கட்டுரைகள்

பவளத்திட்டில் பழந்தமிழர் கறி!… தொடர் – 5 …. சங்கர சுப்பிரமணியன்

உலகில் எண்ணற்ற உயிர்கள் பிறக்கின்றன வாழ்கின்றன பின் மடிகின்றன. இது இயற்கையின் சுழற்சி. இந்த சுழற்சியில் மனிதன் சாதி, மதம், சிறியவன், பெரியவன், போட்டி, பெருமை, பொறாமை, புகழ் போன்ற பலவற்றில் சுழன்று வாழ்கிறான். இந்த சுழற்சியில் புகழ் கிடைக்கும்போது நாம் பெருமையடைகின்றோம். அந்த புகழை கொண்டாடுகிறோம். நம் பெருமையை மற்றவர்கள் நினைவூட்டும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி பொங்குகிறதல்லவா?

அதுபோன்ற ஒரு மகிழ்ச்சி பவளப்பாறையி்ல் எனக்கு ஏற்பட்டது. அங்கே கொடுக்கப்பட்ட உணவில் இலங்கை கோழிக்கறி என்று குறிப்பிட்டிருந்ததில் எனக்கு மகிழ்ச்சி.
அப்படி குறிப்பிடாமல் இருந்து இலங்கைக் கோழிக்கறி என்று நானே கூறவில்லை. அதிலும் குறிப்பாக இது தமிழரின் கோழிக்கறி என்று நானே வலியச் சென்று எவரிடமும் சொல்லவில்லை.

ஒரு பழைய திரைப்படம் ஒன்றில் எழுத்தாளன் என்று பொய்சொல்லி மனைவியை ஒரு நடிகர் ஏமாற்றுவார். அவருக்கு பாராட்டு விழா நடப்பதாக கூறிச் செல்வார். அந்த பாராட்டு விழாவுக்கு வரவிரும்பிய மனைவியையும் வரவேண்டாம் என்பார்.

மனைவியை வரவேண்டாம் என்று சொன்னதற்கு காரணமாக எக்கச்சக்கமான கூட்டம் வரும் அதில்சிக்கி திண்டாடுவாய் என்றார். ஆனால் உண்மையான காரணம் தன் குட்டு வெளிப்படாமல் இருப்பதற்கே அப்படிச் சொன்னார். இப்போது எனக்கொரு சந்தேகம் மாடசாமி அண்ணாச்சிக்கு வரும் அதே சந்தேகம்தான் எனக்கும் வருகிறது. எல்லாம் பழக்கத்தால் வந்ததுதான்.

தொற்றுநோய்போல் அவருக்கு வந்த சந்தேகம் எனக்கும் வந்துவிட்டது. சரி, இன்னும் உங்கள் பொறுமையை நான் சோதிக்கவில்லை சந்தேகத்தை சொல்லிவிடுகிறேன். ஒரு எழுத்தாளனை பாராட்டும்போது அவரது துணைவியாரையும் பாராட்டுக் குழுவினர் எப்படி அழைக்காமல் விட்டார்கள்.

அதைக்கூட விட்டுவிடலாம். அவரே பெரிய எழுத்தாளர். அவருக்கு பாராட்டுவிழா நடக்கும்போது தன்னையும் ஏன் அழைக்கவில்லை என்று அவரின் மனைவி கணவனை ஏன் கேட்கவில்லை. ஒரு எழுத்தாளருக்கு பாராட்டு விழா நடக்கும் மனைவி மக்கள் மற்றும் சுற்றமும் நட்பும் புடைசூழ இருந்தால்தானே களைகட்டும்.

இந்த சந்தேகம்தான் எனக்கும் எழுந்தது. இப்படத்தின் இயக்குனரோ மிகவும் புகழ் மிக்கவர். அப்படியிருக்க இதில் எப்படி கோட்டைவிட்டார். இப்போதுதான் நாம் நமது நமது மதிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும். அதுதான் யானைக்கும் அடி சறுக்கும் என்பது. இப்படிப்பட்ட சொலவடைகளை தக்க சமயத்தில் பயன்படுத்த தவறினால் அத்தகைய பழமொழிகளின் பயன்தான் என்ன?

கடிவாளமிருந்தும் மனக்குதிரை எங்கோ ஓடிவிட திரும்பவும் கடிவாளத்தைப் பிடித்து அழைத்து வந்து விட்டேன். பாராட்டுவிழா என்று பொய் சொல்லி மனைவியையும் வராது தடுத்து விட்டதால் எந்தவித பதட்டமுமின்றி பூக்கடையில் ஒரு மாலையும் மலர்க்கொத்தையும் வாங்கினார்.

வரும்வழியில் மாலையிலுள்ள பூக்களின் இதழ்களை சிலவற்றை தலைமேல் போட்டுக் கொண்டு வீட்டுக்கு வந்தார். ஆனால் மனைவியோ கணவன் பாராட்டப் படுவதை கண்குளிர கண்டு மகிழவேண்டும் என்று தோழியுடன் வந்திருந்தார். தோழியிடம் அவமானப் பட்டு கடுங்கோபத்துடன் எழுத்தாளரின் வருகைக்கு வீட்டில் காத்திருந்தாள். அதன்பின் நடப்பதை வெள்ளித்திரையில் காண்க என்று என்னால் சொல்லமுடியாது.

கதையை சொல்லவேண்டாம் படத்தின் பெயரையாவது சொல்லலாம் என்று நீங்கள் கேட்கலாம். பழைய படம் என்பதால் நீங்கள் பார்ப்பீர்களா இல்லையா என்பது எனக்குத் தெரியாது. அதைவிட முதல் காரணம் அந்த படத்தின் பெயரைச் சொன்னால் ஹி…ஹி….ஈ…ஈ…நீங்கள் என் வயதைக் கண்டு பிடித்து விடுவீர்கள்.

நான் பிறந்த நாளைக்கூட யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் என் நண்பர்கள் எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி விடுவார்கள். நான் இப்போது வயது சொல்லா வாலிபர் சங்கத்தில் சேர்ந்து விட்டேன். அந்த சங்கத்தில் ஒருவர் தான் இளமையாக இருப்பதாக சொல்வார். எப்போதும் அவரை பத்து வயது குறைந்தவராகவே மதிப்பிடுவதாகவும் சொல்லிக் கொண்டியிருப்பார்.

Screenshot

நான் அந்த சங்கத்தில் அங்கத்தவர் என்றாலும் அவரிடம் விவாதம் செய்வேன். நான் அவரிடம் இளமையாக இருக்க வேண்டுமானால் சத்தான உணவை உண்ண வேண்டும் நன்றாக நித்திரை கொள்ள வேண்டும் எந்த கவலையும் நோய் நொடியின்றியும் இருக்க வேண்டும் என்பேன்.
அத்துடன் பணப்பிரச்சனை எதுவுமின்றி ஓரளவு வசதியுடன் இருக்க வேண்டும் என்பேன்.

ஆனாலும் அவர் நான் சொல்வதை ஏற்கமாட்டார். அவரிடம் ஒன்றை நான் சொன்னதும் கீழே விழுந்தாலும் மீசையிலே மண் ஒட்டாத கதையாக அரை மனதுடன் சம்மதித்தார். பணப்பிரச்சனையால் சரியான சத்துள்ள உணவின்றி வறுமையில் வாடுபவர்களிடம் இளமையை எதிர்பார்க்க முடியாது என்றேன்.

அப்போதும் அவர் மறுப்பு சொன்னார். அதன்பின் பொருளாதார நெருக்கடியில் மிகவும் பின் தங்கிய நாட்டின் பெயரைச் சொல்லி அந்த நாட்டைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? என்றேன். ஆம் என்றார். அந்த நாட்டின் வறுமை பற்றி தெரியுமா என்றேன். ஆம், உலகறிந்த விடயம் என்றார். இருபத்தியைந்து வயதில் ஒரு ஆண்மகன் எப்படியிருப்பான்? என்றேன்.

தெரியும், சொல்லுங்கள் என்றார். அந்த நாட்டில் இருபத்தியைந்து வயதுடைய ஆண்மகனைப் பார்த்தால் பதினைந்து வயது போல் பத்து வயது குறைந்நு தெரிவான். அவனை இளமையாக இருக்கிறான் வயதே தெரியவில்லை என்று சொல்வீர்களா? என்று கேட்டேன். அமைதியானார்.

திரும்பவும் எழுத்தாளர் கதைக்கு வருவோம். அவரே தன்னைப் பாராட்டிக் கொண்டதைப்
போல் நானே கோழிக்கறியைப் பாராட்டவில்லை. இந்த கறியை கப்பலில் கொடுத்த மதிய உணவில் வைத்திருந்ததோடு அவர்களே கறியைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார்கள்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடென்றான் பாரதி. இன்று புலம் பெயர்ந்த தமிழர்கள் திரவியம் மட்டும் தேடவில்லை வாழ்வியல் முறையையும் கடத்தியுள்ளார்கள்.
உணவிலும் பாலமாக அமைந்து இலங்கை கோழிக்கறியையும் கடத்தியுள்ளார்கள் என்பதை மதிய உணவில் கண்டேன்.

மிகவும் பெருமிதம் அடைந்தேன். உணவுண்டு சிறுதுநேர ஓய்வுக்குப்பின் கப்பல் கடற்கரையை நோக்கிசெல்ல என் மனதில் மட்டும் தமிழரைப் பற்றிய எண்ணம் அலைபோல நகர்ந்து கொண்டிருந்தது.

-சங்கர சுப்பிரமணியன்.

(நிறைவுற்றது)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *