இலங்கை

உள்ளூராட்சித் தேர்தலில் அரசைத் தோற்கடிக்க புதிய கூட்டணிகள்!; மகிந்த தலைமையில் இன்னொரு கூட்டுக்கு தீவிர முயற்சி 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிலைப்படுத்தி பிரதான கட்சிகள் தங்களை பலப்படுத்தி வருவதுடன் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிப்பதற்கான கூட்டணிகளை உருவாக்குவதற்கும் தீர்மானித்துள்ளன.

ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் கட்சியின் முன்னாள் உறுப்பினர்களை இணைத்து பயணிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தலைமையில் உள்ளூராட்சி மன்ற வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் நாற்காலி சின்னத்தை வெளிக்கொணர்ந்து அதன் மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகி வருகிறது. அதன்படி, இந்த நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் பிரச்சாரத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்களும் ஈடுபட்டுள்ளதாக அவதானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவால் இணைக்க வேண்டாமென என்று முடிவு செய்துள்ளவர்கள் மீது அவர்கள் குறிப்பாக கவனம் செலுத்தியுள்ளனர். அதன்படி, கடந்த வாரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவர்கள், பொதுஜன பெரமுன நிராகரித்த நிமல் லான்சா போன்றவர்களுடன் ஒரு சிறப்புக் கலந்துரையாடலை நடத்த நடவடிக்கை எடுத்தனர்.

இதில் திலித் ஜயவீரவின் சர்வஜன பலயவை பிரதிநிதித்துவப்படுத்தும் சன்ன ஜயசுமன மற்றும் பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி பயத்தில் பொதுத் தேர்தலில் கூட போட்டியிடாத பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் ஒரு அரசியல் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். கடந்த வாரம் பொன்சேகா தனது வீட்டில் ஒரு அரசியல் கலந்துரையாடலை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிமல் லான்சா, அனுர பிரியதர்சன யாப்பா, ரவி கருணாநாயக்க, அகிலவிராஜ் காரியவசம் மற்றும் எரான் விக்ரமரத்ன போன்ற எதிர்க்கட்சி பிரதிநிதிகள் அடங்கிய ஒரு பெரிய குழுவை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தக் கலந்துரையாடலின் போது, ஊழலுக்கு எதிரான ஒரு பரந்த கூட்டணி கட்டமைக்கப்பட வேண்டும் என்று சரத் பொன்சேகா வலியுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *