மகிந்தவுக்கு வீடு வழங்கிய போது அதனை அநுர எதிர்க்கவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அவரை வெளியேற்றுவதற்கு சட்டரீதியாக அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதற்கு தயாராகியுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க அனுமதி வழங்கிய கூட்டத்தில் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்கவும் கலந்துகொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு விஜேராமவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்க நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற எதிர்க் கட்சித் தலைவர்களின் விசேட கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோருடன் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசாநாயக்க கலந்து கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.
கொழும்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் இடம்பெற்ற விசேட சந்திப்பிலேயே இவ்வாறு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உத்தியோகபூர்வ குடியிருப்புகளை வழங்க அரசாங்கம் சட்டப்பூர்வமாகக் கடமைப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி கலந்து கொண்ட கூட்டத்தில், மஹிந்த ராஜபக்சவுக்கு அதிகாரப்பூர்வ இல்லம் வழங்க முடிவு செய்யப்பட்டது, இது சட்டப்பூர்வமாக நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறுமாறு கடிதம் மூலம் அவருக்கு அறிவிக்கப்பட மாட்டாது என பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும், அந்த சட்டமூலத்தை நிறைவேற்றிய பின்னர் அது சட்டமாக மாறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
![]()