சொல்லித்தான் ஆகவேண்டும்!… அரசியல் பத்தித்தொடர்… 33 … தம்பியப்பா கோபாலகிருஷ்ணன்.

அரசியல் வியாபாரக்கூடையில் காலாவதியாகிப்போன பட்சணங்கள். புதிய ‘மொறு மொறு பலகாரங்களை’ச் சுட்டிறக்கப்போவதாகச் ‘சோக்’ க்காட்டும்
‘போலி’த் தமிழ்த் தேசியக் கட்சிகள்.
புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரப்போவதாகக் கூறும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதனை மூன்று வருடங்களின் பின்னரே செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதாவது அரசாங்கம் அதில் அவசரம் காட்டவில்லை.
ஆனால், தமிழ்த் தேசியக் கட்சிகளோ தமிழ் மக்களிடம் காட்டுவதற்கு தமது தட்டில் ஒன்றுமே இல்லையென்பதால் புதிய அரசியலமைப்புப் பற்றிப் பேசத் தொடங்கியுள்ளன. இது உண்மையிலேயே தமிழ் மக்களின் காதில் தமிழ்த் தேசியக் கட்சிகளே பூச்சுற்றுகிற விளையாட்டு.
முன்பு தமிழ் மக்கள் பேரவை முன்வைத்த முன்மொழிவுகளின் அடிப்படையில் யோசனைகளை முன்வைக்கப் போவதாக முந்திரிக்கொட்டை அறிவிப்பைச் செய்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இது பற்றி தமிழரசுக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் (ரெலோ) பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனையும் தனித்தனியே சந்தித்துப் பேசிச் ‘சோக்’ காட்டினார்.
இலங்கை தமிழரசுக் கட்சியோ புதிய அரசியலமைப்புக்கான தமிழ் மக்களின் யோசனைகள் குறித்து ஏனைய தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் கலந்துரையாடுவதற்கும் பின்னர் அரசாங்கத்திடம் முன்மொழிவுகளை முன் வைப்பதற்குமென ஏழு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது.
இப்போது என்னவென்றால் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவஞானம் அவர்களோ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமது கட்சிக்கு முறையாக அழைப்பு விடுத்தால் அதுபற்றி கட்சி பரிசீலிக்கும் என விடுத்துள்ள அறிவிப்பு வேறு.
இவை எல்லாவற்றையும் பார்க்கும் போது இவர்களெல்லாம் எந்த உலகத்தில் இருந்துகொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்கள் என்று புரியவில்லை.
சரி பிழைகளுக்கு அப்பால் தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் இராணுவ அழுத்தத்தின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருபத்திரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்தபோதும் இத்தலைவர்கள் எனப்படுவோர் எதனைச் சாதித்தார்கள்? ஒன்றுமேயில்லை.
குறைந்தபட்சம் போரின் இறுதி கட்டத்திலாவது அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கேனும் போர் நிறுத்தத்தையாவது இவர்களால் ஏற்படுத்த முடிந்ததா? இல்லை.
இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தம்-முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா கொணர்ந்த அரசியல் தீர்வுப் பொதி- ஒஸ்லோ உடன்படிக்கை என வந்த அருமையான சந்தர்ப்பங்களையெல்லாம் தூக்கி எறிந்த தமிழர்களுடைய அரசியல் தரப்பு இப்போது உத்தேச புதிய அரசியல் அமைப்பின் ஊடாக ஒற்றை ஆட்சியை நீக்கி ‘சமஷ்டி’யைக் கொணரப்போவதாகப் படம் காட்டுவதை என்னவென்று அழைப்பது?
எத்தனை காலம்தான் தமிழ் மக்களை இவர்கள் ஏமாற்றுவார்களோ தெரியாது. இலங்கைத் தமிழ் மக்களின் நேச சக்தியாக விளங்கக்கூடிய ஒரே அயல் நாடான இந்தியாவோ அல்லது உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவோ அல்லது ஐ.நா. அமைப்போ இதுவரை எந்தக் கட்டத்திலுமே இந்திய-இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் விளைவான 13 ஆவது திருத்தத்தைத் தவிர வேறு எந்த வகையான தீர்வைப் பற்றியும் பிரஸ்தாபித்தது கிடையாது. இந்த யதார்த்தத்தைக் கடந்து இலங்கைத் தமிழர்களின் அரசியல் தரப்பானது பதிமூன்றாவது திருத்தத்திற்கு மேலதிகமாக எதனையும் கோருவது, கோருவது நியாயமானதாக இருந்தாலும் கூட அது நடைமுறைச் சாத்தியமாகாது. அவ்வாறான கோரிக்கைகள் எப்போதும் ‘ஏட்டுச் சுரக்காய்’ யாகவே இருக்கும்.
எனவே இலங்கைத் தமிழர்கள் இன்றைய தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்தியப் – பூகோள அரசியல் களநிலையில் ஏட்டுச் சுரக்காய் அரசியலைக் கைவிட்டு நடைமுறைச் சாத்தியமான அதிகாரப் பகிர்வு பொறிமுறையான 13 ஆவது திருத்தத்தின் ஊடான மாகாண சபை முறைமையினை வலுப்படுத்துவதற்கான அரசியல் செயல்பாடுகளைப் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே முடுக்கி விடுவதற்கான முன்னெடுப்புகளில் விரைந்து ஈடுபட வேண்டும்.
ஏனெனில், தற்போது பாராளுமன்றத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களோ அல்லது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காது பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளோ 13 ஆவது திருத்தத்தை முழுமையாகவும் முறையாகவும் அமுல் செய்வதற்கு முனைப்புக்காட்டப் போவதில்லை.
புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப் பிரச்சனைக்கான தீர்வு கிட்டும் என்ற எதிர்பார்ப்பு வெறுமனே கானல் நீர் ஆகும். தலைவர்கள் எனப்படுவோர் சரியான திசையில் செல்லவில்லையாயின் மக்கள் தாமாகவே அப்பொறுப்பைக் கையிலெடுக்கவேண்டும். தமிழர்களுடைய அரசியலிலும் ஒரு ‘முறைமை மாற்றம்’ தேவை.