கதைகள்

“நடுகைக்காரி -79″… ஏலையா க.முருகதாசன்

நாங்கள் எங்கடை சங்கம் என்று நினைச்சுத்தான் துணி வாங்க வந்தனாங்கள் நாங்கள் மனுசப் பிறவியா இல்லையர்,நாங்கள் என்ன பாவப்பட்ட ஜன்மங்களா?.ஏன் எங்களை இவ்வளவு கேவலமாகக் கதைக்கினம்
-பார்வதி

வேகமாக படியேறிப் போன ஞானமும் பார்வதியும் மற்றவர்களுக்குத் தெரியும்படியாக கண்ணாடிச் சுவர்களால் பெரிய கூடமாக நிர்மாணிக்கப்பட்ட கூடத்து கதவடியில் நின்று ஞானம் உள்ளே வரலாமா எனக் கையைக் காட்டிக் கேட்க அங்கே கதிரையில் உட்கார்ந்து கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் யாரோ இருவர் நிற்கும் அசிகையைக் கண்டு, ஒவ்வொருவரும் கதவைத் திறந்து விடுவம் என்று தமது இருக்கையை விட்டு எழுவதற்கு ஆயத்தமாகும் போதே வேகமாகக் கதவடிக்கு வந்த முருகதாசன் கதவைத் திறந்துவிடுகிறான்.

கதவைத் திறந்த முருகதாசன் ஞானத்தைக் கண்டதும் மகிழ்ச்சியில் என்ன ஞானம் திடீரென்று இந்தப் பக்கம் என்கிறான்.

கீழை துணிக்கடையிலை ஒரு பிரச்சினை ஜிஎம்மைப் பார்த்து கதைக்க வேணும்,கடையிலை கேட்டன் ஜிஎம் இண்டைக்கு வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்று ஞானம் பதிலளிக்க,ஞானத்திற்குப் பக்கத்தில் நின்ற பொம்பிளைப் பிள்ளையைப் பார்த்த முருகதாசன் அவளின் முகம் இயல்பாக இல்லாமல் அழுதிருக்கிறாள் என்பதை கண்கள் காட்டிக் கொடுத்தன.
அவளின் முகமும் மூக்கும் சிவந்து அது கோபத்தைக் காட்டின.என்னவாக இருக்கும் என யோசித்துக் கொண்டே என்ன பிரச்சனை கீழை யாரோடையாவது பிரச்சினையா என்கிறான் முருகதாசன்.

துணிக்கடையில் தன்னைக் கேவலமாகக் கதைச்சதைச் சொல்லவென வாயைத் திறக்கையில் சிலம்பரசி கதவைத் திறந்து கொண்டு மூக்கை லேஞ்சியால் துடைச்சபடி ஞானத்தையம் பார்வதியையும் முறைச்சுப் பார்த்தபடியே தானிருந்து வேலை செய்யம் கதிரையில் போய் உட்காருகிறாள்.

சிலம்பரசியும் அழுதிருக்கிறாள் என்பபதை பார்க்கிறான் முருகதாசன்.அவள் லேஞ்சியால் கண்களையும் மூக்கையும் துடைப்பதை அந்தக் கூடத்திலிருந்து வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிலர் கவனிக்கின்றனர்.

கொஞ்சம் தள்ளி உட்கார்ந்து வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் நான் நினைக்கிறன் சிலம்பரசிக்கும் இவை இரண்டு பேருக்குமந்தான் ஏதோ பிரச்சினை துணிக்கடையிலை நடந்திருக்குது என்று பக்கத்த மேசையிலிருந்து வேலை செய்து சிவலிங்கத்துக்குச் சொல்கிறாள்.

அங்கை போய் உட்கார்ந்திருக்கிறவாவோடைதான் பிரச்சினை என்று பார்வதி சொல்ல, திகைச்ச முருகதாசன் அவள் தன்னுடைய மனைவி என்று சொல்வதா விடுவதா என்று தடுமாறுகிறான்.

துணிக்கடையிலை இவர்களுக்கும் தனது மனைவிக்கும் என்னதான் நடந்திருக்கும், ஜிஎம்மிட்டைக் கொம்பிளையின் பண்ணுமளவிற்கு அப்படி என்னதான் நடந்திருக்கும் என்று யோசனையுடன் நின்ற முருகதாசனிடம் ஜிஎம்மின் அறை இதுதானே என கதவு நிலையில் முகாமையாளர் என்று தமிழில் எழுதி ஒட்டியிருந்த கதவைக் காட்டிக் கேட்க ஓம் இதுதூன் என முருகதாசன் சொல்ல அந்த அறைக் கதவை நோக்கிப் போன ஞானமும் பார்வதியும் மெதுவாகக் கதவைத் தட்டினர்.உள்ள வாருங்கள் என்று ஜிஎம் சொல்ல இருவரும் உள்ளே நுழைந்தனர்.

வேகமாகத் தன் மனைவியிடம் போன முருகதாசன் ஜஎம்மிட்டை கொம்பிளையின் பண்ணுமளவிற்கு துணிக்கடையிலை நீங்கள் என்ன செய்தனீங்கள் என்று கேட்க, ஒன்றுமில்லை ஒரு சின்ன விசயத்தைப் பெரிசுபடுத்தி அவை இரண்டு பேரும் கொம்பிளையின் பண்ண வந்திட்டினம் என்று சிலம்பரசி சொல்ல என்னவாக இருக்கும் என்ற ஆவலில் சிவலிங்கமும் சாரதாவும் கேதீஸ்வரனும் சிலம்பரசி இருந்த மேசையடிக்கு வந்துவிட்டனர்.
ஓன்றுமில்லை என்று சிலம்பரசியின் வாய் சொன்னதே தவிர அவளின் சோகமான முகமும் அவள் அடிக்கடி மூக்கை உறிஞ்சியபடி லேஞ்சியால் மூக்கைத் துடைச்சுக் கொண்டிருந்ததும் ஏதோ பெரிய பிரச்சினை நடந்திருக்க வேணும் என்று அவளின் கணவன் முடிவெடுத்தான்.

என்ன நடந்தது என்று உண்மையைச் சொல்லுங்கள் என்று கணவன் வற்புறுத்திக்: கேட்டதும் இப்ப உள்ளை போனாளே ஒருத்தி அவளைக் கண்டதும் மலிவென்றால் காகங்கள் மாதிரி குளிக்காமல் வந்திடுவினம் என்று அவளைப் பார்த்துக் கொண்டே கண்களாலை அவளைக் காட்டிச் சிவரஞ்சனி அக்காவுக்குச் சொன்னதை அந்த ஒருத்தி கவனிச்சிட்டாள் என்று சொன்னது உண்மைதான் என அகங்காரத்துடன் சொன்னதைக் கேட்டதும் முருகதாசனுக்கு கோபம் வந்தவிட நீங்கள் அப்படிச் சொன்னது மிகப் பெரிய பிழை சிலம்பரசி,இப்பவும்கூட ஒருத்தி என்று ஏளனமாகவும் அழுத்தியும் சொல்லுகிறீர்கள்.உங்களை யாராவது உனது உடம்பிலிருந்து வியர்வை நாறுது,வாய் மணக்குது என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா வராதா,உங்களுடைய சுயமரியாதையைச் சீண்டியதாக இருக்குமா இல்லையா என்று கேட்டதும்,இப்ப என்ன ஏதோ சொல்லிட்டன் அதைத் தூக்கிப் பிடிச்சுக் கொண்டு வந்திட்டினம்,அவள் வந்தாள் அது சரி அவர் ஏன் வந்தவர் அவர் என்ன இவரின் சின்னா,அவளின்ரை கைத்தடியா இல்லாட்டில் லவ்வரா என்று சொல்ல,சிலம்பரசியோடை ஒன்றும் கதைக்க வேண்டாம் என்று கண்ணைக் காட்டிக் சைகை செய்கின்றனர் சிவலிங்கமும் கேதீஸ்வரனும்.

ஜிஎம்மின் அறைக்குள் நுழைஞ்ச ஞானமும் பார்வதியும் தாங்கள் ஜிஎம்மைப் பார்க்க வந்த காரணத்தை விளக்கிக்: கொண்டிருந்தனர்.

துணிகளை உடுப்பக்களை எடுத்துப் போட்டுக் காட்டும் தெற்குப் பக்க பட்டடைக்கு துணி வாங்குவம் என்று போனதும் என்னைப் பார்த்து அங்கை வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மலிவெண்டு அறிஞ்சால் காகங்கள் மாதிரி குளிக்காமல் வந்திடுவினம் என்று சொன்னார்.
அது எனக்கு கோபத்தையும் கவலையையும் தந்திருக்குது.நாங்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா,எங்களுக்கும் சுயமரியாதை இருக்குது கோபத்தில் படபடப்புடன் சொன்ன பார்வதியையும் அவளோடு வந்த ஞானத்தையும் ஜிஎம் நவரட்ணராஜா இருக்கச் சொல்கிறார்.

அந்தப் பெண்ணின் வாயிலிருந்து தற்செயலாக இந்த வார்த்தை வரவில்லை.அவர் என்ரை சுயமரியாதையை சீண்டியிருக்கிறார் என்று பார்வதி சொல்ல,யார் அந்தப் பெண் என்று சங்கத் தவைர் மனோகரன் கேட்க,அந்த சேல்ஸ்வுமன் எங்களுக்குப் பின்னாலை வந்து இங்கை வேலை செய்யிற ஆட்கள் இருக்கிற இடத்திலை ஒரு கதிரையிலை உட்கார்ந்திருக்கிறார் என்று ஞானம் கையால் கிளார்க்மார் வேலை செய்யும் திசையைக் காட்டுகிறான்.
யாரென்று போய்ப் பாருங்கள் என்று சங்கத் தலைவர் மனோகரன் சொல்ல ஜிஎம் நவரட்ணராஜா வேகமாக எழுந்து கதவைத் திறந்து பார்க்க சிலம்பரசி லேஞ்சியால் மூக்கையும் கண்களையும் துடைச்சபடி ஜிஎம் நவரட்ணராஜா கதவைத் திறந்து தன்னைப் பார்ப்பதைக் கண்டதும் கதிரையை விட்டெழுகிறாள் சிலம்பரசி.

சிலம்பரசிதான் கடைக்குத் துணி வாங்க வந்த அந்தப் பெண்ணை அவமானப்படுத்தியிருக்கிறாள் என்பதை கண்டுகொண்ட ஜிஎம் நவரட்ணராஜா சிலம்பரசியை தனது அறைக்கு வரச் சொல்லிவிட்டுப் போய் தனது இருக்கையில் உட்காருகிறார்.
ஞானம் எதுவுமே பேசாமல் உட்காகார்ந்திருந்தான துணிக்கடையிலை இந்தப் பிள்ளைக்க என்ன நடந்தது என்றதை எழுதி வாங்குவம் என்று சங்கத் தலைவர் சொன்னதும்அதை ஏற்றுக் கொண்ட ஜிஎம் நவரட்ணராஜா வெள்ளைத் தாள்கள்; சிலதைக் குடுத்து உங்களுக்கு அங்கை என்ன நடந்தது என்பதை விபரமாக எழுதித் தரும்படி சொன்னவர்,மறக்காமல் உங்களுடைய வீட்டுத் தபால் முகவரியையும் எழுதுங்கள் என்று சொல்கிறார்.

பார்வதி எழுதத் தொடங்கும் போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்கவே ஜிஎம் உள்ளே வாருங்கள் என்கிறார்.  உள்ளே வந்த சிலம்பரசி ஞானமும் பார்வதியும் அருகருகாக உட்கார்ந்திருப்பதையும் பார்வதிக்கு முன்னாள் வெள்ளைத்தாள்கள் இருப்பதையம் கவனிக்கிறாள்.

தாளின் மேல் வலது மூலையில் பார்வதி தனது வீட்டுத் தபால் முகவரியையும் எழுதியிருப்பதையும் உற்றுக் கவனிக்கிறாள்.

அங்கு வந்து நின்ற ஐந்து விநாடிகளுக்குள் சிலம்பரசியின் கண்கள் பார்வதி எழுதிய செல்வி.பார்வதி தவசி,புளியடி வைரவர் வீதி,தெல்லிப்பழை கிழக்கு,தெல்லிப்பழை என்று வாசித்துவிடுகின்றன.

சிலம்பரசியை இருக்கச் சொல்லுகிறார் ஜிஎம் நவரட்ணராஜா.ஞானத்தையும் பார்வதியையும் கீழ்க் கண்ணால் பார்த்துக் கொண்டே ஞானம் இருந்த கதிரைக்கு அடுத்த கதிரைக்கு அடுத்த கதிரையில் உட்காருகிறாள் சிலம்பரசி.

சிலம்பரசி பார்வதியைக் கண்களால் எரித்துவிடுவது போல பார்த்ததை . சங்கத் தலைவரும் ஜிஎம்மும் பார்த்துவிட்டரெனினும் அதைக் காட்டிக் கொள்ளாமல் பார்வதியிடம் துணிக்கடையிலை உங்களுக்கும் இவாவுக்குமிடையிலை என்ன நடந்தது என்றதைச் சொல்லுங்கள் என பார்வதியைப் பார்த்து ஜிஎம் கேட்க பார்வதி துணிக்கடையிலை நடந்ததைச் சொல்லத் தொடங்குகிறாள்.

நானும் அம்மாவும் சங்கத்தின் துணிக்கடைக்கு வந்தனாங்கள்.அம்மா வடக்குப் பக்கத்திலிருக்கும் துணி அலுமாரிப் பட்டடைக்குப் போக நான் தெற்குப் பக்கத்து அலுமாரியிருக்கும் பட்டடைக்கு வந்து இந்த அக்கா நின்றதுக்கு நேர் எதிரிலை நிற்கும் போது இவா என்னைக் கண்ணால் காட்டி பக்கத்திலை நின்ற அக்காவிடம் மலிவென்றால் இதுகள் காகக்கூட்டம் மாதிரி குளிக்காமல் வந்திடுங்கள் என்று சொண்டுக்குள்ளை; சிரித்தபடி நக்கலாச் சொன்னவா என்று சிலம்பரசி எப்படி கண்சாடைகாட்டி கதைத்தாளோ அதே போலவே பார்வதி செய்து காட்டினாள்.

தொடர்ந்த பார்வதி இந்த அக்கா அப்படிச் சொன்னதும் எனக்கு அவமானமாக இருந்தது.எனது சுயமரியாதையை எனது மனித உணர்வை இந்தக்கா சீண்டியதால் எனக்கு அழுகையும் கோபமும் வந்தது.

என்னையா சொன்னனீங்கள் என்று இவரைக் கேட்க நான் உன்னைச் சொல்லவில்லை என்றார். அறிமுகம் இல்லாத ஒருவரை நீ என்று சொல்வதே தப்பு ஆனால் அவர் என்னை ஒருமையில் நீ என்று சொன்னது இன்னும் கோபத்தையும் கவலையையும் தந்தது.

என்னைச் சொல்லாவிட்டால் இங்கை நிக்கிற சனங்களையா சொன்னனீங்கள்,அப்படீயென்றால் எல்லாரையம் காகக்கூட்டம் என்றும் குளிக்காமல் வந்தவர்கள் என்றும் சொல்லுகிறீர்களா என்று கேட்டு நான் இந்த அக்காவுக்கு மரியாதை குடுத்துக் கதைக்க அவர் திரும்பத் திரும்ப நீ நீ என்றே கதைச்சார்.

நாங்கள் எங்கடை சங்கம் என்று நினைச்சுத்தான் துணி வாங்க வந்தனாங்கள் நாங்கள் மனுசப் பிறவியா இல்லையா ஏன் இப்படியெல்லாம் கேவலமாகக் கதைக்கினம்,அதற்கு மேல் அவளால் சொல்ல முடியாமல் நா தழுதழுத்தது குமுறி அழுதாள்,நாங்கள் என்ன பாவப்பட்ட ஜன்மங்களா பார்வதியின் கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழிந்து அவள் எழுதி வைத்திருந்த தாளை நனைத்தது.

ஞானத்துக்கு அவள் பெயர் தெரியாது,அழாதையுங்கோ இவை ஒரு நல்ல முடிவு சொல்லுவினம் என்று பார்வதியை ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தான்.
ஜி எம்மும் தலைவரும் அழாதையுங்கோ நாங்கள் நல்ல தீர்மானத்திற்கு வருவோம் என்றனர்.தலைவர் நீங்கள் படிக்கிறவர்தானே எங்கை படிக்கிறியள் என்று கேட்க பார்வதி யூனியன் கொலிஜ்ஜிலை என்று சொன்னவள்,அப்பு என்னை மகாஜனாவில் சேர்க்கவெண்டு கூட்டிக் கொண்டு போனவர் ஆனால் அவை இங்கை சேர்க்க இடமில்லையென்று சொல்லிப் போட்டினம் என்றாள்.

பார்வதியைத் தலைவரும் ஜிஎம்மும் வாஞ்சையோடு பார்த்தனர்.ஜிஎம் ஒரு கிளாசில் தண்ணீரை வார்த்து பார்வதிக்கு நீட்ட அவள் வாங்கிக் குடித்தாள்.

அவள் விரல்கள் நடுங்கின.சுயமரியாதை என்பது மானத்தக்குச் சமனானது என்பதை அந்த விரல்களின் நடுக்கம் காட்டியது.நடுங்கிய உடலும் சூடான கண்ணீருக்குள் கொதிக்கும் கண்களுமாக சிலம்பரசியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.

அப்பொழுது சிலம்பரசி எதிர்பார்க்காத சொல் ஒன்று ஜிஎம்மின் வாயிலிருந்து வந்தது.

(தொடரும்….)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *