக்கின்ற ஒற்றையாட்சி அடையாளங்களை நிராகரிக்கும் அதேவேளையில் தமிழில் தேசிய கீதம் பாடுவதால் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை. இவ்வாறான நிலைமையில் சிறிலங்காவின் சுதந்திர தினத்தை கரி நாளாகத் தான் பார்ப்பது எம்முடைய மரபாக இருக்கிறது.
அந்த வகையில் சிறிலங்காவின் சுதந்திர நாளை(இன்று) கரிநாளாக அனுஸ்டித்து வருகின்றனர். அதனடிப்படையில் தமிழர் தாயக நிலப்பரப்பில் சுதந்திர நாளில் கரிநாள் போராட்டங்கள் நடைபெறவுள்ளன. அவ்வாறு வடக்கு மற்றும் கிழக்கில் நடக்கவுள்ள இந்த கரிநாள் போராட்டத்தில் நாங்களும் கலந்து கொள்ளவுள்ளோம் என்றார்.
![]()